புரட்டிப்போட்ட கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 28, 2020

புரட்டிப்போட்ட கரோனா


கரோனா உலக மக்களை மூர்க்கமாகத் தாக்கி குலை நடுங்கச் செய்து வருகிறது என்பது உண்மைதான். எவ்வளவோ மாற்றங் களும், வளர்ச்சிகளும், வசதி வாய்ப்புகளும், கட்டமைப்புகளும் வளமாக நிலை கொண்டிருந்த போதிலும் ஒரு வைரஸ், எல்லாவற்றையும் ‘தண்ணீர்' காட்டிக் கொண்டு இருக்கிறது என்பதுதான் யதார்த்தம்!


என்றாலும் மனிதனின் பகுத்தறிவும், விஞ்ஞான சிந்தனையும் இதனை எதிர்கொள்ளும் என்பதில் எள்ளளவும் அய்யம் இல்லவேயில்லை. அம்மை நோயையும், காலராவையும் கடவுள் கோபத்தோடு முடிச்சுப் போட்டுப் பார்க்கவில்லையா?


அந்த அம்மைக் கிருமிகளைக் கொண்டே தடுப்பூசியை உருவாக்கி, அதன் சுவடுகள் இல்லாமல் ஆக்கப்படவில்லையா? காலராவைக் காலி செய்யவில்லையா?


இந்தக் கோவிட் வைரசை சாவுக்குழியில் அடக்கம் செய்யாமல் மனித சக்தி ஓய்ந்திடாது - இது கல்லின் மேல் எழுத்தாகும்.


என்ன? நாட்டு மக்கள் ஒத்துழைப்புக் கரத்தை நீட்ட வேண்டும், கட்டுப்பாடு என்னும் கவசத்தை மனரீதியாக அணிய வேண்டும். ஓர் ஆளை இந்த நோய்த் தொற்றினால் நானூறு பேரைச் சீண்டும் என்று தெரிவித்திருந்தும், இதில் அலட்சியமாக விளையாட்டுத்தனமாக இருக்கலாமா என்பது முக்கிய வினாவாகும்.


பிள்ளைகளை வீட்டில் வளர்க்கும் வகை சரியில்லாவிட்டால்  வெளியிலும் அவர்களின் நடவடிக்கைகள் விபரீதமாக இருக்கும். நண்பர்கள் எல்லாம் ஓரிடத்தில் கூடி, கறி விருந்து நடத்துவது - கிரிக்கெட் விளையாடுவது - பைக்கில் இரண்டு பேர், மூன்று பேர் அமர்ந்து கொண்டு ஊர் சுற்றுவதெல்லாம் ஏதோ ஒரு வகையான 'வீரம்' என்று நினைக்கும் மட்ட ரக சிந்தனை - வெட்கக்கேடானது. கடுமையான சட்டத்தின் சுணையைக் கூர் தீட்டுவதில் தவறே கிடையாது.


கெட்டதிலும் சில ‘நல்லவற்றையும்' கரோனா செய்திருக்கிறது என்பதும் உண்மையே! நகர சுத்தித் தொழிலாளர்களை, தூய்மைப் பணியாளர்கள் பட்டம் சூட்டி, அதே நேரத்தில் அதே வேலையை அவர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்னும் தந்திர வேலையை சமூகம் 'சரியாக'வே செய்து வருகிறது.


இப்பொழுது சில ஊர்களில், இடங்களில் அவர்களின் பணியைப் பாராட்டி அவர்கள் காலில் விழுந்து வணங்குவதும், பொன்னாடை போர்த்தி கையெடுத்துக் கும்பிடுவதும் இன்னொரு பக்கத்தில் நடந்து கொண்டுதானே இருக்கிறது.


ஆனால், அவர்கள் பெரும்பாலும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்னும் மன்னிக்கப்படவே முடியாத ‘மானங்கெட்ட' ஏற்பாடு! நியாயமாக ஒப்பந்தத் தொழிலாளி என்ற சொல்லை அகராதி யிலிருந்தே தூக்கி எறிய வேண்டும்.


அவர்களைத் தெய்வமாக மதிக்க வேண்டாம் - மனிதர்களாக மதியுங்கள் - மலத்தை அப்புறப்படுத்துவதற்கு மாற்று விஞ்ஞான வழிகளைச் செயல்படுத்துங்கள் என்பதுதான் நமது மனிதாபி மானம், மனித உரிமையின் பாற்பட்டகோரிக்கை.


இரண்டாவது கடவுள் பிரச்சினை, அவனின்றி ஓரணுவும் அசையாது என்ற அண்டங்காக்கையாகக் கத்திக் கிடந்த பக்தி வியாபாரிகள் அய்ம்புலன்களையும் மூடிக் கொண்டு விட்டனர். அவனின்றி ஓரணுவும் அசையாது என்றால் “கரோனா" வந்ததற்கும் அவன்தான் காரணமோ என்ற கேள்வி பக்திப் பழங்களின் அறிவே கேட்கக் கூடியது - நெருக்கடி.


கர்ப்பக் கிரகத்துக்குள் பார்ப்பன அர்ச்சகன் மட்டும் போகலாம் - மற்றவர்கள் சென்றால் தீட்டாகிவிடும் என்றார்களே - மதுரை மீனாட்சிக் கோவில் கர்ப்பக் கிரகத்தில் நகர சுத்தித் தொழிலாளர்கள் கிருமி நாசினி அடித்துள்ளார்களே, என்ன பதில்? இதுவும் கரோனாவின் சாதனைதான்!


எல்லா மதக்கோயில்களும் பூட்டப்பட்டு விட்டன. வழிபாடு, பிரார்த்தனை, தொழுகை கிடையாது - கிடையவே கிடையாது - வராதீர் - வராதீர்கள் என்று உரத்த சத்தங்கள் கிடுகிடுக்கின்றன.


மே மாதம் கடைசி வரை திருப்பதியில் தரிசனம் கிடையாதாம். அய்யப்பன் கோயில் நடை சாத்தப்பட்டது சாத்தப்பட்டதுதான். மதுரை சித்திரைத் திருவிழா கள்ளழகர் பவனி கப்-சிப்!


மூடநம்பிக்கையை எதிர்த்து நாம் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்யும் வேலையை கரோனா கச்சிதமாகவே செய்து விட்டது.


மூன்றாவதாக, குடிப்பழக்கம் ஒழியவும் வாய்ப்புள்ளதே; சுற்றுச்சூழல் மாசும் குறைந்துள்ளது!


நான்காவதாக அரசு மருத்துவத் துறையைச் சார்ந்தவர்களின் மேலான மதிப்பும், மரியாதையும், நம்பிக்கையும் பல மடங்கு உயர்ந்திருக்கிறது.


அரசு மருத்துவமனை என்றால் ஓர் இளக்காரம் - அந்த எண்ணத்தைக் கரோனா துடைத்தெறிந்திருக்கிறது என்பதில் அய்யமில்லை.


‘நீட்' எழுதாமல் +2 மதிப்பெண் அடிப்படையில் கிராமப் புறங்களிலிருந்து வந்த டாக்டர்கள் தான் இப்பொழுது களத்தில் இருக்கிறார்கள். பல லட்சம் ரூபாய் செலவு செய்து  பயிற்சி கூடங்களில் சேர்ந்து டாக்டர் ஆகப் போகிறவர்கள்  கண்டிப்பாக கிராமப் பகுதிகளுக்குச் சென்று பணியாற்றப் போவதில்லை.


‘நீட்' மூலம் டாக்டராகும் மேல் தட்டுகள், பட்டங்கள் பெற்றதும் வெளிநாடுகளுக்குப் பறந்து விடக் கூடியவர்கள் தாம். அல்லது கார்ப்பரேட்டுகள் நடத்தும் தனியார் மருத்துவமனைகளில் இலட்சக்கணக்கில் சம்பாதிக்கப் போய்விடுவார்கள் - ஏன் எனில் பல லட்சம் செலவு செய்து தானே டாக்டர்கள் ஆகியிருக்கிறார் கள். போட்ட முதலை வட்டியுடன் சம்பாதிக்க வேண்டாமா?


ஆக. 'கரோனா' சமூகநீதிச் சிந்தனையையும் தட்டி எழுப்பி இருக்கிறது என்பதும் உண்மையே! கெட்டதிலும் இவை நல்லவை என்றாலும், மனிதனுக்குப் பகுத்தறிவு இருக்கிறது என்பதற்கு அடையாளமே எப்பொழுதுமே யோக்கியனாக நடந்து கொள்வது தான்!


 


No comments:

Post a Comment