கரோனா தொற்று நோய் வந்தாலும் வந்தது - மனித குலத்தை ஓர் ஆட்டு ஆட்டிவிட்டது. நாம்தான் ஆரோக்கியமாக இருக்கி றோமே - நமக்கு நோய்த் தொற்றாது என்று மார்தட்டி நிற்க முடியவில்லை. நாம் தான் நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறோமே - உரமேறிய உடம்பு உண்டே என்றும் வீராப்பு பேச முடியாது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சொன்னதுபோல, பணக்காரர்களுக்கு மட்டும் வரக்கூடியது என்பதும் உண்மையல்ல; ஏழைகளையும், சீதீண்டத்தான் செய்கிறது. வல்லரசு நாடு என்று வக்கணைப் பேசும் நாடுகளும் வாய் மூடிக்கொள்ளும் நிலைதான். எண்ணெய்ச் சுரங்கம் எங்களிடம்தான் இருக்கிறது - தங்கத்தைவிட விலை அதிகமானது என்று வீராப்புப் பேசும் நாடுகளும் சரி கைபிசைந்துதான் நிற்கின்றன.
இப்படியொரு தாக்குதல் மனித குலத்தின்மீது நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாதுதான். ஜோதிடர்களும் சரி, பஞ் சாங்கமும் சரி - முன்கூட்டி சொன்னதுண்டா? என்பது அறிவார்ந்த கேள்வி. 40 வருடங்களுக்கு ஒருமுறை குளத்திலிருந்து வெளியே வந்தார் அத்திவரதர்; இலட்சக்கணக்கான மக்கள் தரிசித்தனர் - நாட்டுக்குச் சுபிட்சம் நடக்கப்போகிறது என்று ஆன்மிக இதழ்களை வெளியிட்டு கல்லாப் பெட்டி நிரப்பினார்கள் அல்லவா - அது என்னாயிற்று? என்ற கேள்வி பாமர மனிதர்களிடத்திலும் எழுந்து நிற்கிறது. பக்தியோடு நாள்தோறும் கட்டிப் புரளும் பேர்வழிகளுக்கும் கூட இந்தத் தொற்று ஏற்படத்தான் செய்திருக்கிறது.
“எல்லாம் பகவான் செயல்"-"அவனின்றி ஓரணுவும் அசையாது' என்று சொன்னவர்களிடமிருந்து பேச்சு - மூச்சைக் காணோம். இன்னும் சொல்லப்போனால், எல்லா மதக் கோவில்களும் இழுத்துப் பூட்டப்பட்ட நிலை. பிழைப்புப் போய்விட்டது. எங்கள் மீதும் கருணைக் கடாட்சம் வீழட்டும் என்று அர்ச்சகர்களும் நிவாரணம் கேட்கும் நிலை. இந்த நேரத்தில் பகுத்தறிவாளர்கள் ஒரு கேள்வியைக் கேட்க நியாயம் உண்டு, 'நீங்கள் என்னதான் பிரச்சாரம் செய்தாலும், திருவிழாவுக்கு வரும் கூட்டத்தைப் பார்த்தேளா - அத்திவரதரைத் தரிசிக்க எத்தனை இலட்சம் கூடினார்கள்? உங்கள் பகுத்தறிவு தோற்று விட்டது' என்று ஏகடியம் செய்பவர்களும் இங்கு இருக்கத்தான் செய்கிறார்கள்.
இந்த சந்தர்ப்பத்தில் நாமும் ஓர் எதிர் கேள்விப் போடலாம் - எத்தனைக் கடவுள்கள், எத்தனைக் கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள், திருவிழாக்கள் இருந்தும் கரோனாவைத் தடுக்க முடியவில்லையே ஏன்? என்று எளிதாக ஒரு வினாவைத் தொடுக்க முடியும்! கடவுள், மதம், சடங்குகள் பெயரால் பொருளையும், காலத்தையும் கரியாக்கிய மனித குலம் ஒன்றைச் சிந்திக்கவேண்டும் இந்த நேரத்தில்.
இவை எல்லாம் வீண்தான் என்று உணர்ந்தால், நாட்டுக்கு மட்டுமல்ல - தனி மனிதனுக்கும் எவ்வளவோ இலாபம்! இந்தத் தருணத்திலாவது உணர்வது நல்லதே! தலையெழுத்து என்று சொல்லித் தப்பிக்க முடியாது - கர்மப் பலன் என்று கூறி நழுவவும் முடியாது - நடைமுறைக் கண்ணோட்டத்தில் நாட்டு நடப்புகளை அறிவுக்கண் கொண்டு பார்த்தால் - இந்தக் கரோனா என்னும் கெட்ட காலத்திலும் மனிதனின் மூளையில் மின்னல் போல ஒரு பொறி கிளம்பி, எதிர்கால வாழ்வை புத்திசாலித்தனமாக மாற்றியமைக்க வசதி ஏற்படும்.
தொடர்ந்து ஊரடங்கால் மக்கள் படும் அவதி கொஞ்சநஞ்சமல்ல; அன்றாடம் உழைத்து 'கூலி' பெற்றுத்தான் வீட்டு அடுப்பெரியும் என்ற நிலையில் உள்ளவர்களின் கதறல் கேட்கத்தான் செய்கிறது. சிறு வியாபாரிகள் கடைகளைத் திறக்க முடியவில்லை - கண்ணீர் சிந்துகிறார்கள். நடைபாதையில் குடியிருப்போரின் நிலையைக் கொஞ்சம் நினைத்துப் பார்ப்போம்; ஏன் தெரு விலங்குகள், பறவைகள்கூட அல்லாடுவதைக் காண முடிகிறது. ஒரு நோய்த் தொற்று மனித குலத்தைக் கதிகலங்க அடிக்கிறது.
மனிதன் ஆற்றல் உடையவன்தான் - பழைய தலைமுறைக்கும், தற்போதைய தலைமுறைக்கும் எவ்வளவோ தலைகீழ் மாற்றங்கள் - மறுமலர்ச்சிகள், வசதி வாய்ப்புகள் எல்லாம் இருந்தும் குறைந்தபட்சம் பசி, பட்டினி இல்லாத ஒரு நாட்டை உருவாக்க முடியவில்லையே, ஏன்? அன்றாடம் கூலி வாங்கித்தான் வாழ முடியும் என்ற நிலை இருப்பது ஏன்? வறுமைக்கோடு என்று பேசிக்கொண்டு இருப்பது ஏன்? பல லட்சம் கோடி ரூபாய் புரள்கிறது நிதிநிலை அறிக்கையில்; அது யாருக்குப் பயன்படுகிறது? ஒரு நெருக்கடி ஏற்பட்டால் அதிலிருந்து மீள முடியாமல் பசிப் பிணியால் துடிக்கவேண்டும் என்ற நிலை இருப்பது எதைக் காட்டுகிறது? நமது அமைப்பு முறையில், ஆட்சி முறையில் எந்த இடத்தில் கோளாறு இருக்கிறது என்பதைக்கூட அறியாதவர்களாகத்தான் இருக்கிறோமா? அய்ந்து நட்சத்திர ஓட்டல்கள் ஒருபுறம்; ஒரு கப் காஃபி நூறு ரூபாய் - அங்கு - வியாபாரம் நடக்கத்தான் செய்கிறது. வீடே இல்லாத மக்களும், அடுத்த வேளை உணவுக்கு என்ன வழி என்று ஏங்கி நிற்கும் மக்களும் இன்னொருபுறம். இதுதான் சுதந்திர நாடா? என்ற கேள்வி எழத்தான் செய்கிறது - சினம் வேண்டாம் - தேவை சிந்தனை!
No comments:
Post a Comment