கரோனா தொற்றுக் காரணமாக மத்திய அரசு முதற் கட்டமாக மூன்று வார ஊரடங்கை அறிவித்தது. அதன் பின் மேலும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்தது. இன்றுமுதல் இயங்கும் தொழிற்கூடங்கள் குறித்து மத்திய அரசு ஒரு பட்டியலையும் வெளியிட்டது.
இரண்டொரு நாளில் தமிழ்நாடும் ஒரு பட்டியலை வெளியிட உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.
இதில் இரண்டுப் பிரச்சினைகள் பாக்கு வெட்டிக்கு இடையில் அவதிப்படுவது பொதுமக்களே!
கரோனா மட்டுப்படுத்தப்பட்டு விட்டது என்ற நிலை இன்னும் ஏற்படவில்லை. நாளும் எண்ணிக்கை ஏறுமுகமாகத்தான் இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் டாக்டர்கள் கூட தொற்றிலிருந்து தப்பிட முடியவில்லை என்பதுதான் நிதர்சனம்.
இந்த நிலையில் எந்தத் துணிச்சலில் ஊரடங்கைத் தளர்த்தப் போகிறார்கள் என்பது மிகவும் முக்கியமான கேள்வி. ஊரடங்கைத் தளர்த்தியதன் காரணமாக கரோனா தொற்று ஏறு முகமாக இருந்தால், மீண்டும் தளர்த்திய உத்தரவை விலக்கிக் கொள்வார்களா? ஊரடங்கு என்ற ஒன்று இருக்கும்போதே அதை அலட்சியப்படுத்தும் நிலையை நாடு கண்டு கொண்டுள்ளது.
இந்த நிலையில் தளர்த்தப்படுகிறது என்ற உத்தரவு அதிகாரப்பூர்வமாக அரசிடம் இருந்து வருமேயானால் கட்டுக்கடங்காத அளவுக்கு மக்கள் கூட்டத்தின் புழக்கம் ஏற்படாதா என்பதும் தவிர்க்கப்படவே முடியாத முக்கியமான கேள்வியே!
தளர்த்தப்படுவதற்கு உண்மையான காரணம் என்ன? மக்கள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். அன்றாடம் வேலைக்குச் சென்று, கொண்டு வரும் ரூபாயில்தான் உலை கொதிக்கும் என்ற நிலை இருக்கும்பொழுது, விதிகளைத் தளர்த்தாமல் என்ன செய்வது?
சிறு சிறு கடைகளை வைத்து வியாபாரம் செய்பவர்கள் தொடர்ந்து கடையை மூடினால், வருமானத்துக்கு வழி என்ன? தொழிலாளர்கள் வேலைக்குச் செல்லாவிட்டால் குடும்பம் நடத்துவது எப்படி என்ற கேள்விகள்தான்! ஊடரங்கைத் தளர்த்துவதன் பின்னணியில் இருப்பவை.
ஆக, ஒன்று மட்டும் தெளிவாகவே தெரிகிறது. ஊரடங்கு சட்டம் இருந்தால் உணவுக்கு வழி என்ன - அத்தியாவசியத் தேவைகளை எப்படி ஈடு செய்வது? என்பதுதான் முக்கிய கேள்வி.
அரசு - மக்களுக்கு இதில் உத்தரவாதம் தரவில்லை என்ற நிலையில் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு தவிர்க்க இயலாத நிலை உருவாவது இயற்கையே!
ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. எதிர்பாராத ஒரு நிலை, நெருக்கடி வெடித்தால் அந்தக் காலகட்டத்தில் மக்களைக் காப்பாற்றும் சக்தி அரசுக்கு இல்லையோ என்ற அய்யம் எழுகிறது.
இந்த நிலையை அரசு ஒப்புக்கொள்ளப் போவதில்லை. எப்படியோ பாரத்தை மக்கள் தலையில் போட்டுவிடுவது என்ற முடிவுக்கு அரசு வந்துவிட்டது என்றுதான் கருத வேண்டியுள்ளது.
கரோனா அச்சம் ஒருபுறம் - மக்களின் வாழ்வாதாரம் இன்னொரு புறம். இந்தப் பாக்கு வெட்டிக்குள் அரசு மாட்டிக் கொண்டு விட்டது என்று நினைக்கலாமா?
அதே நேரத்தில் ஒரு மாநில அரசின் நிதிநிலை என்ன? இந்த நிதியைக் கொண்டு இவ்வளவுப் பெரிய பேரிடரை எத்தனை நாளைக்குச் சுமக்க முடியும்? இதில் நியாயமாக உறுதியாக ஓடிவந்து உதவிக்கரம் நீட்டவேண்டிய மத்திய அரசு இதோபதேசங்கள் செய்து கொண்டு இருக்கிறது.
இரண்டு முறை இந்தியப் பிரதமர் தொலைக்காட்சி மூலம் மக்களிடம் பேசினார். என்ன திட்டங்களை மத்திய அரசு பொறுப்பில் அறிவிக்கப்பட்டன? மாநிலங்கள் கேட்ட நிதிக்கு ஏதாவது உத்தரவாதம் இருந்ததா பிரதமர் பேச்சில்?
மாறாக இதோபதேசங்கள் செய்ததுதான் மிச்சம்! பிரதமர் பதவி என்பது சாமியார் மடமல்ல ஆன்மிகச் சொற்பொழிவு நடத்துவதற்கு.
கைகளை அடிக்கடிக் கழுவுங்கள் (ஏனெனில் மக்களை அரசு கைகழுவிவிட்டது) நடமாட்டத்தைக் குறையுங்கள். ஒரு மீட்டர் சமூக இடவெளி முக்கியம் - இவையெல்லாம் ஒரு பிரதமர் சொல்லித்தான் தெரிந்து கொள்ள முடியும் என்ற நிலையில் மக்கள் இல்லை - ஏற்கெனவே பலமுறை இந்த அறிவுரைகள் கூறப்பட்டுத்தான் இருக்கின்றன.
இந்த நெருக்கடி காலத்தில் இந்திய அரசாங்கம் நிதியைத் தாராளமாக மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டும் என்பதுதான் நியாயமான எதிர்பார்ப்பு. ஆனால், இதில் எந்த அளவுக்கு மத்திய அரசு தன் கடமையைச் செய்கிறது?
கரோனாவுக்காக நிவாரண நிதி கொடுப்பது ஒருபுறம் இருக்கட்டும். தமிழ்நாட்டுக்குச் சட்டப்படி மத்திய அரசு, கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையைக் கொடுத்தாலே போதுமானது.
அதைத் துணிவாகக் கேட்டுப் பெறும் நிலையில் தமிழ்நாடு அரசும் இல்லை. இருதலைக் கொள்ளி எறும்பாக இருப்பது அரசா? வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொதுமக்களா?
No comments:
Post a Comment