சென்னை நியூ ஹோம் மருத்துவமனை - பிரபல நரம்பியல் டாக்டர் சைமன் ஹெர்குலிஸ் கரோனா தொற்று நோயால் | மரணம் அடைந்தார். அவர் உடல் அடக்கத்தின் போது அவருக்கு இழைக்கப்பட்ட அவமானம்- அதன் நிலை குறித்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேற்று (2.14.2020) அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். நல்ல பண்பாடும், ஏழை மக்களிடத்தில் கருணையும் உடைய டாக்டர் என்று பெயரெடுத்தவர்.
ஒரு டாக்டரையே கரோனாவிலிருந்து காப்பாற்ற முடியவில்லை என்கிறபோது மக்கள் மத்தியில் கொஞ்சம் பீதி ஏற்படவும் கூடும். இந்த மரணத்தைவிட இன்னொரு கொடுமை நடந்திருக்கிறது. அதனை நினைத்தால் மனிதாபிமானம் என்ற ஒன்றும் செத்துவிட்டதா? அது நாட்டில் இருக்கிறதா? என்ற கேள்விதான் எழுகிறது. ஒரு பக்கத்தில் துக்கமும், மறுபக்கத்தில் வெட்கமும்பட வேண்டிய பேரவலமாகும் இது. இறந்த மருத்துவரின் உடல் சென்னைக் கீழ்ப்பாக்கம் கல்லறையில் நள்ளிரவில் அடக்கம் செய்ய எடுத்துச் செல்லப்பட்ட போது, அந்தப் பகுதியில் குடியிருக்கும் மக்கள் எதிர்ப்பைத் தெரிவித்ததோடு கற்களை வீசியுள்ளனர்.
மரணித்த டாக்டரின் உடல் மீதெல்லாம் அந்தக் கற்கள் வீசப்பட்டன என்று நினைக்கும்பொழுது நெஞ்சமெல்லாம் துணுக்குறுகிறது. உடலின் ஒவ்வொரு அணுவும் கூனிக் குறுகுகிறது! சில நாள்களுக்கு முன் ஆந்திராவைச் சேர்ந்த டாக்டர் ஒருவரின் உடல் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் கடும் எதிர்ப்பால் உடல் திரும்ப எடுத்துச் செல்லப்பட்டது. இதற்குப் பிறகாவது மாநில அரசு நிர்வாகம் இதற்கொரு முடிவைக் கண்டிருக்க வேண்டாமா? அதனால்தான் உயர்நீதிமன்றம் தன்னிச்சையாக வழக்கை எடுத்துக் கொண்டு அரசுக்கு தாக்கீது கொடுத்துள்ளது.
தங்கள் உயிரை அர்ப்பணித்து கரோனா நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றப் பாடுபடும் டாக்டர்கள் - அந்தக் காரணத்துக்காகவே தங்கள் இன்னுயிரை பறிலி கொடுத்த நிலையில், அவர்களின் உடலைக்கூட மரியாதையான முறையில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டாமா? இந்த நிலை நீடித்தால் டாக்டர்கள் மத்தியில் எந்த மாதிரியான எண்ணம் ஏற்படும்? சிறுநீரகத் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஓய்வு பெற்றடாக்டர் அமலோற்பவநாதன் குறிப்பிடுவது போல டாக்டர்களுக்கே விரக்தி மனப்பான்மை ஏற்படாதா? அவர்களின் பணியில் ஆர்வம் குறையாதா? உயிர் காக்கும் பணியில் உயிரை மாய்த்துக் கொண்ட டாக்டர் அவமதிக்கப்பட்டதற்குக் காரணம் என்ன? மக்களுக்கு மனிதாபிமானம் இல்லை என்ற ஒற்றை வரியில் கடந்து செல்ல முடியுமா? இதன் பின்னணியில் அச்சமும், அறியாமையும் பின்னிப் பிணைந்திடவில்லையா? மக்கள் மத்தியில் நிலவும் அறியாமையும் முக்கிய காரணமே! இறந்த உடலால் நோய்த் தொற்றாது. எரிப்பு அல்லது எட்டடி ஆழத்தில் புதைக்கப்பட்ட பிறகு நோய்த் தொற்று என்பது அறவே கிடையாது என்ற அறிவியலை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்யும் கடமையை மாநில அரசு செய்திருக்க வேண்டும் அல்லவா? கரோனாவைப் பற்றி அரசு செலவில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றனவே.
அந்த விளம்பரத்தோடு கூடுதலாக ஒரே ஒரு வரியையும் சேர்த்து இந்த வகையில் மக்களுக்கு | விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தால் வெட்கித் தலை குனியும் இந்த அவலம், விபரீதம் அரங்கேறியிருக்குமா? உலகெங்கும் கரோனா என்னும் கொடூரனின் கோரப் பசிக்கு இரையானவர்களின் உடல்கள் எரிக்கப்படவில்லையா - புதைக்கப்படவில்லையா? வேறு எந்த நாட்டில் மரணித்த உடலுக்கு அவமதிப்பு அநாகரிகமாக இப்படி நடைபெற்ற இருக்கிறது? மக்களுக்குப்பக்தியை ஊட்டிய அளவுக்கு, மனிதாபிமானம் ஊட்டப்பட்டுள்ளதா? சடங்குகளைச் சொல்லிக் கொடுத்த அளவுக்கு பொது அறிவு வெளிச்சத்துக்கு மக்களின் புத்தி நடமாட விடப்பட்டதா? செத்துப்போன பிறகு ஆன்மா சாந்தியடையட்டும் என்று பிரார்த்தனைக்கு மட்டும் குறைச்சல் இல்லை.
இறந்த மனிதனுக்குக் காட்டவேண்டிய குறைந்தபட்ச மரியாதை செலுத்தும் சராசரி அறிவு புகட்டப்படவில்லையே! டாக்டர் சைமன் ஹெர்குலிஸ் அவமதிக்கப்பட்டதற்கு பாமர மக்கள் மீது பழி சுமத்துவதைவிட, அவர்களின் அறியாமையைப் போக்கும் வகையில், உரிய வகையில் பிரச்சாரத்தை, விளக்கத்தை மாநில அரசு செய்யத் தவறிவிட்டது என்பதுதான் உண்மை . டாக்டர் சைமன் ஹெர்குலிஸ் அவர்களுக்கு ஏற்படுத்தப் பட்ட அவமரியாதையும், அநாகரிகச் செயலும்தான் கடைசி யாக இருக்கவேண்டும். இல்லையென்றால் இந்தியாவின் மானம் கப்பல் ஏறிவிடும்!
No comments:
Post a Comment