மனிதாபிமானம், தொண்டு, பண்பால் உயர்ந்த வெள்ளுடை வேந்தரின் பிறந்த நாள் இந்நாள்!
யானையைப் பார்த்த அய்வரைப் போன்ற இன்றைய வசவாளர்கள் வெள்ளுடை வேந்தரின் பொதுவாழ்வைப் பின்பற்றட்டும்!
மனிதாபிமானம், தொண்டு, பண்பால் உயர்ந்த வெள்ளுடை வேந்தரின் பிறந்த நாள் இந்நாள்! யானையைப் பார்த்த அய்வரைப் போன்ற இன்றைய வசவாளர்கள் வெள்ளுடை வேந்தரின் பொதுவாழ்வைப் பின்பற்றட்டும் என்று தியாகராயரின் பிறந்த சிந்தனைகளாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
வெள்ளுடை வேந்தர் சர் பிட்டி தியாகராயரின்
169 ஆம் ஆண்டு பிறந்த நாள்
இன்று (27.4.2020) திராவிடர் இயக்கத் தினைத் தோற்றுவித்த ஒப்பற்ற பெருந்தகை சர் பிட்டி தியாகராயர் அவர்களது 169 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா.
நன்றி உணர்வுள்ள அத்துணை திராவி டர்களும் (பார்ப்பனரல்லாதாரும்) கொண் டாடி மகிழவேண்டிய நாள், இது!
ஆண்டுதோறும் சென்னை மாநகராட் சிக் கட்டடத்தின் முன் பகுதியில் கம்பீரமாகக் காட்சி அளிக்கும் வெள்ளுடை வேந்தர் சர் பிட்டி தியாகராயர் சிலைக்கு மாலை அணிவித்து மகிழும் வாய்ப்பு, கரோனா கொடிய தொற்று காரணமாக இயலவில்லை; என்றாலும், உலகம் முழுவதிலும் உள்ள, தியாகராயர் - நாயர் - நடேசனார் - தந்தை பெரியார் போன்ற மூத்த முன்னோடித் தலைவர்களால் இன்று கல்வியும், உத்தி யோக வாழ்வும் பெற்று, வாழ்க்கையில் தமது தன்மானத்தையும், இனமானத்தையும் உணர்ந்து நடக்கும் திராவிடர்கள் அத் துணை பேரும், தியாகராயர் பெருமானின் திருத்தொண்டை எப்படி மறக்க முடியும்?
‘‘கழுவாய்'' தேடவே நாளும் உழைக்கிறேன் என்றார் தந்தை பெரியார்
வெள்ளை உடை மட்டுமல்ல, அவருக்கு வெள்ளை மனம் - மனிதநேயம் பூத்துக் குலுங்கிய, எதிர்கொள்கையினரையும் காத்து, ஈர்க்கின்ற எடுத்துக்காட்டான தலைவர் அவர்.
அன்று காங்கிரசில் இருந்த பலர், தந்தை பெரியார் அவர்களை நீதிக்கட்சிக்கு - திராவிடர் இயக்கத்திற்கு - எதிராகக் களத்தில் நிற்க வைத்தபோதும், சமூகநீதி என்ற அக் கட்சியின் ‘சரக்கைத்தான்' (கொள்கையைத் தான்) வேறு ஒரு புது லேபிள் ஒட்டி - ‘சென்னை மாகாணச் சங்கம்' என்று கூறி, எதிர்க்கடை ஒன்றை வைத்தும், இரண்டு ஆண்டுகளுக்குமேல் நடத்த இயலவில்லை, மூடிவிட்டனர்; இதை அக்காலத்தில் காங் கிரசைத் தீவிரமாக ஆதரித்து தமிழ்நாட்டில் வளர்த்த திரு.வி.க. அவர்களே தமது வாழ்க்கைக் குறிப்பில் எழுதியுள்ளார்.
பின்னாளில், அதற்குக் ‘‘கழுவாய்'' தேடவே, நாளும் உழைக்கிறேன் என்றார் தந்தை பெரியார்!
அறிவு வள்ளல், கல்வி வள்ளல் தியாகராயர்பற்றி எதிர் மேடையில் நின்ற திரு.வி.க. என்ன எழுதினார் என்பதை இன்றைய இளைய தலைமுறை அறிந்து கொண்டால், திராவிடர் இயக்கத் தலை வர்கள் எப்படிப்பட்ட மானுட நேயர்கள் - மனிதத்தை மதித்த மகத்தான பண் பாளர்கள் என்பதை அறிய முடியும். அதிலும், குறிப்பாக திராவிடர் இயக்கத்தின் தோற்றுநர் தியாகராயர் எப்படிப்பட்டவர் என்பதைப்பற்றி திரு.வி.க. எழுதுவதைப் படியுங்கள்:
‘‘....தியாகராய செட்டியாருடன் என்னை ஆற்றுப்படுத்தியவர் டாக்டர் நடேச முதலியார். செட்டியாரின் அரசியல் கொள்கை என்னை விழுங்கவில்லை; அவரது குணம் என்னை விழுங்கியது. அவர் எனக்கு குணமலையாக விளங்கி னார். எனவே, என்னைக் காந்தமென இழுக்கும் செட்டியார் பேச்சு வேடிக்கையாக இருக்கும்; விளையாட்டாக இருக்கும். அதில் அதிக நகைச்சுவை மலியும். அவர் மொழி கேட்க என் செவி விரையும்.
வரி உயர்வைக் குறித்து நகர கன வான்கள் நடைமுறையை மறுத்ததற்கென்று சென்னை அய்க்கோர்ட் கடற்கரையில் ஒரு பொதுக்கூட்டம் கூடியது. அக்கூட்டத்தில் யானும் பேசினேன். பேச்சில், நகர சபையில் தியாகராயச் செட்டியார் தலைமையிலே நற்பயன் விளையவில்லையென்றும், அவர் கும்பலே அச்சபையில் அதிகமென்றும், அதைக் காங்கிரஸ் மயமாக்குதல் வேண்டு மென்றும் குறிப்பிட்டு, ஜஸ்டீஸ் கட்சியைத் தாக்கினேன்,
இரண்டொரு நாள் கழித்து யான் பிராட்வே வழியே நடந்து சென்றேன். தியாகராயச் செட்டியார் மோட்டார் வண்டி, அவ்வழியே வந்தது. வண்டி நின்றது. தியாகராயர் என்னைப் பார்த்தார். யான் அவரைப் பார்த்தேன். வணக்கம் செய்து கொண்டோம். தியாகராயச் செட்டியார் வண்டியை விடுத்திறங்கினார். யான் நெருங்கினேன். செட்டியார் தன் முதுகைக் காட்டி ‘‘அறை அப்பா, அறை'' என்றார். எனக்கொன்றும் விளங்கவில்லை.
‘‘இரண்டு நாள்களுக்கு முன்னே கட லோரத்தில் வாயால் அறைந்தீரே இப்பொழுது கையால் அறையும்'' என்று நகைத்தார். சிறு கூட்டம் தேங்கியது. வெட்கம் என்னை அரித்தது, யான் செட்டியார் வண்டியிலேறிப் பதுங்கினேன். முதியவரும் ஏறினார். வண்டி காஸ்மா பாலிட்டன் கிளப் சென்றதும், யான் விடை பெற்றேன். வழியெல்லாம் உரையாடலே!''
***
‘‘1921 ஆம் ஆண்டு பொல்லாத ஆண்டு! தொழிலாளர் கதவடைப்பு! வேலை நிறுத்தம்! ஆறு மாத வேலை நிறுத்தம்! லார்ட் வில்லிங்டன் நீலகிரியினின்றும் புறப்பட்டார். எற்றுக்கு? சென்னை என்ன பேசிற்று? ‘தொழிலாளர் தலைவரை நாடு கடத்த லார்டு வெலிங்டன் வந்திருக்கிறார்' என்று பேசிற்று.
நாடு கடத்தல், செயலில் நடந்ததா? இல்லை, ஏன்? தியாகராயர் தலையீடு. ‘மலையாளர் குழப்பம் - ஒத்துழையாமை - இவைகளிடையே நாடு கடத்தல் நிகழ்ந்தால் சென்னை என்னவாகும்? மாகாணம் என்னவாகும்? மந்திரிமார் பதவியினின்று விலகுதல் நேரினும் நேரும்' என்று செட்டியார் எடுத்துரைத்தாரென்றும், அதனால் லார்டு வெல்லிங்டன் மன மாற்றமடைந்து நாடு கடத்தலை, எச்சரிக்கை அளவில் நிறுத்தினார் என்றும் சொல்லப் பட்டன. இவற்றை எனக்குத் தெரிவித்தவர் டாக்டர் நடேச முதலியார். தியாகராயச் செட்டியாரைக் கண்டு நிகழ்ச்சிகளைக் கேட்டேன். ‘‘நீர் நல்லவர். உமது கட்சி வேகமுடையது. வேகம் அந்தரங்கத்தை வெளியிடவும் தூண்டும். ஆதலின், அந்தரங்க சம்பாஷைணையை வெளி யிடுதல் நல்லதன்று!'' என்று கூறினார்.
144 பலருக்கு வழங்கப்படுகிறது; எனக்கு வழங்கப்படுவதில்லை. காரணம், நாடு கடத்தும் நாட்டம் என்று சொல்லப்பட்டது. அந்த நாட்டத்தை நீங்கள் மாற்றி விட்டீர்கள்; நீங்கள் எனக்கு நன்மை செய்யவில்லை என்றேன்.
நாடு கடத்தலால் உமது வாழ்வே தொலையும். உமது எதிர்கால வாழ்க்கை யைக் கருதியே யான் தடை செய்தேன் என்று செட்டியார் அன்று உரைத்தது எனக்கு மகிழ்ச்சியூட்டவில்லை.''
- ‘‘திரு.வி.க. வாழ்க்கை வரலாறு'',
பக்கம் 362-365)
திராவிட இயக்கத் தலைவரின் பண்பு
இதில் உள்ள உயர்ந்த பண்பாடு - கொள்கை உறுதி - மனிதநேயம் - எதிர்க் கட்சித் தலைவர்களை பழிவாங்க ஏதாவது சந்தர்ப்பம் கிடைக்காதா என்று அரசியல் கீழிறக்கத்திற்குச் சென்று கொண்டுள்ள மோசமான அரசியல் நடத்தைகள் மலியும் இக்கால கட்டத்தில் தியாகராயர் அவர் களின் - திராவிடர் இயக்கத் தலைவரின் பண்பு எப்படிப்பட்டது பார்த்தீர்களா?
திராவிட இயக்கத்தைப்பற்றி ‘‘யானை யைப் பார்த்த அய்வரைப் போல்'' வர்ணிக்கும் சில வசவாளர்கள் இதைக் கண்ட பிறகாவது புத்தி பெறட்டும்!
தியாகராயர் கொள்கை வழியே, இன்றும் என்றும் நம்மிடை வாழ்கிறார் - வாழ்வார்!
-கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்
சென்னை -27.4.2020
No comments:
Post a Comment