மீண்டு(ம்) பறப்போம் பறப்போம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 27, 2020

மீண்டு(ம்) பறப்போம் பறப்போம்


கரோனா மூலம் ஏற்பட்டுள்ள நம் அனுபவம் முற்றிலும் எதிர்பாராதது மட்டுமல்ல; பலருக்கும் மன தைரியத்தைப் பறித்து, அச்சத்திலேயே இருக்கக்கூடிய மன இருள் சூழ்ந்துள்ள நிலை யையும் ஏற்படுத்தும் ஒரு நோயாகும்!


ஊடகங்களில் குறிப்பாக தொலைக்காட்சி செய்திகளைப் பார்த்தால், வளர்ந்த நாடுகள் என்று பெருமை பேசிக் கொண்ட நாடுகளும்கூட இதற்குத் தப்பவில்லை; மாறாக, இதிலும் ‘‘வளர்ந்த நாடுகளாக'' மாறிக் கொண்டிருக்கும் நிலை குறித்து மனித குலத்தின் அச்சமும், அவநம்பிக்கையும் நாளும் அதிகரிக்கும் ஓர் அசாதாரண நிலை தொடர்கிறது!


தனி மருந்து ஏதும் இதைத் தடுக்க இன்றுவரை இல்லையாயினும், நாளை நிச்சயம் அறிவியல் - மருத்துவவியல் ஆய்வு காரணமாக வரும் என்ற நம்பிக்கையை நாம் இழக்கவேண்டியதே இல்லை.


வெறுமனே அச்சம், கவலை, பீதி - இவற்றையே நம் மனம் சுற்றிச் சுற்றி வரும் நிலையைப் போக்க, குடும்பத்தாருடன் கலகலப்பான உறவாடல், உரை யாடல், கற்றவர்கள் தந்த கனிந்த அனுபவங்கள் பாடங்களாக உள்ள நம்பிக்கை ஊட்டும் நூல்கள் - நகைச்சுவை உணர்வுடன் கூடிய காட்சிகளின் மூலம் கவலையை விரட்டும் கருவிகளாகட்டும்.


இவற்றால் நிச்சயம் நமது ஊரடங்கு, வீட்டுக் குள் இருத்தலை மிகுபயன் உள்ளவையாக மாற்றிடலாம் - எதுவும் நம் அணுகுமுறையைப் பொறுத்ததே!


எதுவும் நம்பிக்கையில் - நம் முடிவில்தான் உள்ளது. மறவாதீர், இந்த அனுபவமும் மனிதகுலம் இதுவரை பெறாத ஒரு விசித்திர அனுபவம் என்பதை நன்கு ஆழ்ந்து எண்ணிப் பாருங்கள்.


இது தண்டனையும் அல்ல; சிறைவாசமும் அல்ல; அதேநேரத்தில், சுய கட்டுப்பாடுள்ள ‘‘பத்தியக்'' கடமையாகும் - அதுவும் நம்மையும், நம்மைச் சார்ந்தோரையும், நமது மக்களையும் பாதுகாக்க - மிகவும் எளிய - செலவில்லாத - நேரம் தாராளமாகக் கிடைக்கிறது என்று எண்ணி செலவழிப்பவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.


அதேநேரத்தில், அன்றாடம், தொழில் செய்து கூலி வாங்கி ஜீவனம் நடத்தும் நம் ஏழை, எளிய சகோதர, சகோதரர்கள் நிலைபற்றி எண்ணும் போது, உண்ணும் உணவு பசியற்ற நிலையில் - ருசியற்றுத் தெரிகிறது! அதுதான் வேதனை!!


நம்மால் முடிந்தவரை அத்தகையோருக்கு இந்த இடைக்கால இக்கட்டிலிருந்து விடியலை ஏற்படுத்த நமது பங்களிப்பை நாம் - வாய்ப்பும், வசதியும் எந்த அளவுக்கு உதவிட இடந்தருமோ அந்த அளவு செய்திட முன்வருதலும் அவசியம்.


‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்


தொகுத்தவற்றுள் எல்லாம் தலை' - குறள் 322.


என்ற குறள் தந்த வள்ளுவன், அறத்தைப் பொதுமையாக்கி, தலை சிறந்த அறம் இதுவே என்று போதித்த பண்பாட்டிற்குரியவர்கள் என்ப தால், பகுத்துண்பதில் உள்ள மகிழ்ச்சி வேறு எதி லும் கிடைக்காத ஒப்பற்ற தனி மகிழ்ச்சி அல்லவா?


இயற்கை விதி என்பது அறிவியலை அடிப் படையாகக் கொண்டதே என்பதை ஆழ்ந்து சிந்தித்தால் எவருக்கும் புரியும்.


24 மணிநேரமும் இரவே என்பது ஒரு நாள் அல்லவே!


இரவு முடியும் நேரத்தில், காலையில் வெள்ளி முளைத்து விடியும் நேரமாகி, பொழுது விடியா மலா போகும்? வெளிச்சம் கிடைக்காமலா போகும்?


தொடக்கம் என்றால், முடிவும் உண்டு என்பது தான் உண்மை;


நமக்குள்ள பகுத்தறிவினால் சிந்தித்துப் பய மற்றுத் தெளிவுடன், துணிவுடன் வாழக் கற்றுக் கொள்ளவேண்டும்.


வாழ்க்கையில் துன்பமே எப்போதும் தொடரு வதில்லை - அதுபோல இன்பமே நிரந்தரமும் இல்லை.


இடர் எதுவரினும் அதைத் துணிவுடன் எதிர் கொண்டு மீண்டு வர முடியும் - வருவோம் என்ற நன்னம்பிக்கைதான் நம்மை உயர்த்தும்.


அச்சமின்மைதான் நோய் எதிர்ப்புச் சக்திக்கு அடிப்படையும்கூட என்பது நாமறிந்த மனோ தத்துவப் பாடம்.


வரலாற்றைப் புரட்டுங்கள்!


தன் முன்னால் நஞ்சை நீட்டியபோதும், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து பின்வாங்காத துணிவுள்ள கொள்கை மாவீரன் சாக்ரட்டீசைப் பற்றிப் பேசுகிறோமே - அவரது அறிவு மொழி களை இந்த நேரத்தில் சற்றே நினைவூட்டிக் கொள் ளுவோம்.


‘‘துணிவு என்பது இயல்பாக அமைவது - அது கற்றுத்தரப்படுவதல்ல.''


‘‘உங்கள் உள்ளம் அழகானதாக இருந்தால், நீங்கள் காணும் காட்சியும் அழகானதாக இருக்கும்.''


‘‘துணிவும், அறிவும்மிக்க உள்ளம், வெளி உலக பாதிப்பினால் கலக்கமோ, குழப்பமோ அடைவ தில்லை'' - சாக்ரட்டீஸ்.


‘‘நம்பிக்கை என்பது ஒரு நாளில் உதிர்ந்துவிடும் மலராக இருக்கக்கூடாது; மேலும் மேலும் பூக் களை தோற்றுவிக்கக் கூடிய செடியாக இருக்க வேண்டும்'' - சீனத்து அறிஞர் கன்பூஷியஸ்.


‘‘மூட்டைத் தூக்கும்போது நான் பாரத்தினால் கஷ்டப்பட்டிருப்பேனே  தவிர, வெட்கத்தினால் ஒருபோதும் துன்பப்பட்டதில்லை.'' - தந்தை பெரியார்


எனவே, எதையும் வென்றெடுக்கலாம், பகுத் தறிவு என்ற ஒப்பற்ற ஆயுதம் நம் கையில் இருக் கையில் நமக்கேன் பயம்!


வீட்டுக்குள் இருக்கும் நாம் கூட்டுக்குள் ஓய் வெடுக்கும் பறவைகள்தான்!


மறவாதீர், மீண்டும் பறப்போம்! நிச்சயம் பறப்போம்!!


No comments:

Post a Comment