காரைக்குடிக்கு அருகில் உள்ள ஆத்தங்குடி என்னும் ஊரில் திராவிடர் கழகத்தின் கிளை தொடங்குவதற்கு ஏற்பாடாகி, மாலை 5.30 மணிக்குக் கூட்டம் தொடங்கியது. அப்பகுதியின் பெரிய மனிதர் ஒருவர் வேட்டையாடுவதில் வல்லவர். காட்டிற்குச் சென்று பறவைகளை, விலங்குகளைத் துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர். அப்பெரிய மனிதரின் முரட்டுத்தனம் அப்பகுதி மக்களுக்கு அந்நாளில் நன்கு தெரிந்த ஒன்றாகும். அவரின் அன்புக்கு உரியவராக விளங்கிய பாவேந்தரை அழைத்துக் கொண்டு அவர் கூட்டம் நடைபெறும் இடத் திற்கு வந்தார். சிறப்புப் பேச்சாளராக வந்த பாரதிதாசனை ஏற்பாடு செய்திருந்த இளைஞர்களுக்கு அப்பெரிய மனித ரின் வருகை ஆறுதலாக இருந்தது. காரணம் செட்டிநாட்டுப் பகுதியில் நகரத்தார் பெருமக்கள் கோயில் திருப்பணிகளில் தம் பெரும் பொருளைச் செலவு செய்பவர்கள். அவர்கள் நடுவே கடவுள் மறுப்பு, பகுத்தறிவு, தமிழ் உணர்வு பற்றிப் பாரதிதாசன்பேசினால் கூட்டம் நடக்காமல் போனாலும் போகலாம் என்பது இளைஞர்களின் அச்சத்திற்குக் காரணம்.
திராவிடர் கழகத்தின் இளைஞர்கள் ஆறு பேர். கோனாப்பட்டு மாணவர்கள் நான்கு பேர். ஆகப் பத்துப்பேர்தான் கூட்டத்திற்கு வந்தவர்கள். பொது மக்கள் யாரும் கூட்டத்திற்கு வரவில்லை. வந்த பத்துப் பேரும் பாவேந்தருக்குப் பாதுகாப்பாக மேடையில் ஏறி நின்றனர். மேடைக்கு எதிரில் பார்வையாளர் வரிசையில் யாரும் இல்லை. யாரைப் பார்த்துப் பேசுவது? என்றார் கவிஞர்.
"நீங்கள் பேசுங்கள்! உங்கள் பேச்சைக் கேட்க யாரும் அருகில் வரமாட்டார்கள். தொலைவில் உள்ள வீட்டுத் திண்ணைகள், மரத்தடியில் இருந்து கேட்பார்கள்" என்று அந்த இளைஞர்கள் கவிஞருக்கு அமைவு கூறினார்கள். அந்தப் பத்து இளைஞர்களையும் முன்புறமாக வரிசையில் அமர்த்தித் தன்மானம், பகுத்தறிவு, தமிழ் உணர்வு பற்றிப் பாரதிதாசன் உரையாற்றினார். பக்தி உணர்வாளர்களின் கோட்டையில் பகுத்தறிவுக் கருத்துக்களை பரப்பப் பாரதிதாசன்பலநாள் தங்கி இயக்கப்பணி புரிந்தவர். இவர்தம் பேச்சு, கவிதைகளில் ஈர்க்கப்பெற்ற கோனாப்பட்டு முருகு சுப்பிரமணியன், அரு.பெரியண்ணன், நாரா. நாச்சியப்பன் முதலான தமிழ் உணர்வாளர்கள் அப்பகுதியில் இருந்து உருவாகித் தமிழ்ப்பணிக்கு முன்வந்தனர். கடவுள் பற்று இல்லாத அந்த இளைஞர்களும் அவர்களின் குடும்பத்தாரும் பாவேந்தரைத் தங்கள் குடும்பக் கடவுளாக மதித்தனர். மாதக் கணக்கில் பாரதிதாசன்தங்கித் தமிழ்த் தொண்டு புரியும் இடமாக அந்தப் பகுதி பின்னாளில் மாறியது.
சுப்புரத்தின பாகவதராக மயிலம் திருமுருகனின் திரு வருள் வேண்டிச் சிந்துப் பாடல் இசைத்துக் கொண்டிருந்த கனக சுப்புரத்தினத்தைப் பாரதிதாசன் ஆக்கியவர் பாரதியார். பாரதியாரிடமிருந்து புதுப்பார்வையைப் பெற்ற பாரதிதாசன் எளிய சொற்கள், எளிய தொடர்கள் புதிய கற்பனைகள் கொண்டு மக்களையும் மொழியையும் இயற்கையையும் சமூகத்தையும் பாடும் கவிஞராக மாற்றம் பெறுவதற்குப் பாரதியார் காரணம் எனில் மிகையன்று. பாரதியாரிடமிருந்து பல்வேறு கவிதை நுட்பங்களை அறிந்து கொண்டாலும் பிற்காலத்தில் பாரதியாரை விடவும் சிறந்த படைப்புகளை வெளியிட்டு உத்திகளாலும், நுண் நோக்குப் பார்வையாலும், பாடுபொருளாலும், யாப்பு ஆளு மையாலும் குறிப்பிடத்தக்க கவிஞராகப் பாரதிதாசன் வளர்ந்தார்.
பாரதிதாசனின் பேச்சைக்கேட்டு பலர் தமிழ் உணர்வு பெற்றனர். பாரதிதாசன் கவிதைகளைக் கற்றுப் பலர் தமிழார் வம் கொண்டனர். பாவேந்தரின் கவிதை வரிகளை மேடைகளில் முழங்கிப் பலர் அரசியல் தலைவர்களாக வலம் வந்தனர். பலர் மேடைப் பேச்சாளர்களாகப் பரிணாமம் பெற்றனர். பாரதிதாசன்கவிதைகளைக் கற்றுத் தமிழ்க் கவிதைத் துறையில் பலர் புதுமை செய்தனர். அவர்தம் இல்லத்தில் தங்கிப் பாட்டு எழுதப்பயிற்சி பெற்றுப் புகழின் உச்சிக்குச் சென்ற சுரதா, வாணிதாசன், சாமிபழநி யப்பன், பொன்னடியான், புதுவைச்சிவம், அண்ணாமலை, உள்ளிட்டவர்கள் தமிழ்க்கவிதைத் துறைக்கு வாடாத பாமாலைகள் பலவற்றை வழங்கியுள்ளனர்.
"நைந்தாய் எனில் நைந்து போகும் என் வாழ்வு
நன்னிலை உனக்கெனில் எனக்குந்தானே!'
எனத் தமிழ் வாழ்வே தன் வாழ்வாகக் கொண்ட பாரதி தாசன்தம் எழுது கோலால் தமிழுக்கு உழைத்தவர்களைத் தாராளமாகப் பாராட்டினார். தமிழுக்குக் கேடு தரும் செயல்களில் ஈடுபட்டவர்களைக் கடுமையாகக் கண்டித்தார்.
தமிழ்ச் சமூகத்தில் தமக்குப் பிறகு தமிழ்க் கவிதைகளின் வளர்ச்சிக்குப் பல்வேறு கவிஞர்கள் உருவாகக் காரணகர்த் தாவாக விளங்கியவர் பாவேந்தர். பாரதியார் தமக்குப் பிறகு கவிதை வாரிசாகப் பாவேந்தரை அறிமுகம் செய்தார். பாரதிதாசன்என்ற பெரும் சுடருக்கு இணையாக அவர் காலம் வரை யாரும் தமிழ்க் கவிதைத் துறையில் கோலோச்ச இயலவில்லை. அந்த அளவு அவர்தம் கவிதை ஆளுமை மேம்பட்டு விளங்கியது. பாரதிதாசன்எனவும் புரட்சிக் கவிஞர் எனவும் தமிழக மக்களால் அழைக்கப் பெற்ற பாரதிதாசனை உலக அளவில் வாழும் தமிழர்கள் தங்கள் கவிஞராக அடையாளம் கண்டு கொண்டனர்.
பாரதிதாசனின் கவிதைப் பணியினைப் போற்றி மதிக்கும் முகமாகப் புதுக்கோட்டையிலிருந்து 1947இல் பொன்னி என்னும் இலக்கிய இதழ் தொடங்கப் பெற்றது. அந்த இதழ் பாவேந்தரின் சிறந்த கவிதைகளைத் தாங்கி வருவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. அவர்தம் கவிதையின் கருப்பொருளை மய்யமாகக் கொண்ட ஓவியங்களை மேல் அட்டையில் தாங்கி வெளிவந்தது. அந்த இதழ் பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பில் ஒவ்வொரு மாதமும் இளங்கவிஞர் ஒருவரின் படைப்பை அறிமுகம் செய்தது. பாரதிதாசன் பரம்பரை என்ற தொடரை உலகிற்கு வழங்கியது பொன்னி இதழாகும். பொன்னி வெளியிட்ட தொடரில் 48 கவிஞர்கள் இடம்பெற்றனர். யாது காரணமாகவோ அத்தொடர் தொடராமல் நின்றமை தமிழ்க் கவிதை உலகிற்கு இழப்பே ஆகும். அத்தொடரில் இடம்பெற்ற கவிஞர்கள் தமிழ்க் கவிதைத் துறைக்குப் பெரும் பங்களிப்புச் செய்ததை இங்கு நன்றியுடன் சுட்டியாக வேண்டும்.
மு. அண்ணாமலை, நாரா. நாச்சியப்பன், சுரதா, முடி யரசன், சாமி பழநியப்பன் (கவிஞர் பழநிபாரதியின் தந்தை) கோவை இளஞ்சேரன், வா.செ. குழந்தைசாமி (குலோத் துங்கன்), நாஞ்சில் மனோகரன், புத்தனேரி சுப்பிரமணியன், புதுவைச் சிவம் உள்ளிட்ட கவிஞர்கள் இத்தொடரில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
பாரதிதாசன்தாமே தம் குயில் இதழில் பல இளம் கவிஞர்களை அறிமுகப்படுத்தி, அவர்களின் கவிதைகளை வெளியிட்டு ஊக்கப்படுத்துவதில் ஆர்வம் காட்டினார். தம் காலத்திற்குப் பிறகு தமிழ்க் கவிதை உலகம் செழுமையடைய வேண்டும் என்ற நோக்கில் கவிதையில் ஈடுபாடு உடைய இளைஞர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தியதால் தமிழகத் தில் இன்று புகழ்பெற்று இருக்கும் பல கவிஞர்களை நம்மால் பெற முடிந்தது.
சமூக நடப்புகளை, இயற்கை அழகுகளை, மொழி உணர்ச்சியைப் பாடிய பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்கள் தமிழ் இலக்கிய உலகிற்குக் காப்பியங்கள், கவிதை நூல்கள், தரமான திரைப்பாட்டுகளை வழங்கிக் கவிதைக்குச் சமூகத் தில் ஓர் உயரிய இடத்தினைப் பெறச்செய்தனர்.
இன்றையத் திரைப்படக் கவிஞர்கள் அடுத்த அரசியல் தலைவர்களாகத் திரைப்படக் கதாநாயகர்களுக்கு ஆசைகாட்டும் பாடல்களை எழுதிக் கொண்டுள்ளனர். இதற்காகவே இவர்களுக்குக் கவிதைத்துறை கைகொடுக் கிறது. ஆனால் பாவேந்தரும் பாரதிதாசன்மரபினரும் தமிழ்நாட்டு மக்களின் சிக்கல்களைப் பாட்டு வடிவில் வெளிப்படுத்தினர். மொழி உணர்ச்சியும் இன உணர்ச்சியும் பெறச் செய்தனர். இந்தித் திணிப்பு, வடநாட்டு ஆதிக்கம், புராண இதிகாச காப்பிய மரபுகளை எதிர்த்துத் தமிழ் உணர்ச்சி ஊட்டும் பல பாடல்களை எழுதினர். தமிழகத்தில் தமிழ்த் தேசிய உணர்ச்சி முளைவிடக் காரணமாகப் பாரதிதாசன்பாடல்களும் அவர்தம் பரம்பரையினர் பாடல்களும் இருந்தன.
சாதி ஒழிப்பு, பகுத்தறிவு, பெண்ணுரிமை, கடவுள் மறுப்புத் தளத்தில் தந்தை பெரியார் உரைநடையில் பேசியதை, எழுதியதைப் பாவேந்தரும் பாரதிதாசன் மரபினரும் பாட்டு வடிவில் வெளிப்படுத்தினர். தமிழியக்கம் என்னும் நூலை எழுதிய பாரதிதாசன் தமிழகத்தில் தமிழுக்கு அனைத்து நிலைகளிலும் முதலிடம் இருக்க வேண்டும் என்று விரும்பினார்.
பாரதிதாசன்"கெடல் எங்கே தமிழின்நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சிசெய்க' என ஆணையிட்டவர். "சலுகை போனால் போகட்டும் என் அலுவல் போனால் போகட்டும் தலைமுறை ஒரு கோடி கண்ட என் தமிழ் விடுதலை ஆகட்டும்' என்று பாடியவர். "தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்றவர். "தமிழரின் மேன்மையை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்' என்றவர். "எமை நத்துவாய் என எதிரிகள், கோடி, இட்டழைத்தாலும் தொடேன்' என்று தன்மானம் பாடியவர். "எப்பக்கம் புகுந்துவிடும் இந்தி அது எத்தனை பட்டாளம் கூட்டி வரும்' எனும் பாவேந்தரின் முழக்கம் பகைவர்களை மருண்டு ஓடச் செய்தன.
பாரதிதாசன்சமூகத்தில் உயர்ந்த நிலைகளில் இருப்பவர் களைப் புகழ்ந்து பாடாமல் புலவன் நினைத்தால் முடி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று புரட்சிக் கவிஞராக வாழ்ந்தவர். எனவேதான் "புதுவையிலே வெடித்தெழுந்த ஊழித்தீயின் புனைபெயர்தான் பாரதி தாசன்' என்று புலவர் புலமைப்பித்தன் குறிப்பிடுவார்.
கழைக் கூத்தாடிகளையும், ஏற்றம் இறைப்பவர்களையும், வண்டி ஓட்டிகளையும், மாடு மேய்ப்பவர்களையும், பாவோடும் பெண்களையும், தறித் தொழிலாளிகளையும், உழவர்களையும், உழத்தியரையும், ஆலைத் தொழிலாளி யையும், கோடாலிக்காரனையும், கூடைமுறம் கட்டுபவர் களையும், பூக்காரி, குறவர், தபால்காரர், சுண்ணாம்பு இடிக்கும் பெண்கள், ஓவியக்காரர் எனச் சமூகத்தின் அடி நிலை மக்களை, உழைக்கும் வர்க்கத்தினரைப் பாடியவர் பாவேந்தர். தொழிலாளர்களின் தோழராகவும், பாட்டாளி களின் பாவலராகவும் விளங்கியவர். இயற்கை அழகைக் காணும்பொழுதும் அதில் உழைப்பவரின் வேதனை அவரின் மனக்கண்ணில் தெரிந்தது. உழைப்புக் கூட்டத்தை அறிமுகம் செய்யும் பொழுதும் அவர்களின் மெல்லிய காதல் உணர்வினைக்,
"கவிழ்ந்த தாமரை முகம் திரும்புமா? - அந்தக்
கவிதை ஓவியம் எனை விரும்புமா?'
என்று அவரால் பாட முடிந்தது.
ஆசிரியராக, கவிஞராக, திரைப்படப் பாடல் ஆசிரிய ராக, அரசியல் தலைவராக, பேச்சாளராக, உரையாளராக, இதழாளராக விளங்கியவர் பாவேந்தர். படைப்புகளின் வழியாக என்றும் நம் நினைவில் நிற்பவர். இளம் வயது காதலர்களின் உணர்வுகளைத் தூண்டி இரட்டை அர்த்த பாட்டெழுதும் திரைப்படக் கவிஞர்கள் நாணும்படியாக முதியோர் காதலின் மேன்மையைப் பாடியவர். இயற்கை யைப் பாடிய வகையில் வேர்ட்ஸ் வொர்த்தை விடவும் உலக அளவில் பாரதிதாசன்புகழப்படுகிறார்.
"கரும்புதந்த தீஞ்சாறாகவும், கனி தந்த நறுஞ்சுளை யாகவும்', "எடுத்து மகிழ் இளங்குழந்தையாகவும்", "இசைத்து மகிழும் நல் யாழாகவும்' தமிழைக் கண்ட பாரதிதாசன்இத் தமிழுக்கு எதிரான நிலைகள் தமிழகத்தில் இருப்பதைக் கண்டு பொங்கிப் பாடியவர். "வாணிகர் தம் முகவரியை வரைகின்ற பலகையிலே ஆங்கிலமா வேண்டும்?' என்று வினா எழுப்பியவர். கோயில்களில் தமிழ்ப் பாடல்கள் பாட வேண்டும் என்று முழக்கமிட்டவர். ஆட்சி மொழியாகத் தமிழ் மாற வேண்டும் என்றவர். தமிழ் வழிக் கல்வி பற்றிப் பாடியவர். சட்டத்துறையில் தமிழ் வேண்டும் என்றவர்.
புலவர்களைத் தமிழ்காக்க அழைத்தவர். மகளிரைத் தமிழ் காக்க வேண்டியவர். இதழியல் துறை சார்ந்தவர்களைத் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட அழைத்தவர். இளைஞர்கள் பெரியவர்கள் என அனைத்துத் தரப்பு மக்களையும் தமிழ் காக்க அழைத்த பாவேந்தரைப் போல் இன்று தமிழுக்குக் குரல் கொடுத்துப் பாட்டு இயற்ற ஆள் இல்லாத ஒரு வெற்றிடம் நிலவுகிறது.
பாரதிதாசன்காண நினைத்த தமிழகம் அரைநூற்றாண் டாகியும் இன்னும் காண்பதற்குரிய அறிகுறியே இல்லை. எருசலோம் நகரில் இருந்து வந்த இயேசு நாதருக்கு நம் தமிழ் புரிகிறது. ஆனால் சிதம்பர நடராசருக்குத் தமிழ் புரியவில்லை என்கின்றனர். எனவே வழிபாட்டு மொழிக்குப் போராட்டக் களம் காண வேண்டியுள்ளது. கல்வி மொழிக் காக நீதிமன்றப் படிக்கட்டுகளில் கைகட்டி நிற்க வேண் டியுள்ளது. ஆட்சி மொழிக்காகத் தலைமைச் செயலகத்தில் ஏங்கி நிற்க வேண்டியுள்ளது. இசை மொழிக்குச் சபாக்களில் குரல் கொடுக்க வேண்டியுள்ளது.
இவையெல்லாம் நிறைவேறித் தமிழனும் தமிழும் உலக அரங்கில் முதன்மை பெறும் நாளே பாரதிதாசன்விரும்பிய நாள். அந்த நாள் எந்த நாளோ?
No comments:
Post a Comment