பெரியாருக்குப் பின் திராவிடர் கழகம்! - 2 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 20, 2020

பெரியாருக்குப் பின் திராவிடர் கழகம்! - 2









கம்யூனிஸ்ட் கட்சி பேராசிரியர் ஒருவரின் கருத்து!


‘‘காலந்தோறும் பிராமணியம்‘’ எனும் வரிசையில் எட்டாம்  தொகுதியில் பக்கம் 431 முதல் 465 முடிய 35 பக்கங்களில் ‘‘சமூக சீர்திருத்தம் - திராவிட இயக்கம் (தி.க.)" எனும் தலைப்பில் மிகச் சிறப்பாகத் தொகுத்துக் கொடுத்துள்ளார் பேராசிரியர் அருணன்.


பொதுவுடைமை இயக்கத்தைச் சேர்ந்த - இந்தத் தலைமுறையின் முக்கிய ஆய்வாளர் கண்ணோட்டத்தில் திராவிடர் கழகம்பற்றிய மதிப்பீடு மிகவும் முக்கியமானது. தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கழகம் ஆற்றிய பணிகள் தொடர்பாக - அவர் கண்ணோட்டத்தில் சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளதில் நமக்கு மாறுபட்ட கருத்துகளும், தகவல்களும் உண்டு என்றாலும், (விமர்சனத்தை நாம் வரவேற்கக்  கூடியவர்கள்தான்) பொதுவாக திராவிடர் கழகம்பற்றிய சிறப்பான பதிவுகள்! அவசியம் பொதுநலவாதி களும், ஆய்வாளர்களும், கழகத்தினரும் அறிந்து கொள்ளவேண்டிய திராவிடர் கழகம் குறித்த அந்தப் பகுதிகள் தொடர்ச்சியாக ‘விடுதலை'யில் வெளியிடப்படு கின்றன, படியுங்கள் - பயனுள்ளது!


- ஆ-ர்


நேற்றைய தொடர்ச்சி வருமாறு:


சட்டத்தை நிறைவேற்றியது ஜெயலலிதா அரசு. அதற்கு ஜனாதிபதியின் - மத்திய அரசின் - ஒப்புதலைப் பெற வேண்டியிருந்தது. அந்தப் பணியிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார் வீரமணி. 1993 டிசம்பரில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் தராமல் இழுத்தடித்து வந்தது. தலைவர்கள் தங்கள் அக உணர்வுக்கு இடம் தராமல் டில்லி சென்று ஜனாதிபதியையும், பிரதமரையும் இது விஷயமாகச் சந்தித்துப் பேச வேண்டும் என்கிற ஆலோசனையைச் சொன்னவரும் வீரமணியே. அதன்படி முதல்வர் தலைமையில் டில்லி சென்ற தூதுக் குழுவில் இடம் பெற்ற வீரமணி 1994 ஜூனில் பிரதமர் பி.வி.நரசிம்மராவைச் சந்தித்து தங்களது நோக்கத்தை விளக்கினார். முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கையும் சந் தித்து ஆதரவு கோரினார். இப்படியெல்லாம் நெருக்கு தல் தந்த பிறகுதான் காங்கிரசின் மத்திய அரசு இறங்கி வந்து ஜூலை மாதம் அந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் தந்தது.


இன்னொரு வேலை பாக்கி இருந்தது. அதாவது இந்தச் சட்டத்தை அரசியல் சாசனத்தின் 9வது அட்ட வணையில் சேர்க்க வேண்டியிருந்தது. அப்படிச் சேர்த்துவிட்டால் அதன் செல்லுபடியாகும் தன்மை பற்றி நீதிமன்றம் தலையிட முடியாது. இது அரசியல் சாசனத்தை திருத்தும் வேலை. இதற்குப் பல தரப்பினர் ஆதரவு வேண்டும். இதற்காகப் பல கட்சியினருக்கும் ஆதரவு கேட்டு ஆகஸ்டு மாதம் தந்தி அனுப்பினார், டில்லி சென்று ஆதரவு திரட்டினார். அந்த மாதம் இறுதியில் அது 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்ட செய்தி வந்ததும்தான் ஓய்ந்தார். பொதுவாக அந்த அட்டவணை நிலச்சீர்திருத்தச் சட்டங்களைப் பாது காக்க உருவாக்கப்பட்டது. அதில் இடஒதுக்கீடு சட்டத் திற்கும் பாதுகாப்புத் தேடிய புதுமையைச் செய்ததில் தி.க.விற்கும், அதன் பொதுச்செயலாளர் வீரமணிக்கும் தனித்த, சிறந்த பங்களிப்பு இருந்தது. நில ஒதுக்கீடு பொருளியல் நீதி என்றால், இடஒதுக்கீடு சமூகநீதி. நீதிமன்றங்களிலிருந்து இத்தகைய நீதியைக் காக்கத் தான் இந்த அட்டவணை என்றால் சமூக நீதிக்கும் அது பொருந்தும்.


நீதிபதிகளின் கொடும்பாவி கொளுத்தப்பட்டது


கொடுமை என்னவென்றால் பிராமணியம் அப் போதும் அடங்கவில்லை. அது இந்தச் சட்டத்தை எதிர்த்தும் உச்சநீதிமன்றம் போனது. அரசியல் சாசனப் படி நீதிமன்றம் தலையிடக்கூடாத 9வது அட்டவ ணையில் உள்ள அந்தச் சட்டத்தில் அது மறைமுகமாகத் தலையிட்டது; இடஒதுக்கீடு 50%க்கு மேல் போகக் கூடாது எனச் சொல்லியது. அப்படியும் தமிழக அரசு பிரச்சினையைத் தீர்க்க ஒரு குறுக்குவழியைக் கண்டு பிடித்தது. அதன்படி 50% இடஒதுக்கீட்டைப் பின் பற்றினால் பொதுப்போட்டியில் வருகிற மாணவர் களுக்கு எவ்வளவு இடம் கிடைக்குமோ அவ்வளவு இடங்களைக் கூடுதலாகச் சேர்த்தது. இதன் காரணமாக ஒட்டுமொத்தமாக பார்த்தால் மொத்த இடஒதுக்கீடு 69% ஆக இருக்காது. எனினும், பெருமளவுக்கு விஷ யத்தை சரி செய்தது. இதையும் பொறுக்கவில்லை பிராமணியம். இதை எதிர்த்தும் உச்சநீதிமன்றம் போனார்கள் பிராமணியவாதிகள். அவர்களுக்கு ஆதர வாகவே அதுவும் தீர்ப்புச் சொன்னது.


வீரமணி வெளியிட்ட ஓர் அறிக்கை (விடுதலை 22-8-96) விஷயத்தை இப்படி தெளிவுபடுத்தியது - “சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்குள் இரு உயர்சாதி நீதிபதிகள் தொடர்ந்து சட்டவிரோதமான தீர்ப்பை, கடந்த இரண்டு ஆண்டு களாகத் தந்தது போலவே மூன்றாவது முறையாக இந்த ஆண்டும் தந்துள்ளனர். சட்டப்படி இப்படி அவர்கள் தீர்ப்பு தந்தது முறையற்றது; சட்ட விரோதமானது. காரணம், நமது தமிழகச் சட்டத்தை (94ன் சட்டம் 45) நிறுத்தி வைக்கவோ, தவறு என்றோ அவர்கள் கூறாது 50 சதவீதத்தினையே பின்பற்றி ஆக வேண்டும் என்று நிர்ப்பந்திப்பதற்கு எந்த முகாந்திரமும் சட்டத்தில் கிடையாது. இதனை நாம் தொடர்ந்து பழைய (அ.தி. மு.க.) அரசுக்கும் இப்போதுள்ள (தி.மு.க.) அரசுக்கும் சட்டரீதியாகவே எடுத்துக்கூறி வருகிறோம். கூடுதல் இடங்களைத் தர வேண்டாம் என்று கூறியதை முந் தைய அரசு அலட்சியப்படுத்தியது. இருமுறை அந்த ஆணையை எரித்து முன்பு அந்த நீதிபதிகளுக்கும் தமிழக அரசுக்கும் அனுப்பினோம். இப்போது மூன்றா வது முறையாக பிடிவாதமாக, பெரிய வழக்கறிஞர்கள் வாதங்களையெல்லாம் கேட்டபிறகும், அதேபோலத் தீர்ப்பு வழங்கியதால் அவர்களது உள்ளக்கிடக்கையை, அவர்களது உண்மையான சாதிய மனப்போக்கை உலகம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் வரும் 23ந் தேதி (23.8.1996) தமிழ்நாடு முழுவதும் தவறான, சட்டவிரோதமான ஆணை பிறப்பித்து சுப்ரீம் கோர்ட்டின் மரியாதையை கீழே இறக்கி, சமூகநீதிக்கு எதிரான நிலையைத் தொடர்ந்து எடுத்து வரும் நீதிபதிகளின் கொடும்பாவியைக் கொளுத்துமாறு அறிவித்துள்ளோம்.”


நீதித்துறையில் பிராமணியம் எப்படி ஊடுருவியிருக்கிறது என்பதற்கு இது கச்சிதமான உதாரணம். நீதித்துறையின் உச்சபட்ச அமைப்பு உச்சநீதிமன்றம். அதற்குள்ளும் பிராமணியம் சர்வசாதாரணமாக இயங் கியது. அரசியல் சாசனத்திற்கு உட்பட்டுத்தான் அது தீர்ப்புத் தர வேண்டும். இந்த விஷயத்திலோ 9வது அட்டவணையில் உள்ள ஒரு சட்டத்தை - தனது எல்லைக்கு அப்பாற்பட்ட ஒரு சட்டத்தை - தீர்த்துக் கட்ட அதை நிறுத்தியும் வைக்காமல், தவறு என்றும் சொல்லாமல் அதன் சாரத்திற்கு எதிராக மட்டும் தீர்ப்பு தந்தது! பிராமணியத் தந்திரம் என்பதை இங்கே சட் டென்று புரிந்து கொள்ளலாம். இதை அம்பலப்படுத்தி யதிலும், அதை எதிர்த்து துணிவோடு போராடியதிலும் தன்னைச் சிறப்பாக வெளிப்படுத்திக் கொண்டார் வீரமணி.


இதில் சம்பந்தப்பட்ட (அ) நீதிபதிகள் ஜீவன் ரெட்டி மற்றும் பரிபூரண அய்யங்கார். அவர்களது கொடும் பாவிகளை கொளுத்துவது என்று முடிவு செய்தது தி.க. அதை “இந்த அரசு அனுமதிக்காது. ஒரு காரியத்தில் ஈடுபடுகிறவர்கள் அதற்குரிய தியாகத்தையும் செய்து தான் தீர வேண்டும்‘‘ என்று எச்சரிக்கை செய்தார் மீண்டும் முதல்வராயிருந்த கலைஞர். அதுபற்றி யெல்லாம் கவலைப்படாது போராட்டத்தில் குதித்தது தி.க. அறிவிக்கப்பட்ட நாளில் ஆயிரக்கணக்கான தி.க.வினர் அந்த நீதிபதிகளின் கொடும்பாவியைக கொளுத்திக் கைதானார்கள். சென்னையில் வீரமணி யும் கைதானார். அவர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கா னோர் 15 நாள் காவலில் வைக்கப்பட்டார்கள்! இது வரலாற்று விநோதம்! சமூகநீதிக்காகப் போராடியதற் காக அதையே உயிர்மூச்சு எனச் சொன்ன தி.மு.க.வின் ஆட்சியில் தி.க.வினர் காராக்கிருதத்தில் அடைபட்டார் கள்!


தீண்டாமை ஒழிப்பில் பங்கு என்ன?


இடஒதுக்கீட்டில் வருமான வரம்பு கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு, மண்டல் அமலாக்கக் கோரிக்கை, 69%க்கு பாதுகாப்பு தேடிப் போராட்டம் என்பதெல்லாம் பிற்படுத்தப்பட்டோருக் கான இயக்கங்களாக இருந்தன. இவை தேவையாக இருந்தன. தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினரைப் பொறுத்தவரை அரசியல்சாசன ரீதியாகவே அவர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கு பாதுகாப்பு இருந்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களது எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டின் அளவை நிர்ணயிக்க வேண்டிய கட்டாயமும் சட்ட ரீதியாக அரசுக்கு இருந்தது. இத்தகைய நிலை பிற்படுத் தப்பட்டோருக்கு இல்லாததால் அதற்காகப் போராடியது ஒரு மகத்தான சமூகநீதிச் செயல்பாடாக இருந்தது. இதிலே முன்கை எடுத்த பெருமை தி.க.வுக்கு உண்டு.


தாழ்த்தப்பட்டோர் / பழங்குடியினரைப் பொறுத்த வரை வேறு விதமான பிரச்சினைகள் இருந்தன. மெய் யாலும் அவர்களின் சுயமரியாதை வன்புணர்ச்சிக்கு ஆளானது. நிலப்பிரச்சனை இருந்தது. வனப்பிரச்சனை இருந்தது. விதவிதமான தீண்டாமைக் கொடுமைகள் தமிழகக் கிராமப்புறங்களில் இருந்தன. தீண்டாமைச் சிந்தனை மற்றும் செயல்முறைகளை உருவாக்கி உலவ விட்டது பிராமணியமே என்றாலும் அதை இப்போதும் கிராமப்புறங்களில் நடைமுறைப்படுத்தி வந்தது இடைநிலைச் சாதியினர். அவர்களில் பிராமணரல்லாத உயர்சாதியினர் மட்டுமல்லாது பிற்படுத்தப்பட்ட சாதியினரும் உண்டு. சூத்ரதாரி பிராமணியமே என்பதை எடுத்துக் காட்டிக்கொண்டே தீண்டாமை எனும் அநாகரிகத்தை கைவிடும்படி இடைநிலைச் சாதியினர் மத்தியில் இயக்கம் நடத்த வேண்டிய பெரும் பொறுப்பு சமூகநீதி சக்திகளுக்கு இருந்தது. இதை தி.க. எந்த அளவுக்கு இந்தக் காலத்தில் செய்தது என்பதும் ஆராயத்தக்கது.


மண்டல் குழு அமலாக்கத்திற்காக மாநாடுகள் போராட்டங்கள் நடத்தும் போதே தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளுக்காகவும் சேர்ந்து குரல் கொடுத்தது தி.க. உதாரணமாக, 1986 அக்டோபரில் டில்லியில் நாடாளு மன்றம் முன் நடத்தப்பட்ட மறியல் மண்டல் அறிக்கை செயல்படுத்தலுக்கு மட்டுமல்லாது தாழ்த்தப்பட்டோரின் இடஒதுக்கீடு உயர்வுக்காகவும் நடத்தப்பட்டதாகும். அந்த மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அது உயர்த்தப் பட வேண்டும் எனும் சட்டபூர்வ அரசின் கடமைப் பாட்டை நினைவுபடுத்தி நடத்தப்பட்ட மறியலும் ஆகும்.


பூரி சங்கராச்சாரியார் இந்தக் காலத்தில் பெண் களுக்கு எதிராக மட்டுமல்லாது, தாழ்த்தப்பட்ட மக்க ளுக்கு எதிராகவும் பேசினார். தாழ்த்தப்பட்டவர் தாழ்த் தப்பட்டவராகவே இருக்க வேண்டும், அவர்கள் ஒருபோதும் பிராமணர்களுக்கு சமமாக முடியாது, அம் பேத்கர் ஓர் அறிவாளியே அல்ல, விதவைப் பெண்கள் உயிரோடு இருக்கக்கூடாது, அவர்கள் உடன்கட்டை ஏற வேண்டும்- இத்யாதி பாணியில் பேசியிருந்தார் அவர். “தீண்டாமையை ஆதரித்துப் பேசுவது இந்திய அரசியல் சட்டப்படி குற்றம். எனவே பூரி சங்கராச் சாரியைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண் டும்‘’ என்று வலியுறுத்தினார் வீரமணி. பூரியாரின் கொடும்பாவியைக் கொளுத்தச் சொல்லி தனது கழகத்தவருக்கு ஆணை பிறப்பித்தார். அதன்படி 1988 நவம்பர் 8 அன்று அந்த எழுச்சிமிகு போராட்டம் நடந்தது. சென்னையில் வீரமணியும் அதில் கலந்து கொண்டு பூரியாரின் கொடும்பாவியைக் கொளுத் தினார். ஆதி சங்கரர் நிறுவிய நான்கு மடங்களில் ஒன்று பூரிமடம். அதன் சங்கராச்சாரியாரின் அடாவடிப் பேச்சைக் கண்டித்து அவரின் கொடும்பாவியைக் கொளுத்தும் துணிச்சல் வீரமணிக்கும் தி.க.வினருக்கும் இருந்தது. வடமாநிலங்களில் இது நினைத்துப் பார்க்க முடியாத செயல் என்பது மட்டுமல்ல, தமிழகத்தில்கூட வேறு எந்த - இயக்கமும் இத்தகைய தீரத்தைக் காட்டியதாகத் தெரியவில்லை. சங்கர மடங்களின் புனிதம், சக்தி என்பதெல்லாம் வெறும் மாயை என்பது நிரூபிக்கப்பட்டது இப்படியாக.


எனினும், பிற்படுத்தப்பட்டோருக்காகப் போராடிய அளவுக்கு தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினருக்காகத் தி.க. போராடியதாகச் சொல்லமுடியாது. இந்தக் காலத் தில் இது பிற்படுத்தப்பட்டோரின் இயக்கமாகவே தோற்றம் காட்டியது. இதுபற்றி “சன்” தொலைக்காட்சியில் (31-3-94) கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு வீரமணி யின் பதிலும் முக்கியமானது. அது:


”கேள்வி : உங்களுடைய இயக்கம் உண்மையாகவே தாழ்த்தப்பட்ட மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. பிற்படுத்தப்பட்ட அல்லது பிராமணரல்லாதாருக்கு மட்டும் அது ஒரு இயக்கமாக இருந்து விடுதலையைக் கொடுத்திருக்கலாம். ஆனால், உண்மையாகவே, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் அடித்தளத்தில் இருக்கக் கூடிய மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்பதால் அந்த மக்கள் எல்லாம் இன்றைக்கு வேறு இயக்கங் களைத் தேடிப் போவதாக சில பத்திரிகைகள் எழுதி யிருக்கின்றனவே?


பதில்: பல்வேறு ஆதாரமற்ற செய்திகள் இருக் கின்றன. தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டவைகளில் இதுவும் ஒன்று. ஏன் என்று சொன்னால் பழைய காலத்துக் கொடுமைகள் இப்போது இளைய தலை முறையினருக்கு இல்லை. அந்தக் கொடுமைகள் இல்லாத காரணத்தால் அவர்கள் என்ன நினைக் கிறார்கள் என்றால் இந்த இயக்கம் மட்டுமல்ல, திரா விடர் இயக்கங்களே இந்த மக்களுக்காக ஒன்றும் செய்யவில்லை என்று பொதுவான ஒரு குற்றச்சாட்டை அந்த சமுதாய மக்கள் மத்தியிலே பரப்புகிறார்கள். சுயலாபம் காண விரும்பக்கூடியவர்கள் பலர் அதைத் தூண்டிவிட்டுச் செய்ய விரும்புகிறார்கள். அது உண்மை அல்ல என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் மட்டும் சொல்கிறேன். மற்றவைகளை எடுத்துச் சொன்னால் நீண்ட பட்டியலாகும். டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பெயராலே மராத்வாடா பல்கலைக்கழ கத்துக்கு பெயர் மாற்றம் வர வேண்டும் என்று சொன்னபோது, அந்தப் பெயர் மாற்றத்தை மராத்திய அரசாங்கம் அறிவித்த பிறகு, அங்கே மிகப்பெரிய கலவரம், ரகளை, சொத்து சூறையாடல் எல்லாமே நடந்தது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் அம் பேத்கர் அவர்கள் பெயராலே மாவட்டம், போக்குவ ரத்துக் கழகம் ஆகிய எல்லா பணிகளும் நடக்கிறது என்று சொன்னால், அதை எதிர்ப்பதற்கு ஒரு ஆள்கூட இல்லை என்றால் அதற்கு அடிப்படைக் காரணம் என்ன? உயர்சாதிக்காரர்களாக இருந்தாலும் அல்லது மற்றவர்களாக இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்குவத்தை மக்கள் மூளையிலே உண்டாக் கக்கூடிய அந்த அடிப்படைப் பணிகளைச் செய்ததே இந்த இயக்கம்தான். அதுமட்டுமல்ல, இந்தியாவில் முதல்முறையாகத் தாழ்த்தப்பட்ட ஒருவர் உயர்நீதி மன்றத்திலே நீதிபதியாக வர வேண்டும் என்று சொன் னவர் தந்தை பெரியார் அவர்கள், செய்தது தி.மு.க. ஆனால், இப்பொழுது சுலபமாக வந்து உட்காருவதால் அதைப்பற்றித் தெரிவதில்லை.”


(தொடரும்)









No comments:

Post a Comment