ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வயது 87. முதல் 10 ஆண்டுகள் தான் அவர்கள் வீட்டில் இருந்துள்ளார். பிறகு நாட்டிற்கு வந்துவிட்டார்.
ஒரு மனிதர் 77 ஆண்டுகள் சமூகத்திற்காய் வாழ்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாதது. உலகில் வேறெங்கும் இதற்கு உதாரணம் இருக்கிறதா என்று தெரியவில்லை.
எனினும் நம் தலைவரின் வாழ்க்கையில் அவர் கண்ட ஏச்சுகளும், பேச்சுகளும், அவமானங்களும், துன்பங்களும், நெருக்கடிகளும், போராட்டங்களும் இந்த 77 ஆண்டில் யாருக்கேனும் நடந்திருக்குமா?
ஒன்றிரண்டு பிரச்சினைகள் ஏற்பட்டாலே "நமக்கு எதற்கு?' என ஒதுங்கிக் கொள்வோரே ஓராயிரம்!
கடவுளை எதிர்த்து, மதத்தை எதிர்த்து, ஜாதியை எதிர்த்து, புராண, இதிகாசம் எதிர்த்து, இந்தியாவின் வலிமையான பார்ப்பனீயத்தை எதிர்த்து என்ன வாழ்க்கை! என்ன வாழ்க்கை!
இந்தக் கொள்கையைப் புரிந்து கொள்ளாத மக்கள் ஆசிரியரை எதிர்த்து, அவர்தம் குடும்பத்தை எதிர்த்து நாளது மேனியும், பொழுதொரு வண்ணமுமாக போயிருக் கின்றன இந்த 77 ஆண்டுகள்!
இது ஒரு பக்கம்! இதற்கு இன்னொரு பக்கமும் இருக்க வேண்டும் அல்லவா?
இந்த 77 ஆண்டுகளில் செய்த சாதனைகள், அடைந்த புகழ், பெற்ற மக்கள் செல்வாக்கு, நிறைவான பொது வாழ்வு என அது ஒரு நீண்ட பட்டியல்!
மாதத்தில் 20 நாட்கள் தமிழகப் பயணம், அதில் சில இந்தியப் பயணங்கள், வேறு சில வெளிநாட்டுப் பயணங்கள். அத்தனையும் கொள்கைப் பயணம்.
வெளியூர் பயணம் என்பது விரும்பத்தக்கது அல்ல! அது சில நேரம் சலிப்பைத் தரும்; பல நேரம் உடல் வலியைத் தரும்; அரிதாக சில நேரம் மனச் சோர்வைத் தரும்! (மனச் சோர்வு என்பதெல்லம் ஆசிரியர் அறியாதது. எனினும் பொதுவில் சில கருத்துகளை நான் எழுதுகிறேன்)
இலாபம் வரும் பயணம் கூட சில நேரம் வணிகர்களுக்கு சலிப்பைத் தரும். ஆனால் தமிழர் தலைவரின் கொள்கைப் பயணம் 77 ஆண்டுகளாய் தொடர்கிறது. நாள் முழுக்க சந்திப்புகள், எழுத்துகள், பேச்சுக்கள், கூட்டங்கள், சிந்த னைகள் இவை எல்லாவற்றிற்கும் தேவையான உழைப்பு!
ஒரு நாளில் இத்தனையையும் முடித்து இரவு 10 மணியோ, 11 மணியோ தொடர்வண்டியைப் பிடிக்க வேண்டும். அதிகாலை 4 மணியோ, 5 மணியோ அரைத் தூக்கத்தில் எழுந்திருக்க வேண்டும். அதன் பிறகு தோழர்களைப் பார்த்த உற்சாகத்தில் மீண்டும் 12 மணி நேர உழைப்பு.
நான் தலைவரைப் பார்த்துக் கேட்கிறேன்.
தலைவரே!
கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்வோம் என்று ஒரு போதும் நீங்கள் நினைத்தது இல்லையா? உங்கள் பயணத் தின் காலம் 77 ஆண்டுகள்!
எவ்வளவு நடைப்பயணம், எவ்வளவு வாகனப் பயணம், எவ்வளவு தொடர்வண்டிப் பயணம், எவ்வளவு விமானப் பயணம், இதனூடாக எத்தனை இலட்சம் கிலோ மீட்டர்கள், எத்தனை இலட்சம் மனிதர்கள் சந்திப்பு!
யப்பப்பா! இந்தச் சிறிய கட்டுரையை 2 மணி நேரம் யோசித்து எழுதவே அசந்து போகிறது. அசரத்தானே செய்யும்! 77 ஆண்டுகளை 2 மணி நேரத்தில் அல்லது ஒரு கட்டுரையில் அடக்கிவிட முடியுமா என்ன?
இவ்வளவு, இவ்வளவு துடிப்பாக இருந்த ஒரு தலைவரை ஒரு 35 நாட்கள் ஓய்வு கொடுத்து வீட்டில் இருக்க சொன்னால் எப்படி இருக்கும்?
கொள்கை புரிய வைக்காததை கரோனா புரிய வைத்தது என்று சொல்லும் அளவிற்கு இந்த வைரஸ் கடவுள் வியாபாரம் உள்பட உலகையே முடக்கிப் போட்டிருக்கிறது.
தொடக்கத்தில் பலருக்கும் எதுவும் புரியவில்லை. நாட்கள் செல்ல, செல்ல எதுவுமே புரியவில்லை.
தமிழ்நாட்டின் முதல் ஊரடங்கு மார்ச் 22 அறிவிக்கப் பட்டது. பின்னர் 2 நாட்கள் தளர்த்தப்பட்டு, இன்றுவரை தொடர்கிறது!
சிலர் ஊரடங்கு என்பதை நாடடங்கு என்கிறார்கள். ஊர் அடங்கவில்லை; நாடே அடங்கிவிட்டது என்ற பொருளில்! நாம் நாடடங்கு என்பதை உலகடங்கு என்று கூறலாம். ஏனெனில் உலகமே அடங்கிவிட்டது.
இப்படியான சூழலில் தான் நம் தலைவர் 35 நாட்கள் வீட்டில் இருக்கிறார்கள். எல்லோரும் தானே இருக்கிறோம் என்று யாரும் கேட்கக் கூடாது என்பதற்காகவே இந்த 77 ஆண்டு காலத்தை இப்போது நாம் நினைவு கூர்ந்தோம்!
எல்லோரும் குடும்பத் தலைவர்களாக இருந்த போது, ஆசிரியர் அவர்களோ மக்கள் தலைவராக இருந்தவர்; மக்களைத் தினமும் சந்திக்கும் தலைவராக இருந்தவர்.
ஆசிரியர் அவர்களின் கொள்கைப் பார்வையில், அரசியல் அணுகுமுறையில் சிலருக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். எனினும் மேற்கண்ட அவர் தம் உழைப்பில், 77 ஆண்டு கால சேவையில் ஒரு சுண்டு விரலையும் யாரும் நீட்டிவிட முடியாது.
இப்படியான அவர்களின் தொடர் வாழ்க்கையில் இந்த 35 நாட்களை அவர்கள் எப்படி கடந்தார்கள்?
ஆசிரியர் அவர்களின் எண்ண ஓட்டத்திற்கு செயல் வடிவம் கொடுக்கும் பலரில் ஒருவரான பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் என்ன கூறுகிறார் கேட்போம்!
இதுவரை அவர் முடித்துள்ள 22 மாவட்டங்களின் காணொலி கலந்துரையாடல் கூட்டத்தில் பேசியதன் தொகுப்பு:
ஊரடங்கு அறிவிப்பிற்கு முதல் நாள் இரவு வீட்டிற்குள்ளே தடுமாறி விழுந்ததில் கால் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பெரும் கட்டுடன் தஞ்சாவூரில் இருந்து சொந்தக் கிராமமான கண்ணந்தங்குடி கீழையூர் சென்று விட்டோம். எங்குமே நகர முடியாத என் வாழ்க்கையை இந்த 35 நாட்களும் நகர்த்தி அழைத்து வந்தவர் நம் தமிழர் தலைவர் தான்.
நான் மிகைப்படுத்துவதாக நினைக்க வேண்டாம். தமிழ்நாடெங்கும் நம் தோழர்களை நகர்த்தியும், முன்னெடுத்தும், உற்சாகமூட்டியும் வைத்திருப்பவர் நம் ஆசிரியர் அவர்கள் தான்.
ஊரடங்கு அறிவிக்க இருக்கிறார்கள் எனத் தெரிந்தவுடன் விடுதலையை எப்படி தொடர்ந்து நடத்துவது என ஆசிரியர் எடுத்த அந்த விரைவான முடிவு தான் தோழர்களின் மன விடுதலையைச் சாத்தியப்படுத்தி இருக்கிறது.
வெளியான அரை நிமிடத்தில் உலகம் முழுவதும் விடுதலை PDF வடிவத்தில் கொண்டு சேர்க்கப்படுகிறது. இதில் எந்த விடுதலும் இன்றி நேர்த்தியாகச் செயல்படுத்தி வரும் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் மிகுந்த பாராட்டுக்குரியவர்.
அதேபோல இந்த PDF வடிவம் பிற்பகல் 2 மணிக்குள் எல்லோர் கைகளிலும் கிடைப்பதால் உடனுக்குடன் தோழர்கள் செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது. இதில் மற்றொரு சிறப்பம்சம் இருக்கிறது. தங்கள் கைப்பேசிக்கு வரும் விடுதலை நாளிதழை நண்பர்கள் மற்றும் உறவினர் களுக்குத் தோழர்கள் அனுப்பி வருகின்றனர். இதனால் விடுதலை வாசிக்கும் புது வாசகர்கள் அதிகமாகியுள்ளனர். இதனை எதிகாலத்தில் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்றைக்கு விடுதலை தற்காலிகமாக வராமல் இருந்திருந்தால் நாங்கள் எப்படி தலைவரோடு தொடர்பில் இருப்பது, அவர்களின் அறிக்கைகளை எப்படி பெறுவது, ஆலோசனைகளை எங்கே பெறுவது?
எப்போதும் ஆசிரியரின் பயண ஓட்டத்தில் பின்னால் இருப்போம்; இப்போது மன ஓட்டத்தின் பின்னால் இருக்கிறோம்!
நீண்ட நெடிய காலங்கள் வீட்டில் இருக்க வேண்டிவரும் என உணர்ந்த தமிழர் தலைவர் அவர்கள், உடனடியாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கத் தொடங்கினார்கள்.
உற்சாகமாக இருங்கள், கவனமாக இருங்கள், விழிப்புணர்ச்சி முக்கியம், அரசாங்கம் சொல்வதைக் கேளுங்கள் எனப் பல்துறைச் சார்ந்த அறிவிப்புகளை ஆசிரியர் கூறினார்கள்.
கரோனா தொற்று என்றால் என்ன? அதன் ஆபத்து என்ன? மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் யாவை? என்பது குறித்தெல்லாம் அறிவுறுத்தினார்கள்.
உழைப்பு இல்லை, ஊதியம் இல்லை. சிக்கனமாக இருங்கள். எப்போதும் இருக்கும் சிக்கனம் அல்ல; அதையும் தாண்டிய சிக்கனம் வேண்டும் என்றார்கள்.
நாம் கொள்கை பேசுபவர்கள் தான். அதுதான் நம் வாழ்வு, அதுதான் நம் மூச்சு. அதுதான் இம்மக்களின் நெடுங்கால நல்வாழ்வுக்கு அடித்தளமிட்டது. எனினும் இந்த நேரத்தில் அந்த பகுத்தறிவ பிரச்சாரத்தைக் கூட சற்று ஒதுக்கி வைத்துவிட்டு குறுகிய கால பிரச்சினையான இந்த கரோனா சிக்கலுக்கு முக்கியத்துவம் கொடுத்து சிரமப்படும் மனிதர்களுக்கு உதவி செய்யுங்கள் என்றார்கள்.
மத்திய, மாநில அரசுகளைப் பாராட்டியும், தேவைப்படும் போது இடித்துரைத்தும் எழுதினார்கள். அதன் மூலம் நமக்கொரு தெளிவு கிடைக்க செய்தார்கள்.
வழக்கமான வாழ்வியல் சிந்தனைகள், வழக்கத்தை விடவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. இதுவரை விடுதலை வாசிக்காதவர்களும் இந்த வாழ்வியல் சிந்தனைகள் குறித்துப் பாராட்டிய போது மேலும் உற்சாகம் பெற்றோம்.
விடுதலையில் எழுதினால் மட்டும் போதுமா? அதையும் கடந்து என்ன செய்யலாம் என ஆசிரியர் யோசித்தார்கள். தோழர்கள் யாரும் மனச் சோர்வு அடையக் கூடாது, எல் லோரும் உற்சாகமாக இருக்க வேண்டும், பொறுப்பாளர்கள் அனைவரும் தோழர்களிடம் பேசுங்கள்; நானும் பேசுகிறேன் என உற்சாகம் தந்தார்கள். சொன்னவாறே தமிழ்நாடு முழுக்கத் தோழர்களிடம் பேசி, குடும்ப உறுப்பினர் ஒவ் வொருவரின் நலம் குறித்தும் கேட்டறிந்தார்கள்.
குறிப்பாகப் பெரியார் பெருந் தொண்டர்களிடம் அன்பொழுகப் பேசி அவர்களின் ஆரோக்கியத்தை அதிகரித்தார்கள். மேலும் பொள்ளாச்சி பரமசிவம் (81), இராசகிரி தங்கராசு (97) போன்றோரின் பிறந்த நாட்களில் அவர்களுக்கு வாழ்த்துக் கூறி, குடும்பத்தினருடனும் பேசியிருக்கிறார்கள். இப்போது உள்ள சூழலில் பேசாவிட்டாலும் யாரும் எதிர்பார்க்கப் போவதில்லை. எனினும் பிறர் எதிர்பாராததையும் செய்வது தானே கழகத் தலைவரின் வழக்கம்.
இதுமட்டுமா எப்போதும் போல எழுந்திருங்கள், இது விடுமுறைக் காலமல்ல, சுறுசுறுப்பாய் இயங்குங்கள், உடற்பயிற்சி செய்யுங்கள், புத்தகம் படியுங்கள், அதைக் குறிப் பெடுங்கள், அவற்றைப் படித்ததில் பிடித்தது எனத் தலைப் பிட்டு விடுதலைக்கு அனுப்புங்கள் என எத்தனை எத்தனை வேலைத் திட்டங்கள்; அத்தனையும் காலப் பொக்கிசங்கள்!
தவிர இயக்கத் தோழர்களின் முகவரிகள், கைப்பேசி எண்கள் மற்றும் அனைத்துக் கட்சி நண்பர்களின் விவரங் களையும் சேகரித்துக் கணினி மூலம் பாதுகாக்கும் பணியை யும் முடுக்கிவிட்டார்கள்.
பிறருக்கு மட்டும் சொல்பவர் கழகத் தலைவர் அல்லவே! முதலில் செய்பவர் அவரே! தனது அன்றன்றைய அட்ட வணையை அழகாய் தொகுத்துத் தந்ததை நாம் கண்டோமே!
அதிகாலை எழுதல், ஒரே நாளில் இரண்டு முறை நடைப்பயிற்சி, கணக்கற்ற நூல்களைக் கணினியில் கோர்த்தல், பின்னர் அழகுற அடுக்குதல், அய்யாவின் "டைரி" எழுத்துகளை நூலாக்கும் பெரு முயற்சி, காலை அரை நேரம் விடுதலைப் பணிகள், குடும்பத்தினருடன் சிறிது நேரம் அளவளாவல் என முழு நேரமும் செயல் திட்டங்களால் நிரம்பி மகிழ்கிறது.
மேலும் ஒரு அறிக்கையில் 21 அம்சத் திட்டம் எனப் பலப்பல அறிவிப்புகள். குறிப்பாக இந்த இக்கட்டான நேரத்தில் குழந்தைகளை எப்படி பராமரிப்பது, அவர்களின் அறிவுத் திறனுக்கு என்ன செய்வது, எப்போதும் உற்சாகமாக வைத்துக் கொள்வது எப்படி என எண்ணற்ற கருத்துப் பெட்டகங்கள்!
அதனைத் தொடர்ந்து தோழர்களைப் பார்க்க வேண்டும், காணொலி வாயிலாக சந்திப்பை ஏற்படுத்துங்கள் என்றார்கள்.
அதன் விளைவாய் முதன் முதலில் உருவானது தான் தலைமைச் செயற்குழுக் கூட்டம். அதனைத் தொடர்ந்து, பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் கூட்டம், பின்னர் தலைமைக் கழகச் சொற்பொழிவாளர்கள் கூட்டம்.
இதன் மூலம் தோழர்களைப் பார்த்த மகிழ்ச்சிப் பெரு வெள்ளம் நம் மக்கள் தலைவருக்கு! ஒவ்வொருவரையும் நலம் விசாரிப்பது, தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்தால் அதைக் கேட்டறிவது என எப்போதுமே இருக்கும் இயல்பான விசயம், இப்போது இரட்டிப்பானது!
எனக்குக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதை ஆசிரியர் அவர்கள் விசாரிக்கிறார்கள். அடுத்தது எப்போது மருத்துவமனைக்குப் போக வேண்டும் என்று கேட்கிறார்கள். தேதி சொல்கிறேன். சரியாக அந்த நாளில் அழைத்து மருத்துவமனை சென்றீர்களா? என்ன சொன்னார்கள்? எனக் கேட்ட போது, எனது உணர்வுகள் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். அதுதான் தமிழகமெங்கும் தோழர்களிடம் இருக்கிறது.
தவிர பெரியார் பெருந் தொண்டர்கள் சிலர் மறைந்த நிலையில் வழக்கம் போல அந்தத் தோழர்களின் சிறப்புகளை எடுத்துக் காட்டி இரங்கல் அறிக்கை எழுதுவதுடன், தொடர் புடைய குடும்பத்தினரை அழைத்து வீட்டில் இருக்கிற அனைவரிடம் பேசும் ஆசிரியரின் அந்தச் சிறப்பியல்பு எப்போதும் உள்ளது தான் என்றாலும், இந்தச் சூழ்நிலையிலும், எந்த ஒன்றையும் விடுபடாமல் செய்யும் அந்த மாண்பு முன்மாதிரிதானே!
பல்வேறு நாடுகளில் வசிக்கும் இயக்கத் தோழர்கள் மற்றும் நண்பர்கள் ஆசிரியர் அவர்களைத் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தும், அன்பைப் பரிமாறியும் வரு கின்றனர். தவிர தமிழக அளவிலான தலைவர்களும், மாவட்ட அளவிலான அனைத்துக் கட்சி நண்பர்களும் பரஸ் பரம் நலம் விசாரித்துக் கொள்கின்றனர். அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் பாரதி அவர்கள் ஆசிரியரிடம் நலம் விசாரித்து, அதன் பூரிப்பைத் தம் முகநூலில் பகிர்ந்துள்ளார்.
அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகி பேராசிரியர் அருணன் அவர்களின் "காலந்தோறும் பிராமணியம் நூலின் 8 பாகத்தையும் படித்த தமிழர் தலைவர், அந்நூலின் சிறப்பு அம்சங்களைப் பேராசிரியர் அருணன் அவர்களிடம் எடுத்துக் கூறி, 9 ஆவது பாகத்தையும் எழுத வேண்டும் என அன்போடு கேட்டுக் கொண்டார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் இந்தப் பாராட்டு எனக்கு உத்வேகத்தைக் கொடுத்தது என அவரும் தம் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்நூல் குறித்த செய்தியை அனைத்துக் காணொலி கூட்டத்திலும் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் விரிவாக எடுத்துரைப்பார்கள்.
பொதுவாகவே தமிழர் தலைவர் அவர்கள், 21 ஆம் நூற்றாண்டு பெரியார் நூற்றாண்டு என்று சொல்வார்கள். அதற்கேற்ப பல ஆண்டுகளுக்கு முன்னரே இதற்கான பணிகள் நிறைவேறி வருகின்றன. இதற்கிடையில் கரோனா சூழல் மக்களை மேலும் சிந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உலகம் முழுக்கப் பூட்டிக் கிடக்கின்றன. அங்கே விழாக்கள் நடத்தினால் காவல்துறை அனுமதி மறுக்கிறது.
ஏற்கெனவே திட்டமிட்ட திருமணங்கள் ஆங்காங்கே நடைபெறுகின்றன. ஆனால் 50 பேருக்கும் குறைவாகவே பங்கேற்கின்றனர். அதேநேரம் கரோனாவுக்குப் பின்னர் கடுமையான பிரச்சாரப் பணி இருக்கிறது என்பதையும் ஆசிரியர் அவர்கள் நினைவு கூர்ந்தே வருகிறார்கள்.
இந்நிலையில் உலகப் புத்தகத் தினத்தை முன்னிட்டு குறிப்பிட்ட சில நூல்களுக்கு (நூல்களின் பட்டியல் விடுதலை யில் இருக்கிறது) 50 விழுக்காடு கழிவு வழங்கப்படும் எனத் தமிழர் தலைவர் அறிவித்துள்ளார்கள். ரூபாய் 3 ஆயிரம் பெறுமானம் உள்ள நூல்கள் ரூபாய் ஆயிரத்து அய்நூறுக்கு வழங்கப்படுகிறது. இப்போது பெயரை மட்டும் பதிவு செய்து, நூல்கள் வாங்கும் போது பணம் செலுத்தலாம். இந்த வாய்ப்பு இம்மாத இறுதி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமும் சென்னை பெரியார் திடல் அலுவலகம் செல்வதைப் போல, வீட்டின் கீழே உள்ள அலுவலகத்திற்கு காலை உணவுக்குப் பின் வந்து, அனைத்து வேலைகளும் முடிந்தவுடன் பிற்பகல் 2 மணிக்கு மதிய உணவுக்குச் செல்கிறார் தமிழர் தலைவர்.
நேற்றைய தினம் கூட வழக்கறிஞர் அணி மற்றும் மாநில இளைஞரணி காணொலி கூட்டத்தில் பங்கேற்று தோழர் களுக்கு வழிகாட்டும் உரை நிகழ்த்தி உற்சாகமூட்டினார்.
ஆக ஊரடங்கு இல்லாத நிலையில் தமிழர் தலைவரின் செயல்பாடுகள் எப்படி இருக்குமோ அதில் கிஞ்சிற்றும் குறையாமல் இந்த 35 தினங்களில் இருக்கிறது.
கடவுள், மதம், ஜாதி எதிர்ப்பு மட்டுமல்ல; இதுபோன்ற இக்கட்டான நேரத்தில் பலநூறு குடும்பங்களை வழிநடத்தும் தலைவரும் வேண்டும் தானே!
அந்தத் தலைவர் தான் ஆசிரியர் கி.வீரமணி!
-வி.சி.வில்வம்
No comments:
Post a Comment