40 கிலோ மீட்டர் நடக்கும் 10 லட்சம் பெண்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 21, 2020

40 கிலோ மீட்டர் நடக்கும் 10 லட்சம் பெண்கள்

 


 


- எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன்



மகாராஷ்டிராவின் விதர்பா பகுதியில் 1990கள் முதலே, கட்டுபடியாகாத வேளான்மையின் இறுதிக் கட்டத்தில், தாக்குபிடிக்க முடியாமல் பயிர்களைப் பாதுகாக்க வாங்கி வைத்திருந்த நஞ்சை, விவசாயிகள் பருகி மடிந்தார்கள். அகோலா, அமராவதி, நாக்பூர், வார்தா, யவத்மால், காதிரிச்சோலி, புக்தானா, வாசிம் என இவை அனைத்தும் அடங்கியது தான் விதர்பா பகுதி. இந்தியாவிலேயே விதர்பா பகுதி தான் விவசாயத் தற்கொலையின் உச்சத்தை சந்தித்தது.


விதர்பாவின் பகுதியில் ஊரகப் பகுதிகளில் மொத்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விதவைகள் வாழ்கிறார்கள். தங்கள் கணவர்களின் தற்கொலைக்குப் பிறகு எஞ்சிய நிலத்தை விற்று, கடன்களை அடைத்து விட்டு, வாரத்தில் முழுவதுமே கூலி வேலைக்குச் செல்வதும் தான் இவர்களின் வழக்கம். கரோனா ஊரடங்கால் அவர்கள் அனைவருமே வேலைக்குச் சென்று ஒரு மாத காலம் ஆகப்போகிறது. பட்டினியின் பேரலை இவர்களை விழுங்கிக் கொண்டு வருகிறது.


ரேசன் கடையில் விலைக்கு வாங்கிய கோதுமை, அரிசி தவிர, வேலை செய்த வயல்களில் கிடைத்த சோளத்தை வைத்துக் காலத்தை கடத்துகிறேன் என் கிறார் சாரதா. சாரதாவின் வீட்டு அருகில் சில காய்கறிச் செடிகள் இருப்பதால் குழந்தைகளுக்கு எதையோ பொங்கிப் போட முடிகிறது.


மார்ச் 26 அன்று மத்திய அரசு ஒரு குடும்பத்திற்கு அய்ந்து கிலோ தானியங்கள், ஒரு கிலோ பருப்பு அறிவித்திருக்கிறது. ஆனால் மகாராஷ்டிரா அரசு இதற்கு ஒரு முட்டுக்கட்டை போட்டது. வழக்கமாக இந்த மாதம் ரேசன் கார்டுகளில் வாங்க வேண்டிய பொருட் களைப் பணம் கொடுத்து வாங்கினால் தான், இந்த இலவசப் பொருட்கள் வழங்கப்படும் என்கிற அறிவிப்பு ஏழைகளின் தலையில் பெரும் சுமையாக வந்து விழுந்தது. அது மட்டுமின்றி ஏப்ரல் இரண்டாவது வாரம் வரை இலவச அரிசி பற்றிய எந்த தகவலும் கிராமங்களில் உள்ள நியாய விலைக் கடைகளுக்கு வந்து சேரவில்லை. இது தான் தற்கொலையின் தலைநகராக திகழும் ஊரக மகாராஷ்டிரத்தை அந்த அரசுகள் ஆளும் லட்சணம்.


மத்திய அரசு விவயாசக் குடும்பங்களுக்கு ரூ.2000 அறிவித்திருக்கிறது. இந்தப் பணம் அவர்களின் வங்கி கணக்குகளில் வந்து விடுகிறது. இது தவிர இந்த பகுதி யின் விதவைகளுக்கு ரூ.600ம் அவர்களின் வங்கி கணக்குகளில் வந்துள்ளது. அவர்களுக்குக் கடந்த ஒரு மாத காலமாக வேலையில்லை, வருமானமில்லை, நியாய விலை கடைகளுக்கு இலவச அரிசி-கோதுமை பற்றிய தகவலே இல்லை ஆனால் அவர்களுக்குத் தான் வங்கிக் கணக்கில் பணம் வந்துவிட்டதே என்று நீங்கள் நினைக்கலாம்.


இந்த பகுதியின் கிராமங்களில் இருந்து நீங்கள் ஒரு வங்கிக்கோ, ATM எந்திரத்திற்கோ செல்ல வேண்டும் என்றால் சிலருக்கு 15 - 20 கிலோ மீட்டரும். பலருக்கு அது 30-40 கிலோ மீட்டரும் தொலைவு உள்ளது. வழக்கமான நாளில் பெண்கள் பேருந்துகளில் ஏறி வங்கிகளுக்கு அல்லது ATMகளுக்கு சென்று பணத்தை எடுத்து வாங்க வேண்டிய வீட்டுச் சாமான் களையும் வாங்கி வருவார்கள்.


விதர்பாவின் இந்தப் பத்து மாவட்டங்களில் ஊரடங் கிற்கு பின், ஏப்ரல் மாதத்தில் தினசரி, பெண்கள் கூட்டம் கூட்டமாக 20 முதல் 40 கிலோ மீட்டர் வரை நடந்து சென்று தங்கள் பணத்தை மீட்டு வருகிறார்கள். 10 லட்சம் பேர் அங்கும் இங்குமாக பல திசைகளில் நடந்து கொண்டேயிருக்கும் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள்.


பணம் கிடைத்தாலும் பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. நல்ல விலை கிடைப்பதால் நகரங்கள் நோக்கிப் பொருட்கள் சென்று விடுவதால் சிறு நகரங்களின் கடைகளில் பொருட்கள் இல்லை. நகரங்களின் நிலையை மட்டுமே கரோனா செய்தியாக வெளியிடும் நாளிதழ்கள், தொலைக்காட்சிகள், கிராமங் களை அரசை போலவே கைவிட்டன என்கிறா ஷிண்டே என்கிறார் முதியவர். “எங்கள் வெளிச்சம் எல்லாம் பிடுங்கப்பட்டுவிட்டது, நாங்கள் இருட்டில் வாழ்கிறோம்” என்கிறார் பையாஜி காய்க்வாட்.


இது கரோனாவிற்கு சற்றும் சளைக்காத கொடிய சூழல். இது ஒரு மனிதனின் முட்டாள் தனம் உரு வாக்கும் பிரத்யேக சூழல். டிஜிட்டல் இந்தியா என்பது கேட்பதற்கு பளபளப்பாக இருக்கலாம். ஆனால் ஒரு சிறு அசைவில் இந்தியாவின் கிராமங்களை இருளில் மூழ்கடிக்கும் வல்லமை படைத்தது. ஒவ்வொரு கிராமத்திலும் அல்லது ஒரு கிராமத்தில் இருந்து அய்ந்து கிலோ மீட்டர் தொலைவிற்குள் உங்களால் வங்கி கிளைகளையோ அல்லது ATM இயந்திரங்களையோ நிறுவ முடியவில்லை என்றால் 'டிஜிட்டல் இந்தியா' நகரங்களுக்கான திட்டமாக மட்டுமே இருக்க முடியும்.


அதுவும் விதர்பா பகுதியில் இந்த பெண்கள் எப்பொழுது கிளம்பினாலும் குறைந்தது ஒரு 50 ATM கார்டுகள் அவர்களின் கைகளுக்கு வந்துவிடும் என் கிறார்கள். விதவைகள், முதியவர்கள் என அனை வருமே டிஜிட்டல் இந்தியாவின் பளபளப்பில் கண் கூசிக் கிடக்கிறார்கள்.


தன் கிராமத்திற்குத் திரும்பும் வழியில் சுனிதா தன் சக பெண்களிடம் “ஊருக்குப் போகும் முன் மரணம் வந்து என்னை அள்ளிக்கொண்டு சென்றால் நிம்மதி யாகிவிடும்” என்கிறாள். கிராமங்களை இந்தியா எப்படி நிர்வகிக்கிறது...? ஒரு பாணைச் சோற்றுக்கு இந்த ஒரு சோறு பதம்.


No comments:

Post a Comment