ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 18, 2020

ஆசிரியர் விடையளிக்கிறார்


கேள்வி 1: கொரானா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்திற்குக் குறைந்த தொகையை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதே, இது குறித்து முதலமைச்சரோ, எம்பிக்களோ வாய் திறப்பார்களா? - க.ஏ.தமிழ் முரசு, இரா.கி.பேட்டை .


பதில்: அதுதான் வேதனையும் வெட்கமும் படவேண்டிய அரசியல் அவலம் ஆகும்! அத்துணைக் கட்சிகளையும் கூட்டி, பல கை ஓசை எழுப்பாமல், ஒரு கை ஓசை; அதுவும் ஏதோ பிச்சை கேட்பது போல் ஒரு வேண்டுகோள்! நம் உரிமைகளை அடகு வைத்த அரசியல் பிழை! அரசியல் சட்டப்படியான நம் மாநில உரிமைகளை இப்படியா "சர்வ பரித்தியாகம்" செய்வது! அவ்வளவு நடுக்கமா? கலக்கமா? ஏன்? மக்கள் அறிவார்கள். கொரோனா கொடூரத்தில் கூடவா இந்தக் கூத்து? ஆனால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேட்பார்கள்.


கேள்வி 2: சீனாவுக்குப் பக்கத்து நாடுகளான ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகளில் பரவாத கொரோனா அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதே! இது திட்டமிட்ட சீனாவின் செயல் என்ற செய்தி பரவி வருகிறதே! இது பற்றி தங்கள் கருத்து? - - பா.மணியம்மை, சென்னை .


பதில்: சீன நாட்டைக் குறை கூறுவதற்குக்கூட ஒரு பின்னணி உண்டு - அது ஒரு கம்யூனிச நாடு என்ற வெறுப்புப் பார்வைப் பின்னணி, இப்போது அதுவா முக்கியம்? நோய் எங்கிருந்து கிளம்பியது என்பதைவிட மனித குலத்தைக் காப்பாற்றுவது எப்படி என்பதுதானே இப்போதைய தேவை. அதுபோல நாடு, மதம், ஜாதி, அரசியல் பார்வைகளைத் தவிர்த்து மனிதநேய மானுடப் பார்வைதான் இப்போது தேவை; பரஸ்பர குற்றச்சாற்றுகள் அல்ல. 


கேள்வி 3: விளக்கேற்றுவோம் என்று பிரதமர் மோடி சொன்னதைக் கேட்டு தமிழ்நாட்டு மக்கள் சிலர் அப்படிச் செய்ததைச் சொல்லிக்காட்டி, இது தங்களின் வெற்றி என்று சங்பரிவார் கூட்டத்தினர் சமூக வலைதளங்களில் எழுதுகின்றார்களே? - - பா.மணியம்மை, சென்னை -


பதில்: அதென்ன பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். திட்டமா? அல்லது கொரோனா கொடூரத்திற்கு நிவாரண முயற்சிகளின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கமா? இவர்கள் பேசுவதிலிருந்து பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது!' விளக்கேற்றுவது கொரோனாவுக்கு அல்ல. பா.ஜ.க.வின் கொண்டாட்டத்துக்கு என்று! 


கேள்வி 4: "இந்திரன்கள் மாறினாலும், இந்திராணி மாறுவதில்லை” என்னும் சொலவடை, அரசாள்வோர் மாறினாலும், அரசு மாறுவதில்லை என்னும் தத்துவத் த தினை உட்பொருளாகக் கொண்டதா? - - - நா.ராசா, காவனூர்


பதில்: இந்தப் பழமொழியின் பொருள், தலைமையில் உள்ளவர்கள் மாறுவது போன்று தோன்றினாலும், அதனை ஆட்டிப் படைக்கும் அதிகார வர்க்கத்தின் பிடி அப்படியே தொடருகிறது என்பதுதான். பார்ப்பனரல்லாத தலைமை வந்தாலும், அய்.ஏ.எஸ்., அய்.எப்.எஸ்., அய்.பி.எஸ். என்று பார்ப்பனக் கூட்டமே ஆதிக்கம் செலுத்துவது போன்ற நிலைக்கு இப்போதும் பொருந்தும். இன்றைய உண்மைப் பொருள் இதுவே! 


கேள்வி 5: மனு தர்மத்தைக் கடைபிடிக்கும் பிராமணர்களின் மனைவிகள் தனது கணவன் இறந்து விட்டால் தற்போது வெளியில் வரும்போதும், அவரவர் வீட்டில் இருக்கும் போதும் பொட்டோடும், பூவோடும் காட்சி அளிக்கிறார்களே? இது சரியா? இது மனு தர்மா? - - முனைவர் தகு. திவாகரன்


பதில்: மனுதர்மப்படி தவறுதான்! ஏனென்றால், எல்லா வர்ணம், ஜாதிக்கும் மிகமிகக் கீழான நிலையில், அடுக்கில் தானே பெண்களைக் கூறியுள்ளது மனு. தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம் அவர்களைக் காப்பாற்றி மீட்டெடுத்துள்ளது அவளது பற்றி நமக்கு மகிழ்ச்சியே!


கேள்வி 6: திராவிடச் சித்தாந்தத்தில் ஊறித் திளைத்த மானமிகு வைகோ அவர்கள் சித்திரை முதல் நாளை தமிழ் வருடப் பிறப்பாகக் கருதி மக்களுக்கு வாழ்த்துக் கூறியது சரியா? | - - இல. சீதாபதி, தாம்பரம்.


பதில்: சரியல்ல; அய்யா - அண்ணாவை முன்னிலைப்படுத்தும் வைகோ இப்படி சறுக்கி இருக்கக்கூடாது என்பதே நமது சகோதரப் பாசத்துடன் கூடியச் சுட்டிக்காட்டல்! நீரடித்து நீர் விலகாது - மறவாதீர்!


 கேள்வி 7: எனது பணியில் அலுவல் காரணமாக ஏதாவது ஒரு கிளையை ஆய்வு செய்து விட்டு வீட்டுக்கு திரும்பும்போதே இன்றைக்கு இதுபோதும் என மனது மன்றாடுகிறது. 40-க்கும் மேற்பட்ட பல்வேறுபட்ட நிறுவனங்களின் மேலாண்மை, உலகம் முழுவதும் பல லட்சம் கொள்கை குடும்பங்களின் கலந்துறவாடல், பேச்சுப் பணி, எழுத்துப்பணி, வாசிப்பு, சேகரிப்பு என சோர்வே இல்லாமல் தினமும் பயணிக்கிறீர்களே எப்படி? - - - குடந்தை க.குருசாமி, கும்பகோணம்


பதில்: எந்தப் பணியை நாம் மேற்கொண்டாலும் அதில் உள்ள உறுதிப்பாடு, ஈடுபாடு, மகிழ்ச்சி ஈட்டல் - இவைதான் உண்மையான நிலை. அனைத்திலும் தனி மனித முயற்சி மட்டும் இல்லை - கூட்டு முயற்சி - அறிஞர்களின் வழிகாட்டல்; - தோழர்களின் ஒத்துழைப்பும்கூட!


கேள்வி 8: முதல்வர் தலைமையில் அமைச்சர்கள், துறை அதிகாரிகள் என 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொள்ளும் அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம், தனது கட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் புடைசூழ நிவாரணப் பொருள்களை அமைச்சர்கள் வழங்கும் செய்திகள் புகைப்படத்துடன் அச்சு, காட்சி ஊடகங்களில் தினசரி வெளிவரும் நிலையில் 15 பேர் மட்டும் என்ற எண்ணிக்கையில் கூடும் வகையில் திமுக நடத்தவிருந்த கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்திருப்பது குறித்து? - - - மன்னை சித்து, மன்னார்குடி -


பதில்: இன்றைய முதல்வரின் தவறான ஆலோசகர்கள், அவரைச் சரியான வழியில் நடக்க விட மாட்டார்கள் போலிருக்கிறது! உயர்நீதிமன்றத்தில் வாங்கிய 'குட்டு' போன்ற தீர்ப்புக்குப் பிறகாவது அரசியல் வன்மம் - காழ்ப்பு - அதுவும் கொரோனா கொடூரப் பேரிடர் நேரத்தில் தேவையே இல்லை! மக்களிடம் தான் இறுதியில் செல்ல வேண்டும் - மறக்கக் கூடாது அவர்! 


கேள்வி 9: ஊரக, உள்ளாட்சி அமைப்புகளில், பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு அளித்துச் சட்டம் இயற்றிப் பல ஆண்டுகள் ஆகியும், அவர்கள் தங்களைத் தயார் படுத்திக் கொள்ளாததால், தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தப் பெண்ணும் சுயமாகச் செயல்பட முடியாமல் அவர்களது குடும்பத்து ஆண்கள்தான் அந்தப் பதவியில் இருப்பது போல் ஆளுமை செய்கின்றனரே?- மன்னை சித்து, மன்னார்குடி


பதில்: எல்லா வெற்றிகரமான பெண்களுக்கும் 'பின்னால்' ஆண்கள் உண்டு என்பதை 'முன்னால்' என்று மாற்றி விட்டது கொடுமையோ கொடுமை, போகப்போக மாறும். மாறித் தீர வேண்டும்!


கேள்வி 10: தந்தை பெரியார் காலத்திலிருந்த திராவிடர் இயக்கத் தலைவர்களில் பெரும்பாலானோர் தனி இதழ்கள் நடத்தியது போல், திரைப்படங்களுக்கு வசனம் எழுதியது போல், தங்களுக்குத் திறமை, ஆற்றல் அனைத்தும் இருந்தும், தாங்கள் செய்யவில்லையே! தந்தை பெரியார் மீது கொண்ட உண்மையான பற்று தான் இதற்குக் காரணமா? - - - இரா.நீலகண்டன், பேராவூரணி


பதில்: எனக்கு வினா தெரிந்த காலம் முதல்' ஒரே தலைமை, ஒரே கொள்கை, ஒரே இயக்கம் என்பது போல, 'ஒரே பாதை - மெயின் ரூட்' தந்தை பெரியாரின் ஈரோட்டுப் பாதை மட்டுமே! மற்ற பக்கம் திரும்பவே நேரமும், தேவையும் இல்லை. அதுதான் அந்த "ரகசியம்"!


No comments:

Post a Comment