தமிழர் தலைவரின் காணொலி வழி வாழ்த்தும் - படப்பிடிப்பும்!
தமிழர் தலைவர் கருத்துரை இதோ!
அனைவருக்கும் வணக்கம்.
இந்த மணவிழா எனது தலைமையில் இப்பொழுது தஞ்சையில் நடைபெறவேண்டிய நம் குடும்பத்து மணவிழாவாகும்.
நாகூர் நாத்திகன் சின்னத்தம்பி - ருக்மணி ஆகியோருடைய குடும்பம் நாடறிந்த நாத்திகக் குடும்பம். நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம் என்று புரட்சிக்கவிஞர் வருணித்ததற்கேற்ப, இது ஒரு கொள்கைப் பல்கலைக் கழகம்.
கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள்தான், நாத்திகன் சின்னத்தம்பி அவர்களுடைய மூத்த மாப்பிள்ளையாவார். எனவே, அந்தக் குடும்பத்தில் வந்த செல்வத்தில் ஒருவர்தான் வளர்மதி.
வளர்மதி அவர்களுடைய அருமை செல்விக்கு இப்போது இங்கே மணவிழா நடைபெறுகிறது.
வளர்மதி - பாலகிருஷ்ணன் ஆகியோருடைய மகள் வெண்பாஎம்.இ., அவர்களுக்கும்,
புதுச்சேரியைச் சார்ந்த நண்பர்கள் பாண்டியன் - சுமதி ஆகியோருடைய செல்வன் சந்திரபாண்டியன் பி.டெக் அவர்களுக்கும் மணவிழா நடைபெற விருக்கிறது.
வாழ்க்கை இணையேற்பு விழாவாக நடை பெறக்கூடிய இந்த மணவிழா - ஜாதி மறுப்பு - தாலி மறுப்புத் திருமணம் என்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம்.
கரோனா என்ற கொடிய தொற்று காரணமாக, ஏராளமான பேர் ஒருவருக்கொருவர் நாம் சந்தித்து, கலந்துறவாடி இந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள் ளக்கூடிய வாய்ப்பு இப்பொழுது இல்லையானாலும், அவரவர், அவரவர் இல்லங்களிலிருந்தே வாழ்த்திக் கொண்டிருக்கக்கூடிய எளிய முறையில் மண விழாக்கள் நடைபெறவேண்டும் என்று நம் அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் கூறிய அந்த ஒரு விழைவு, விருப்பம் இப்போது எப்படியோ தொற்று நோய் காலத்தில்கூட, நிர்ப்பந்தம் காரணமாக நிறைவேற்றினாலும் பரவாயில்லை, இது ஒரு நல்ல திருப்பமும்கூட!
குறைந்த அளவுக்கு, நாம் மட்டுமல்ல, வைதீகர்கள் கூட மணமகன், மணமகள் மற்றும் ஒரு சிலர் மட்டும் கலந்துகொள்ளக்கூடிய மணவிழாக்கள் நடைபெறு கின்றன.
இந்தக் காலகட்டத்தில், விழாக்கள் இல்லை, திருவிழாக்கள், கோவில் திருவிழாக்கள், மற்ற மற்ற நிகழ்ச்சிகள்கூட இல்லை. மணவிழாக்கள் எளிமைப் படுத்தப்பட்டு விட்டன.
இன்னுங்கேட்டால், இரண்டு நாள்களுக்கு முன்பு ‘விடுதலை'யில் வந்த செய்தி, மணமகன் தந்தை யாரே மணவிழாவினை நடத்தி வைத்துதான் அந்தச் செய்தி.
இன்றைய காலவோட்டத்தில், இப்படிப்பட்ட மாறுதல்கள் என்பது மிக வேகமாக வந்து தீர வேண்டியது மிகுந்த அவசியமாகும்.
அந்த வகையில், இந்த மணமக்கள் இருவரும் பொறியாளர்கள். ஒருவரை ஒருவர் புரிந்துகொண்ட வர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு அறிவுரை எதுவும் தேவையில்லை.
எளிய முறையில், மணவிழாவினை நடத்திக் கொள்ளக்கூடிய இவர்கள், மூடநம்பிக்கை தொற்று நோய்க்கு ஆளாகாமல், பகுத்தறிவைப் பயன்படுத்தி, தன்னம்பிக்கையை வளர்த்து, மூடநம்பிக்கைக்கு இடந்தராத அளவிற்குத் தன்னம்பிக்கை வளர்ந்தி ருக்கிறது என்று காட்டுகின்ற நேரத்தில், தன் முனைப்புக்கும் இடமின்றி, இவர்கள் தங்கள் வாழ்க் கையை அமைத்துக் கொள்ளவேண்டும் என்பதே, எங்களைப் போன்றவர்களுடைய பெரு விருப்ப மாகும்.
சுயமரியாதை வாழ்வு சுகவாழ்வு என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை அந்த வாழ்க்கையை அப்படியே கடைபிடித்து வாழக்கூடியவர்கள் - வாழ்வியலில் தெரிந்துகொள்ளக்கூடிய மிகப்பெரிய உண்மை யாகும்.
சிக்கனம், தன்மானம், பிறருக்கு உதவி செய் யக்கூடிய மனித நேயம், மானிடப் பற்று, யாரையும் கீழ்மைப்படுத்தாத ஒரு சமத்துவ உணர்வு - இவையெல்லாம் இந்த மணவிழாவில் பொதிந்துள்ள அர்த்தமுள்ள தத்துவக் கருத்துகளாகும்.
ஆகவே, சுயமரியாதைத் திருமணம் இப்பொழுது இரண்டு பேர் முன்னிலையில் நடைபெற்றாலும், அது சட்டப்படி செல்லுபடியாகக் கூடிய திருமணம் என்று சட்டமும் ஏற்று, சமுதாயமும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவிற்கு, மிகப்பெரிய மாறுதல் யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
எனவே, அந்த அடிப்படையில் ஒரு காலத்தில்
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த நாம், படிக்கக்கூடாது - சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே! பஞ்சமனுக்கு எதைக் கொடுத்தாலும், கல்வி அறிவைக் கொடுக்காதே என்று சொன்ன புராணங்களும், சாஸ்திரங்களும், சம்பிரதா யங்களும், கடவுள்களும் இருக்கின்ற நாட் டில், அதனை முற்றிலுமாக ஒழித்துக்கட்டி, அனை வருக்கும் கல்வி, அனைவருக்கும் அனைத் தும் என்ற பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பக்கூடிய ஒரு சிறந்த சமதர்மக் கருத்தை நிலைநாட்டிய இயக்கம் நம்முடைய சுயமரியாதை இயக்கம்.
எனவேதான், இங்கு ஜாதி இல்லை, பெண்ணடிமை இல்லை, மூடநம்பிக்கை இல்லை, சிக்கனம் உண்டு, சிறப்பு உண்டு. எல்லோருக்கும் உதவக்கூடிய தாராள குணம் உண்டு, மனம் உண்டு என்ற அடிப் படையில், இந்த மணவிழாவினுடைய தத்து வம் அமைந் திருக்கிறது.
அந்த வகையில், இந்த மணவிழாவில் எல்லோரையும் சந்திக்கக் கூடிய வாய்ப்பு எங்களைப் போன்றவர்களுக்கு இல்லை என்றாலும், நவீன அறிவியல் உலகு காரண மாக, உங்களையெல்லாம் காணொலியின் மூலமாக சந்திக்கக்கூடிய ஓர் அரிய வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதுவும்கூட அறி வியல் சாதனை தான். மூடநம்பிக்கை எங்கே விடைபெற்றதோ, அந்த இடத்திலிருந்து துவங்குகிற அறிவியல் சாதனைதான்.
எனவே, இப்படிப்பட்ட மணவிழாவில் பங்கேற்கக்கூடிய அன்பார்ந்த மணமக்களே, நீங்கள் நல்ல இல்லறவாதிகளாக வாழ்வது மட்டும் முக்கியமல்ல; தொண்டறவாதிகளா கவும் சிறப்பாக இருக்கவேண்டும்.
மனிதன் தானாகவும் பிறப்பதில்லை; தனக்காகவும் பிறப்பதில்லை என்று சொல்வதற்கேற்ப அந்த சமூகத்தினுடைய நன்மைகள் என்ன என்பதை யோசித்து, அதற்கேற்ப நாமும் நம்முடைய பங்கை அளிக்கவேண்டும் என்ற உணர்வோடு கடமையாற்றுவது மிகமிக முக்கியமாகும்.
எனவே, இருவரும் கல்வி கற்றவர்கள்; இருவரும் பண்புள்ள குடும்பத்திலிருந்து வந்திருக்கக் கூடியவர்கள். ஒரு அற்புதமான இணையர்களாக உள்ள உங்களுக்கு எங்க ளுடைய அன்பான நல்வாழ்த்துகள்.
அதிலும், குறிப்பாக, சின்னத்தம்பி அவர்கள் என்று சொல்லும்பொழுது, சிரித்த அலாதியான அவருடைய முகம் இன்னமும் எங்கள் கண்முன் தோன்றிக் கொண்டிருக் கிறது.
அதுபோலவே, அவருக்கு முழு ஒத்து ழைப்புக் கொடுத்தவர் ருக்மணி அம்மா ஆவார்கள்.
எடுத்துக்காட்டான - மற்றவர்களால் பின்பற்றத்தக்க சிக்கனத் திருமணம் இது. இணையத்தின்மூலம் நடைபெறும் திரு மணம் இது. மணமக்களுக்கு எங்களின் அன்பு நிறைந்த வாழ்த்துகள்!
நன்றி, வணக்கம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலிமூலம் உரையாற்றினார்.
No comments:
Post a Comment