இறந்தவர் இந்து - உடலைத் தூக்கிச் சுமந்தவர்கள் முஸ்லிம்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 20, 2020

இறந்தவர் இந்து - உடலைத் தூக்கிச் சுமந்தவர்கள் முஸ்லிம்கள்


இறந்தவர் இந்து - உடலைத் தூக்கிச் சுமந்தவர்கள் முஸ்லிம்கள் - இதுதான் பெரியார் மண்!


சிறுபான்மையோருக்கு எதிராக வெறுப்பைத் தூண்டுவோரே - இதற்குப் பிறகாவது நல்லுணர்வு பெறுவீர்!


சென்னை - அண்ணா நகரில் இறந்த 78 வயது நிறைந்த இந்து முதியவரை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல  அக்கம் பக்கத்தவர் எவரும் உதவிட முன்வராத நிலையில் முஸ்லிம் தோழர்கள் முன்வந்து உதவினர் என்ற செய்தி எதைக் காட்டுகிறது? பெரியார் மண் இது என்பதற்கான அடையாளம்தானே! இதற்குப் பிறகாவது சிறுபான்மையினரை எதிர்த்து வெறுப்புக் கக்கும் கூட்டத்தினர் சிந்தித்து நல்லுணர்வு - மனிதநேயம் பெறுவது அவசியம் என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  அறிக்கை விடுத்துள்ளார்.


 


அறிக்கை வருமாறு:


கரோனா தொற்று (கோவிட் 19) உலகத் தையே வாட்டி வதைத்துக் கொண்டு, லட்சக்கணக்கில் மனித உயிர்களைப் பலி வாங்கிக் கொண்டிருக்கும் நிலை, மானிட வரலாற்றில் மிகப்பெரும் கறை படிந்த அத்தியாயம்.


நாடு, இனம், மொழி, மதம், ஜாதி, ஏழை, பணக்காரன், படித்தவன் - படிக்காதவன், ஆளும் வர்க்கம், அவருக்குக் கீழே உள்ள ஆளப்படுவோர்கள் ஆகிய எல்லாவித செயற்கைப் பேதங்களை உடைத்து நொறுக்கி, அனைவரையும் அச்சுறுத்தி அனைவரும் என் தொற்றுக்கு சமமானவர் களே என்று ஆர்ப்பரிக்கும் அவல நோய் கரோனா! இந்தக் கொடிய நோயின் தாக்கத்தில்கூட, எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை லாபம் என்ற முறையில், இங்குள்ள மதவெறியர்கள், மனிதாபிமானம் ஓடோடி உதவிட வேண்டிய நேரத்தில்கூட, ஓங்கு மதவெறியை விசிறி விட்டு, மத அரசியல், வெறுப்பு அரசியலை விதைத்து அறுவடை செய்ய வீண் கனவு காணுகின்றனர்!


தமிழ்நாட்டில் தோல்வியே


 


கண்டு வருகின்றனர்



சிறுபான்மைச் சமூகத்தவர்களான இஸ் லாமிய சமூகத்தவருக்கு எதிரான ஒரு திட்டமிட்ட பிரச்சாரத்தை, சமூக வலைத் தளங்களில் பரப்பியதோடு, சிற்சில மாவட் டங்களில், அவர்களை ஒதுக்கி வைக்கும் திட்டமிட்ட செயலையும் தொடங்கி, தமிழ்நாட்டில் தோல்வியே கண்டு வருகின்றனர்.


இன்று ஒரு நெஞ்சுருகும் செய்தி! சென்னை அண்ணா நகரில் சில நாட் களுக்குமுன் இராமச்சந்திரன் என்ற முதியவர் - (வயது 78) இறந்துவிட்டார். ஊரடங்கு, வீட்டுக்குள்ளே இருந்தாக வேண்டிய கட்டாய உத்தரவு காரணமாக, அவரது உற்றார், உறவினர் எவருமே, ஈமச் சடங்கு - இறுதி அடக்க நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத இக்கட்டான சூழ்நிலை யில், செய்வதறியாது தவித்த இறந்தவரின் சகோதரர் நவநீதகிருஷ்ணன் என்பவர்  - இறந்தவரை சுடுகாட்டுக்குக் கொண்டு சென்று எரியூட்ட உதவ வேண்டும் என்று அக்கம் பக்கத்திலிருந்தவர்களிடம் கேட்டுக் கொண்டார்.


ஓடோடி வந்த முஸ்லிம் சகோதரர்கள்!


செய்தி அறிந்து உடனடியாக அப்பகுதி யிலிருந்த (அண்ணா நகர்) தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத் தோழர்கள் - சதாம் உசேன்,  முகம்மது, ஜாகீர் உசேன், சதாம் உசேன், முகம்மது அலி, நிஜாமுதீன் ஆகியோர் மனிதாபிமானத்தோடு, மத மாச்சரியத்திற்கு மரணத்தில் ஏது இடம் என்ற உணர்வுடனும், சகோதரப் பாசத்து டனும் ஓடோடி வந்து, சடலத்தைத் தூக்கிச் சென்று (Shouldered the body until the last rites were performed) இறுதியில் கடைசி ஈமச் சடங்குகள் செய்து முடிக்கும்வரை மயானத்தில் இருந்து திரும்பியுள்ளனர்.


‘இந்து' நாளிதழுக்குப் பேட்டி!


முகம்மது அலி அவர்கள் ‘இந்து' நாளிதழின் செய்தியாளரிடம் கீழ்க்கண்ட வாறு கூறியுள்ளார்:


‘‘எங்களுக்கு இறந்து போனவரிடம் நேரிடையான பழக்கமோ,  நட்போ கிடை யாது. ஆனால், அவர் மிக நல்ல மனிதர் - பண்புடன் பலரிடமும் பழகும் பான்மையர் என்று கேள்விப்பட்டுள்ளோம் - மனித நேயக் கடமையை நாங்கள் சகோதரத்துவ  உணர்வுடன் செய்துள்ளோம்'' என்று உணர்வுப் பொங்கக் குறிப்பிட்டுள்ளார்! ஒருவருக்கொருவர் அறிமுகமே இல்லாத நிலையிலும், எப்படிப்பட்ட மனிதாபிமானம் பொங்கி - மதத்திற்கான செயற்கைக் கோடு களையும்  அழித்த மகத்தான செயல் இது!


இதில் இன்னொரு எதேச்சையாக நடந்த வேடிக்கையான ஒன்று என்ன தெரியுமா?


இறந்தவரோ ராமன் பெயரைக் கொண்டவர் -


 


தூக்கிச் சுமந்தவர்களோ முஸ்லிம்கள்


 


- இதுதான் பெரியார் மண்!


இறந்தவர் பெயர் ‘இராமச்சந்திரன்' இராமன் பெயரைத் தாங்கிய 78 வயது முதியவர்! அடக்கம் செய்ய உதவியது 6 முஸ்லிம் இளைஞர்கள்.


பெரியார் மண் - இது மனிதநேயம் பூத் துக்குலுங்க, மத வேற்றுமை பாராது காலங் காலமாக, இஸ்லாமியச் சகோதரர்களும், இந்து என்று அழைக்கப்படுவோரும், அண் ணன் - தம்பிகளாக, மாமன் - மைத்துனன் என்ற நேயத்தோடு, உறவுக்காரர்கள்போல், பேதமின்றி, பெருவாழ்வு - சமத்துவம் பொங்க வாழும் மண்.


கரோனாவும்கூட குட்டிச் சொல்கிறது - மதவெறியர்களே மாறுங்கள் என்று!


படிப்பினையைக் கற்க; நிற்க அதற்குத் தக!


 


கி.வீரமணி,


தலைவர்,


திராவிடர் கழகம்


சென்னை


20.4.2020


No comments:

Post a Comment