பெரியாருக்குப் பின் திராவிடர் கழகம்! 6 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 24, 2020

பெரியாருக்குப் பின் திராவிடர் கழகம்! 6

கம்யூனிஸ்ட் கட்சி பேராசிரியர் ஒருவரின் கருத்து!


‘‘காலந்தோறும் பிராமணியம்‘’ எனும் வரிசையில் எட்டாம்  தொகுதியில் பக்கம் 431 முதல் 465 முடிய 35 பக்கங்களில் ‘‘சமூக சீர்திருத்தம் - திராவிட இயக்கம் (தி.க.)" எனும் தலைப்பில் மிகச் சிறப்பாகத் தொகுத்துக் கொடுத்துள்ளார் பேராசிரியர் அருணன்.


பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த - இந்தத் தலைமுறையின் முக்கிய ஆய்வாளர் கண்ணோட்டத்தில் திராவிடர் கழகம்பற்றிய மதிப்பீடு மிகவும் முக்கியமானது. தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கழகம் ஆற்றிய பணிகள் தொடர்பாக - அவர் கண்ணோட்டத்தில் சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளதில் நமக்கு மாறுபட்ட கருத்துகளும், தகவல்களும் உண்டு என்றாலும், (விமர்சனத்தை நாம் வரவேற்கக்  கூடியவர்கள்தான்) பொதுவாக திராவிடர் கழகம்பற்றிய சிறப்பான பதிவுகள்! அவசியம் பொதுநலவாதி களும், ஆய்வாளர்களும், கழகத்தினரும் அறிந்து கொள்ளவேண்டிய திராவிடர் கழகம் குறித்த அந்தப் பகுதிகள் தொடர்ச்சியாக ‘விடுதலை'யில் வெளியிடப்படு கின்றன, படியுங்கள் - பயனுள்ளது!



 


நேற்றைய தொடர்ச்சி வருமாறு:


 


பிள்ளையார் ஊர்வலம் - புதிய ஆபத்து


1994இல் தி.க.வின் பொன்விழா வந்தது. அந்த ஆண்டு செப்டம்பரில் சென்னையில் நடைபெற்ற பொன்விழா மாநில மாநாட்டில் வீரமணி ஆற்றிய உரை முக்கியமானது. அப்போதே “பிள்ளையார் ஊர்வலம்'' - எனும் புதிய ஆயுதத்தை - திலகர் கண்ட ஆயுதத்தை - மகாராஷ்டிராவி லிருந்து தமிழகத்திற்கு இறக்குமதி செய்திருந்தது சங்பரி வாரம். இதிலுள்ள ஆபத்தை தமிழர்களுக்கு உணர்த்த வேண்டிய கடமை தி.க.விற்கு இருப்பதைச் சுட்டிக்காட்டினார் அவர். அது "ஆபாசப் பிள்ளையார் இப்போது ஒரு பண்பாட்டுப் படையெடுப்புக்குப் புதியதோர் போதை மாத்திரையாக வடிவம் எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் மார்வாரிகளின் பணம் இதற்குப் பயன்படுகிறது. பக்தி என்ற பெயரால் விளக்கினை நோக்கி ஓடும் விட்டில் பூச்சி போன்ற நமது மக்களின் அறியாமை காரணமாக இத்தனை ஆண்டு கள் சாதாரணமாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தியை, மராத்தியத்திலிருந்து இறக்குமதி ஆன ‘வாதாபி கணபதி’ கடவுளுக்குத் திருவிழா என்ற பெயரில் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ், விசுவ இந்து பரிஷத், பஜ்ரங் தள் போன்ற பார்ப்பன-பனியா அமைப்புகள் பக்தி போதையை ஏற்றி, கூலிப்பட்டாளத்தைப் பிடித்து மிகப் பெரிதாக வெளிச்சம் போட்டு, பார்ப்பன ஆதிக்கத்தின் ஆணிவேரைப் பலப் படுத்தி, சிறுபான்மையினரையும் மிரட்டி கலவரம், காலித் தனம் செய்கின்றனர். வரும் ஆண்டு முழுவதும் இதுபோன்ற ஆபாச விநாயகர் மற்றும் ஆரிய மதப் பண்டிகைகளின் தன்மைகளை விளக்கிப் பிரச்சாரம், கண்டனம், கிளர்ச்சி களை சூறாவளி எனச் செய்தாக வேண்டும்.”


பக்தியை பகல் வேஷமாக்குவது என்பதற்குச் சரியான உதாரணம் இந்தப் பிள்ளையார் ஊர்வலம். பிள்ளையார் பிடித்து வைத்து வீட்டுக்குள் கும்பிட்டுவிட்டு, மூன்றாம்நாள் குளம் குட்டையில் போட்டுக் கொண்டிருந்தார்கள் தமிழர் கள். அது சுத்த பக்தியாக இருந்தது. அந்தக் கரைக்கும் வேலையை மதவெறிக்கு பயன்படுத்தும் வகையில் ஊர்வல மாக நடத்திட, விதவிதமான பிள்ளையார்கள் செய்ய, அவற்றின் கையில் பணத்தை வாரி இறைத்தது சங்பரிவாரம். அந்த ஊர்வலத்தை முஸ்லிம்கள் பகுதிகளில்தான் விடு வோம் எனச் சொல்லி வம்பு வளர்த்தது. பிராமணியத்தின் இந்தப் புதுவடிவ ஆபத்தை மக்களுக்கு அடையாளம் காட்டி பரப்புரை நடத்தியதில் தி.க.விற்கு தனித்த பங்கு உண்டு.


1998- பா.ஜ.க. பாம்புக்கு பால் வார்க்காதீர்!


1997 டிசம்பர் இறுதி வாரத்தில் “பா.ஜ.க.வும் இந்துத்து வாவும்" எனும் தலைப்பில் திருச்சியில் இருநாள் பேருரை நிகழ்த்தினார் வீரமணி. 1996 சட்டமன்றத் தேர்தலில் தமிழக ஆட்சியை இழந்திருந்த ஜெயலலிதா 1998 பிப்ரவரியில் நடக்கவிருந்த மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வோடு கூட்டணி சேர்ந்தார். இந்த சூழ்நிலையில்தான் வீரமணி அந்தப் பேருரையை நிகழ்த்தினார் என்பதை மனதில் கொண்டு அதைப் படிக்க வேண்டியுள்ளது. 69% இட ஒதுக்கீடு பாதுகாப்பு வேலையில் தி.க. அப்போது ஆட்சியிலிருந்த அதிமுகவோடு சேர்ந்து இயங்கியதை அறிவோம். அந்த உறவில் எதிர்பாராத திருப்பமாக இது வந்து சேர்ந்தது. ஆனாலும் தனது பா.ஜ.க. எதிர்ப்பைக் கைவிடவில்லை தி.க. என்பதற்கு இந்த உரை ஆதாரமாக உள்ளது.


உரையின் துவக்கமே இப்படி காரமாக, கறாராக இருந் தது. “எங்கே பார்த்தாலும் எயிட்ஸ் நோயின் ஆபத்தைப் பற்றி விழிப்பாக இருங்கள், விழிப்பாக இருங்கள், விழிப்பாக இருங்கள் என்று சொல்லி பிரச்சாரம் செய்கின்றனர். ஏன் அந்தப் பிரச்சாரம் செய்கிறார்கள்? நோய் பரவிக் கொண்டு வருகிறது, மக்கள் அதற்கு பலியாகி விடக்கூடாது என்பதற் காகத்தான் அப்படி பிரச்சாரம் செய்து கொண்டு வருகின்ற னர். எய்ட்ஸ் நோயைவிட மிக ஆபத்தானது இந்துத்துவா வைப் பரப்புகின்ற பா.ஜ.க. ஆகவேதான், அதைப் பற்றி சொல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது.” பிராம ணியக் கட்சியாம் பா.ஜ.க.வை எய்ட்ஸ் நோய் என்று வருணித்ததன் மூலம் அது பற்றிச் எத்தகைய அருவருப்பு உணர்வோடு தி.க. இருந்தது என்பதை அதிமுகவுக்கும் தமிழக மக்களுக்கும் புரிய வைக்க முயன்றார்.


தேவகவுடா ஆட்சி, குஜ்ரால் ஆட்சி என்று அடுத்தடுத்து வந்து, எதுவும் நிலைக்க முடியாமல் தேர்தல் வந்த சூழலில் “நிலையான ஆட்சி” எனும் கோஷத்தை எழுப்பி வந்தது பா.ஜ.க. அதற்கு வீரமணி சொன்ன பதில் முக்கியமானது. “எங்களைப் பொறுத்தவரை நிலையான ஆட்சி முக்கிய மல்ல, நீதியான ஆட்சிதான் தேவை.” நீதியற்ற ஆட்சி நிலையாக நின்றுவிட்டால் இந்த நாடு நாசமாகப் போகு மல்லவா? பா.ஜ.க. வந்தால் “மதச்சார்பற்ற அரசு” எனும் நீதி படுகொலை செய்யப்படும் என்று எச்சரித்தார்.


மதச்சார்பற்ற அரசு என்பதற்கு பெரியார் எளிமையாகத் தந்த ஒரு விளக்கத்தை இந்த உரையில் மேற்கோள் காட்டினார். அது. "செக்குலர் என்ற வார்த்தைக்குப் பொருள் என்ன வென்றால் மதசம்பந்தம் இல்லாதது என்பதுதான். இதில் எல்லா மதங்களையும் சமமாக நடத்துவோம் என்று சொன்னால் என்ன அர்த்தம்? ‘கன்னி’ (க்ஷிவீக்ஷீரீவீஸீ) என்ற சொல் லுக்கு அகராதியில் என்ன அர்த்தம் சொல்லப்பட்டிருக் கிறது? ஆண் தொடர்பு இல்லாதவர் என்பதற்குப் பெயர் தான் கன்னி. அதை விட்டுவிட்டு எல்லா ஆண்களையும் சமமாக பாவிப்பவள் என்று சொன்னால் எப்படி இருக்கும்? என்று தந்தை பெரியார் அவர்கள் கேட்டார்.” பெரியாருக்கே உரிய அந்தப் பளிச் கிண்டல்தனத்தை, எவரும் புரிந்து கொள்ளும் வகையில் சொல்லுகிற பாங்கை இங்கே கேட்க முடிகிறது.


ஆனாலும் என்ன, பா.ஜ.க. அணி ஒரு வலுவான சக்தியாகத் தேர்தல் களத்தில் நின்றது. 1998 ஜனவரி 15இல் வீரமணி தமிழக வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் “பி.ஜே.பி. பாம்புக்கு பால் வார்த்துவிடக் கூடாது” என்றார். பா.ஜ.க.வை ஆட்சி யில் அமர்த்திவிட ஆர்.எஸ்.எஸ். எவ்வளவு துடிப்போடு இருக்கிறது என்பதை ஆதாரத்தோடு எடுத்துக் காட்டினார். “நேற்று மத்தியப் பிரதேசத்தில் பேசிய அடல்பிகாரி வாஜ்பாய் மற்றொரு குண்டையும் தூக்கிப் போட்டிருக்கிறார். தமது கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் தற்போதுள்ள பார்லிமெண்டரி கேபினெட் ஆட்சி முறைக்குப் பதிலாக அதிபர் ஆட்சி முறை (றிக்ஷீமீsவீபீமீஸீtவீணீறீ ஷிஹ்stமீனீ) கொண்டு வருவதற்கு முயற்சிகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்” என்கிற புதிய ஆபத்தை சுட்டிக்காட்டினார். தனிப்பெரும் பான்மையோடு அவர்கள் ஆட்சிக்கு வந்தால் இதைச் செயல்படுத்த முனைவார்கள் என்பதில் அய்யமில்லை.


கல்வியில் கை வைத்தார்கள்


ஏற்கெனவே குறிப்பிட்டது போல அந்தத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை இல்லாமல் கூட்டணிக் கட்சிகளின் பலத்தோடு ஆட்சி அமைத்தார் வாஜ்பாய். அந்த ஆட்சி யின் இந்துத்துவா குணத்தை அவ்வப்போது அம்பலப் படுத்தி, கண்டனம் செய்து வந்தது தி.க. 1998 செப்டம்பரில் “உண்மை“ ஏட்டில் வீரமணி எழுதிய ஒரு கட்டுரையில் பா.ஜ.க. ஆட்சியின் உண்மை முகம் எடுத்துக்காட்டப்பட்டது- “பதவி ஏற்று அய்ந்து மாதங்கள் ஆகின்றன. மூன்று மாதங்களுக்கு முன்பாகவே முரளி மனோகர் ஜோஷி தம் கைவரிசையைக் காட்டிவிட்டார். இந்திய வரலாற்று ஆய்வுக்குழுவையை மாற்றி அமைத்துவிட்டார். குழுவின் பதினெட்டு உறுப்பினர்களில் பலபேர் இந்துத்துவா ஆதர வாளர்களாக இருக்குமாறு ஏற்பாடு செய்துவிட்டார். அவர் கள் எல்லோரும் அயோத்தி விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ். பக்கம் ஆதரித்துப் பேசியவர்களாம்! ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் அதன் அரசியல் பிரிவான பாரதிய ஜனதாவும் வரலாற்றில் புரட்டுச் செய்வதற்குக் கிடைக்கும் எந்தவொரு வாய்ப்பையும் நழுவவிடுவதில்லை. வரலாற்றில் புரட்டுச் செய்வது எப்படி என்பதற்கு சங்பரிவாரம் ஓர் இலக்கணம் வகுத்திருக்கிறது. கற்பனைப் புராணங்கள், கண்மூடித் தனமான நம்பிக்கைகள் முதலியவற்றை வரலாற்றுக் குறிப்பு களுடன் கலந்து விடுவதுதான் அவர்கள் வகுத்துக் கொண்டுள்ள இலக்கணமாகும்.” அந்த இலக்கணத்திற்கு அரசு அங்கீகாரம் தருகிற, அரசு சார்பிலேயே நடைமுறைப் படுத்துகிற வேலையைத்தான் வாஜ்பாய் அரசு செய்தது என்பதைச் சரியாகவே சுட்டிக்காட்டினார். இதன் வெளிப் பாட்டைப் பின்னாளில் சேது சமுத்திரத் திட்ட விவகாரத்தில் நாடு துல்லியமாகக் கண்டது.


அந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற தி.க. மத்திய நிர்வாகக் குழுவில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் கல்வியில் எப்படி வாஜ்பாய் அரசு தனது இந்துத்துவா கோரக்கரத்தை வைத்தது என்பதைச் சொல்லிக் கண்டனம் செய்தது. அது “கடந்த ஆகஸ்டு மாதம் புதுதில்லியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். சின் கல்விப் பிரிவான ‘வித்யா பாரதி அகில பாரதிய சிக்ஷா சன்ஸ்தான்’ என்ற அமைப்பின் உயர்மட்டக் குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை மாநிலக் கல்வி அமைச்சர்களின் மாநாட்டில் விவாதப் பொருளாக்கி, தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை அனைத்து மட்டத்திலும் இந்துத்துவாக் கொள்கை யைத் திணிக்க மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி ‘இந்துத்துவா’வைப் பற்றிப் பிள்ளைகளுக்குப் பரப்பிடும் வகையில் வேதங்களையும் உப நிஷத்துகளையும் பாடத்திட்டத்தில் சேர்த்தல், மூன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சமஸ்கிருத மொழி சொல்லிக் கொடுப்பதை அனைத்து மாணவர்க்கும் கட்டாய மாக்குதல், சரஸ்வதிக்கு நன்றி என்று அன்றாடம் சரஸ்வதி படத்திற்கு பூஜை செய்தல் (உபி.யில் பல பள்ளிகளில் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, சிறுபான்மை சமுதாய மக்கள் இதனை எதிர்த்துக் குமுறிப் போர்க்கொடி தூக்கியுள்ளனர்) இவைகளையெல்லாம் பாடத்திட்டங்களாக்க மத்திய அரசு முயல்கிறது. தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரால் இந்து மயமாக்குதல், அதாவது பார்ப்பனிய மயமாக்கும் பணி மூளைக்குச் சாயமேற்றும் மிகவும் ஆபத்தான பணி என்பதால் பா.ஜ.க. அரசின் முயற்சிகளுக்குக் கடும் கண் டனம் தெரிவிக்கிறது.” இந்த முயற்சிக்கு பா.ஜ.க. அல்லாத மாநில அரசுகள் அந்த கல்வி அமைச்சர்கள் மாநாட்டிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்போது அதை நடை முறைப்படுத்த முடியவில்லை வாஜ்பாய் அரசால்.


1999- நரி சைவமாகி விட்டதா?


இப்படிப்பட்ட அரசு 13 மாத காலத்திற்கு மேல் மத்தியில் இருக்க முடியாமல் கவிழ்ந்து போய் 1999இல் மீண்டும் மக்களவைக்குத் தேர்தல் வந்தது. இப்போது பா.ஜ.க. கூட் டணியில் தி.மு.க. இருந்தது. இப்போதும் அந்த அணியை எதிர்த்து நின்றது தி.க. அந்த ஆண்டு மே மாதத்தில் சென்னையில் வீரமணி பேசிய பேச்சு இதைத் தெளிவு படுத்தியது.


அவர் கூறினார். “நக்வி என்பவர் உ.பி. அமைச்சர். மற்ற கட்சிக்காரர்களைத் திருப்திபடுத்துவதற்காகத்தான் ராமன் கோயில் பிரச்சினையைக் கைவிட்டோமே தவிர நாங்கள் கைவிடவில்லை, அந்தப் பிரச்சினை இன்னமும் இருக்கிறது என்று சொல்கிறார். நம்முடைய சகோதரர் கலைஞர் சொல்கிறார் பி.ஜே.பி. மதவாதக் கட்சியாக இருந்தது முன்பு, இப்பொழுது மாறிவிட்டது, நரி சைவமாகி விட்டது என்கிறார்.”


வாஜ்பாய் அரசு செய்த ஒரு குயுக்தி வேலையை அந்த உரையில் அம்பலப்படுத்தினார் வீரமணி. வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்போம் எனச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 60 ஆக உயர்த்தினார்கள். புதிதாக இளைஞர்களை மத்திய அரசுப் பணியில் சேரவிடாமல் செய்தார்கள். இதற்கு ஓர் உள்நோக்கம் இருந்தது. வீரமணி யின் வாக்காகவே கேட்போம்- “மத்திய அரசிலிருந்து ஓய்வு பெற்று வெளியே வரக்கூடியவர்கள் எல்லோருமே உயர் ஜாதிக்காரர்கள், உள்ளே போக வேண்டியவர்கள் எல்லாம் படித்து முடித்துவிட்டு, இடஒதுக்கீட்டின் அடிப்படையில் செல்ல வேண்டியவர்கள். இவர்கள் எல்லாம் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள். உள்ளே போகிறவர்களுக்கு கதவு சாத்தப்பட்டது, உள்ளே இருந்து வெளியே வர வேண்டியவர்களுக்கு இரண்டு வருடம் பதவி நீட்டிப்பு கொடுக்கப்பட்டது என்றால் அது உயர் ஜாதிக் காரர்களுக்கு செய்யப்பட்ட மிகப்பெரிய சலுகை. இளைஞர் களுக்கு எதிராக செய்யப்பட்ட செயல். ஆகவே சமூகநீதியும் இதனாலே சாய்க்கப்பட்டது.”


இப்படிப்பட்ட பா.ஜ.க. கூட்டணிதான் மீண்டும் வாக்கு கேட்டு வந்தது. இதைத் தயவு தாட்சண்யமின்றி முறியடிக்கு மாறு தொடர்ந்து தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் வீரமணி. ஜூன் மாதம் புதுவையில் அவர் பேசிய பேச்சில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் ராஜேந்திர சிங்கை பிரதமர் வாஜ்பாய் சந்தித்ததையும், அவர்களுக்கிடையில் நடந்த உரை யாடலையும் (வலைத்தளத்தை ஆதாரமாகக் காட்டி) மேற் கோள் காட்டினார். அது -


“ராஜேந்திரசிங்: வாஜ்பாய்ஜி, நீங்கள் இன்னமும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கியத் தலைவர்தானே?


வாஜ்பாய்: ஆமாம் குருஜி.


ராஜேந்திர சிங்: தற்பொழுது கலைக்கப்பட்ட 12ஆவது மக்களவையில் இருந்த பி.ஜே.பி. எம்.பி.க்கள் 70 பேருக்கு ஆர்.எஸ்.எஸ். என்றால் என்ன, அதன் வரலாறு என்ன என்றே தெரியவில்லையே? ஆர்.எஸ்.எஸ். தத்துவம் தெரி யாதவர்களுக்கெல்லாம் தேர்தலில் டிக்கெட் கொடுக்கலாமா?


வாஜ்பாய்: தவறுதான் குருஜி. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.


ராஜேந்திரசிங்: நான் ஏழு பேர் கொண்ட ஆர்.எஸ்.எஸ். கொள்கை வகுப்பு குழுவை அமைத்திருக்கிறேன். நீங்கள் 13ஆவது மக்களவைக்கு வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்த உடனே அந்தப் பட்டியலை எங்களுக்கு- அந்த ஏழு பேர் கொண்ட குழுவுக்கு அனுப்புங்கள். எவரெவர் ஆர்.எஸ்.எஸ். கொள்கை தெரிந்தவர்கள் என்பதைச் சரி பார்த்து நாங்கள் டிக்மார்க் செய்தால்தான் நீங்கள் அவர்களுக்கு டிக்கெட் தர வேண்டும்.


வாஜ்பாய்: அப்படியே செய்கிறேன் குருஜி”


இப்படி ஆர்.எஸ்.எஸ்.சுக்கு கட்டுப்பட்டு நடப்பவரை “நல்லவர், வல்லவர், ஜென்டில்மேன்” என்று பாராட்டலாமா தி.மு.க. தலைவர் கலைஞர் என்பதுதான் அந்தப் பேச்சின் சாரமாக இருந்தது. இப்படிச் சகல கோணங்களிலிருந்தும் பா.ஜ.க.வை விமர்சித்து, அந்தத் தேர்தலில் அதன் வெற்றி யைத் தடுக்கப் பெரு முயற்சி செய்தது தி.க. அதிலே வீரமணி யின் பங்கு மிகக் காத்திரமாக இருந்தது. அந்த முயற்சியே வரலாற்று முக்கியத்துவம் உடையதாக இருந்தது. அதிலும் இரு கம்யூனிஸ்டு கட்சிகளோடு சேர்ந்து இது விஷயத்தில் களம் கண்டது தி.க. என்பதும் தனித்துக் குறிக்கத்தக்கது.


திராவிட இயக்கத்தின் பிரிவுகள் என்று இந்தக் காலத்தில் தி.க., தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. என்று நான்கு அமைப்பு கள் இயங்கினாலும் பிராமணியத்தின் சாதியம், ஆணா திக்கம், மதவெறித்தனம், இந்தித் திணிப்பு, மூடநம்பிக்கைகள், இதிகாச புராண புரட்டுக்கள் எனும் சகல கூறுகளையும் எதிர்த்து, விடாது பிரச்சாரம், போராட்டம் நடத்தியது தி.க.வே. தேர்தல் அரசியலில் ஈடுபடாமல் சிவில் சமூகத்தில் மட்டும் செயல்பட்டது இதற்கு ஏதுவாக இருந்தது. கூடவே, தேர்தல் அரசியல் களத்தில் பிராமணியத்தின் கட்சியாகிய பா.ஜ.க. அணியை எதிர்த்து மக்கள் கருத்தைத் திரட்டுவதி லும் அது பங்களிப்பைச் செய்தது.


எனினும், ஏற்கெனவே குறிப்பிட்டது போல, ஆர்.எஸ்.எஸ்.சானது திட்டமிட்டு தனது அரசியல் பிரிவாக ஜன சங்கம் - பா.ஜ.க. என்று உருவாக்கியது போல தி.க. உருவாக் காததால் அதிமுக-திமுக-மதிமுக கட்சிகள் பா.ஜ.க. அணிக் குப் போனதைத் தடுத்து நிறுத்தும் சக்தி அதற்கில்லாமல் போனது. தி.க. “தாய்க்கழகம்” எனப்பட்டது. ஆனால் தனது பிள்ளை மற்றும் பேரன்களின் தவறுகளைத் தடுக்கும் ஆற்றல் அதற்கில்லாமல் போனது. அவர்களின் தவறான போக்கை எதிர்த்து தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுக் கவே அதனால் முடிந்தது. அதைச் செய்யத் தயங்கவில்லை. தனது பா.ஜ.க. எதிர்ப்பில் தளரவில்லை என்பதுதான் தி.க.வின் சிறப்புத் தன்மையாகத் திகழ்ந்தது. அந்த அளவில் தனது வரலாற்றுக் கடமையைச் செய்ததாக அது திருப்தி யடைய வேண்டியிருந்தது.


(முற்றும்)


பெரியாரின் தலைமையில் திராவிடர் கழகச் செயற்பாடுகள் குறித்து பேராசிரியர் அருணன் அவர்களுடைய நூலிலிருந்து சில பகுதிகள் விரைவில் வெளிவரும்.


No comments:

Post a Comment