நிதி ஒதுக்குவதில்கூட பி.ஜே.பி. மாநிலங்களுக்கு அதிகம் - மற்ற மாநிலங்களுக்குக் குறைவு ஏன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 24, 2020

நிதி ஒதுக்குவதில்கூட பி.ஜே.பி. மாநிலங்களுக்கு அதிகம் - மற்ற மாநிலங்களுக்குக் குறைவு ஏன்


கரோனா - பொருளாதார நெருக்கடி நிலைகளைச் சமாளிக்க எதிர்க்கட்சிகளையும் அரவணைக்கவேண்டாமா? நிதி ஒதுக்குவதில்கூட பி.ஜே.பி. மாநிலங்களுக்கு அதிகம் - மற்ற மாநிலங்களுக்குக் குறைவு ஏன்? வேண்டாம் இந்த வெறுப்பு அரசியல்! எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துகளையும் கேட்டு, தமிழக அரசு இந்தக் காலகட்டத்தில் செயல்படுவது முக்கியம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள்  அறிக்கை விடுத்துள்ளார்.


அறிக்கை வருமாறு:


நோய் ஒழிப்புக் கண்ணோட்டம்


ஒன்றுக்கு மட்டுமே முன்னுரிமை!


கரோனா தொற்று நாளும் பெருகிவரும் சோதனையான இந்தக் காலகட்டத் தில்கூட, அதனைத் தடுத்து மக்களைக் காப்பாற்றிடவேண்டிய அரிய தருணத்தில் ஒரே ஒரு பார்வை மட்டுமே, ஆளும் மத்திய - மாநில அரசுகளுக்கு இருக்க வேண்டும்.


ஒரு பெரிய போரை - அதுவும் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளோடு - பன்னாட்டு தொற்றுக் கிருமிகளோடு நடத்திடும் இந்த நேரத்தில், அனைவரையும் ஒருங்கிணைத்து - வேறு கட்சி, ஜாதி, மதம், மொழி, மாநிலங்கள் என்ற வேற்று மைக்கே இடமின்றி, நோய் ஒழிப்புக் கண்ணோட்டம் ஒன்றுக்கு மட்டுமே முன் னுரிமை தந்து, கரோனா ஒழிப்பை நோக்கிய அணுகுமுறை இருக்கவேண்டும்.


ஊரடங்கு, தனிமைப்படுத்திக் கொள்ளல்தான் இதில் முக்கிய பங்கு - இதுவரை இந்த நோய்க்குத் தனி மருந்தும் கண்டுபிடிக்காத நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, மக்கள் கடைப்பிடித்து ஒழுகுவதைத் தவிர, கரோனா மேலும் பரவாமல் தடுக்க வேறு வழியே இல்லை என்பது யதார்த்தமாகும்.


மாநில அரசுகளிடம் உள்ள தனித்தன்மை


இந்நிலையில், இந்தியா முழுவதும் செய்யும் வாய்ப்பு - மாநிலங்களுக்குத்தான் நேரடியாக மக்களைச் சந்திக்கும் - மக்களின் பிரதிநிதிகளாக உள்ள மாநில அரசுகளிடம் உள்ள தனித்தன்மையானதாகும்.


அதனால் மாநிலங்களுக்கு கரோனா ஒழிப்பு - தடுப்புக்கென நிதி ஒதுக்கீடு செய்யும்போது, மாற்றாந்தாய் மனப்பான்மையோ, ஓரவஞ்சனையோ மத்திய அரசின் பார்வையில்  - நடத்தையில் உள்ளது என்ற தோற்றம் ஏற்படுவதுகூட விரும்பத்தக்கது அல்ல! நிதி ஒதுக்கீடு போன்றவைகளிலும் மற்றும் பொதுநலப் பணிகளிலும் மாநில அரசும் அனைவரையும் - அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்து, ஓர் அணி,  ஒரே குரல் என்று இருந்தால் இப்பணிக்கு மேலும் வலு ஏற்பட்டு வலிமை சேர்க்கும்.


முதல்வரோ, அவரது கட்சியினரோ


ஏனோ புரிந்துகொள்ளவில்லை!


கெட்ட வாய்ப்பாக, தமிழக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடக்கத்திலிருந்தே சுட்டிக்காட்டிய எதையும் எடுத்துக் கொண்டு, எதிர்க்கட்சித் தலைவர்களின் யோசனைகளும், கருத்தாக்கங்களும், தனது அரசின் கரோனா நோய்த் தடுப்பு - ஒழிப்பிற்கு - இந்த இக்கட்டான நேரத்தில் கூடுதல் பலம் தந்து பொது உணர்வை ஏற்படுத்தப் பெரிதும் பயன்படக் கூடியவை என்பதை ஏனோ முதல்வரோ, அவரது கட்சியினரோ புரிந்துகொள்ளவில்லை.


நிதி ஒதுக்குவதில்கூட ஏனிந்த பாரபட்சம்?


மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு பட்டியலைப் பாரீர்:


(தொகை கோடியில்)


உத்தரப்பிரதேசம்  - 8255.19


பீகார் -  4631.93


மத்தியப் பிரதேசம் -  630.60


போன்ற மாநிலங்களுக்குத் தென்மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்.


தமிழ்நாடு - 1928.56


ஆந்திரா -  1892.64


தெலங்கானா  - 982.00


கருநாடகா  - 1678.57


கேரளா - 894.53


பா.ஜ.க. ஆட்சிகள் எங்கெங்கு நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம்


15 ஆவது நிதிக்குழுப் பரிந்துரையின் பேரில் நிதியமைச்சகம் விடுவித்துள்ளது.


தென் மாநிலங்கள் அனைத்திற்கும் சேர்த்து ஒதுக்கப்பட்டுள்ள ஒட்டுமொத்தத் தொகை 7376.3 கோடி.


உத்தரப்பிரதேசம் ஒரு மாநிலத்திற்கு மட்டும் ஒதுக்கப்பட்ட தொகை - 8255.19 ஆகும்.


ஏன் இந்தப் பாரபட்சம்?


ஆளுங்கட்சியாக பா.ஜ.க. இருக்கும் மாநிலங்களுக்குக் கூடுதல் தொகை - எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்குக் குறைவான தொகை.


இந்தப் போக்கைத் துணிவுடன் சுட்டிக்காட்ட அனைத்து (எதிர்க்)கட்சிகள் உள்பட  குரல் கொடுத்தால்தானே வலிமை கூடும் மாநில அரசுகளுக்கு.


அனைவரது ஒத்துழைப்பையும் பெற்று,


முடிவுகள் எடுப்பது மிகவும் அவசியம்!


நாளும் நோயாளிகளின் எண்ணிக்கை கூடும் நிலையில், ஊரடங்கு மேலும் தேவைப்படும் நிலையில் - அனைவரது ஒத்துழைப்பையும் பெற்று, முடிவுகள் எடுப்பது மிகவும் தேவையான ஒன்றல்லவா?


காங்கிரசின் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள் சுட்டிக்காட்டி யுள்ளதுபோல இந்த நேரத்திலும் மத்திய அரசின் பார்வை - வெறுப்பு அரசியல் பார்வை போக்காகவிருப்பது விரும்பத்தக்கதல்ல என்ற விமர்சனம் அலட்சியப்படுத்தக் கூடியதல்ல.


மத்திய - மாநில அரசுகளின் அணுகுமுறைகள் அரவணைப்பதாக இருக்கவேண்டும்!


பொருளாதார நெருக்கடி என்பது நாட்டையே - கரோனாவைவிட - கொடூரமாகச் சோதிக்க ‘‘விஸ்வரூபம்'' எடுக்க ஆயத்தமாகியுள்ள நேரத்தில் - மக்களை கரோனாவிலிருந்து பாதுகாக்க வேண்டாமா? வறுமை, ஏழ்மை, வேலையில்லாத் திண்டாட்டம் என்ற பெரும் இக்கட்டான நிலையில், அனைவரும் ஒருங்கிணைந்து, எல்லோரையும் ஒரே சம பார்வையோடு பார்த்து, அனைவரும் நோய் விரட்டலிலும், வறுமை ஒழிப்பிலும் ஓர் அங்கமாகி நிற்கும் வகையில், மத்திய - மாநில அரசுகளின் அணுகுமுறைகள் இருக்கவேண்டும்.


எதிலும் வெளிப்படைத்தன்மை (Transparency) இருப்பது அரசுகளுக்கு  - மக்களாட்சியில் மிகமிக முக்கியம்.


-கி.வீரமணி,தலைவர், திராவிடர் கழகம்


சென்னை-24.4.2020


No comments:

Post a Comment