பிஎம் கேர்ஸ் நிதி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 27, 2020

பிஎம் கேர்ஸ் நிதி


கரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலாக மாறியதைத் தொடர்ந்து மத்திய அரசு, பிஎம் கேர்ஸ் என்ற தனி நிதிய மைப்பை-புதிய பேரிடர் நிதிக் கணக்கைத் தொடங்கியது. இந்தக் கணக்கில் தொடர்ந்து பலரும் நிதியுதவி செலுத்தி வரும் நிலையில், அது இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் எனப்படும் சிஏஜி-யால் தணிக்கை செய்யப்படாது என்ற செய்தி வெளிவந்துள்ளது.


இது குறித்து சிஏஜி அலுவலகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், கூறுகையில்,


‘‘இந்த பிஎம் கேர்ஸ் என்ற தனியார் நிதியமைப்பில் தனி நபர் மற்றும் நிறுவனங்கள் நிதியுதவி செய்வதினால், அதைத் தணிக்கை செய்யும் உரிமை எங்களுக்கு இல்லை'' என்று கூறியுள்ளார்.


கடந்த மார்ச் 28 ஆம் தேதி, மத்திய அமைச்சரவை பிஎம் கேர்ஸ் என்ற தனியார் நிதியமைப்பை உருவாக்கியது. அதன் தலைவராக நரேந்திர மோடி நியமிக்கப்பட்டார். மூத்த அமைச்சர்கள் அதன் அறக்கட்டளையாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர்.


"அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் எங்களிடம் தணிக்கை செய்யச் சொல்லி கோரிக்கை வைக்காத நிலையில், எங்களால் அதை தணிக்கை செய்ய முடியாது" என்று தகவல் கூறுகிறார் அந்த சிஏஜி அதிகாரி.


அதே நேரத்தில் மத்திய அரசு தரப்பு, பிஎம் கேர்ஸ் என்ற தனியார் நிதி, “அறக்கட்டளை பிரதிநிதிகளால் நியமிக்கப்படும் தனியார் ஆடிட்டர்கள் மூலம் தணிக்கை செய்யப்படும்'' எனத் தெரிவித்துள்ளது.


கரோனா வைரஸ் பேருரு எடுத்ததைத் தொடர்ந்து பிரதமர் மோடி உள்ளிட்ட, மத்திய அரசைச் சேர்ந்த பலர், பிஎம் கேர்ஸ் என்ற தனியார் நிதியமைப்பிற்கு நிதியுதவி செய்ய வேண்டுமென்று கோரிக்கை வைத்து வரு கிறார்கள்.


பிஎம் கேர்ஸ் நிதி குறித்து தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்தாலும், எதிர்க்கட்சிகள், பேரிடர் காலங்களில் நிதியுதவி செய்வதற்கு ஏதுவாக பிரதமர் தேசிய பேரிடர் நிதி உள்ளது எனவும், எதற்குப் புதிய பெயரில் ஒரு கணக்குத் தொடங்கப்படுகிறது எனவும் கேள்வி எழுகின்றன.


அதேபோல மாநில பேரிடர் நிதியை பொருட்படுத் தாமல் பிஎம் கேர்ஸ் என்ற தனியார் அமைப்பிற்கு நிதியுதவி செய்வது பற்றியும் பல மாநில அரசுகள், மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பியுள்ளன.


பிஎம் கேர்ஸ் என்ற தனியார் நிதியமைப்பு தனி நபர்கள், பெரு நிறுவனங்கள், முக்கியப் புள்ளிகளிடமிருந்து வரியில்லா நிதியைப் பெறுகின்றது. பலரும் பல கோடி ரூபாய்க்குத் தங்கள் நிதியுதவியைச் செலுத்தியுள்ளார்கள்.


பிஎம் கேர்ஸ் என்ற தனியார் நிதி அமைப்பின் வரவு - செலவு அரசு ஆடிட்டரால் தணிக்கை செய்யப் படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், பிரதமர் தேசிய பேரிடர் நிதியும் தற்போது சிஏஜி-யால் தணிக்கை செய்யப்படுவதில்லை என்று தகவல் தெரிவிக் கப்படுகிறது.


நன்கொடை என்ற பெயரில் திரட்டப்படும் நிதியின் வரவு செலவுகளை அவர்களாக விருப்பத்தோடு வெளியிட்டால் அன்றி வேறு யாரும் ஒன்றுமே கேட்க முடியாது.


எதிலும் வெளிப்படைத் தன்மை பற்றி நீட்டி முழக்கப் படுகிறது.  நடைமுறையோ வேறு விதமாக இருக்கிறது. ஏனிந்த சந்தேகத்துக்குரிய நடைமுறை என்பது குறித்து மத்திய அரசிடமிருந்தோ, பிரதமரிடமிருந்தோ விளக்க மும் இல்லை.


பிரதமரும், மூத்த அமைச்சர்களும் அங்கம் வகிக்கும் ஓர் அமைப்பு அரசுக்குத் தொடர்பு இல்லாமல் இயங்குவது - எந்த வகையில் ஜனநாயகபூர்வமானது என்பது நிச்சயமாக நேர்மையான கேள்வியேயாகும்.


No comments:

Post a Comment