நீதித்துறையும் தப்பவில்லையா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 4, 2020

நீதித்துறையும் தப்பவில்லையா

மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு நீதித் துறையில் தனது தலையீட்டை தற்போது தீவிரப்படுத்தியுள்ளது. நெருக்கடி காலத்தில் இருந்து நீதித்துறை அரசமைப்பு சட்டத்தையும், தனிநபர் சுதந்திரத்தையும் பாதுகாத்து வந்தது. அதற்காக எப்போதும் உறுதியளித்து வந்தது.


ஆனால், மோடி ஆட்சியில் தமது கடமைகளை செய்யாமல் நீதித்துறை விலக்கிக் கொண்டதாகவும் சுதந்திரமாகச் செயல்பட முடியாமல் போனதாகவும் முன்னாள் இந்நாள் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். சமீபகாலமாக நீதிமன்றத்தின் தீர்ப்புகள் குறித்து வெளியான செய்திகளை விட நீதித்துறை குறித்து நீதிபதிகள் வெளியிட்ட கருத்துகள் குறித்த தாக்கம் அதிகமானதாகும். குறிப்பாக சட்ட நீதி விவகாரங்களிலேயே நீதித்துறையால் தனது உறுதித் தன்மையைக் காட்ட முடியவில்லை. அதனால் மக்களும் தங்களின் பிரச்சினைக்கு நீதிமன்றம் தீர்வளிக்கும் என்ற நம்பிக்கையை இழந் துள்ளனர் என்ற கருத்து மேலோங்கியுள்ளது. இதற்குத் தொடக்கப் புள்ளி மோடி அரசு தான். நீதித்துறையில் மோடி அரசின் தலையீடு குறித்து சில முக்கியமான நடவடிக்கைகள் தக்க சாட்சியங்களாகும்.


கடந்த 2005-ஆம் ஆண்டு குஜராத் மாநில உள்துறை அமைச்சராக அமித்ஷா பொறுப்பு வகித்தார். அப்போது குஜராத் காவல்துறையிடம் விசாரணைக் கைதியாக இருந்தவர் சொராபுதீன் ஷேக். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்திய பா.ஜ.க அரசு என்கவுன்ட்டர் மூலம் சுட்டுக்கொன்றது. அதுமட்டுமின்றி சொராபுதீன் சுட்டுக்கொல்லப்பட்ட இரு தினங்களிலேயே அவரது மனைவி கவுசர் பீவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப் பட்டார்.


அப்போது போலி என்கவுன்ட்டர் மூலமே சொராபுதீன் மற்றும் துளசிராம் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், இந்தக் கொலைகளுக்குப் பின்னணியில் உள்துறை அமைச்சர் தலையீடு இருப்பதாகவும் அனைத்து எதிர்கட்சிகளும் குற்றம் சாட்டின. இதனையடுத்து இந்த வழக்கு சி.பி.அய்க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் அப்போதைய முதல்வராக பதவி வகித்த இன்றைய பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல முக்கிய அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டதால் விசாரிக்கப்படவேண்டிய சூழல் எழுந்தது.


அதனால் வழக்கு குஜராத்துக்கு வெளியே மாற்றப்பட்டது. மும்பை சி.பி.அய். சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கை நடத்திய நீதிபதி மாற்றப்பட்டதைத் தொடர்ந்து சிறப்பு நீதிபதி பி.எச்.லோயா தலைமையேற்று வழக்கை விசாரித்து வந்தார். பல ஆண்டுகளாக நடைபெற்ற விசாரணையில் முறையாக ஆஜராகாமல் அமித்ஷா உள்ளிட்டோர் இழுத்தடித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 2014-ஆம் ஆண்டு நாக்பூரில் தனது நண்பர் வீட்டு நிகழ்ச்சிக்காகச் சென்ற நீதிபதி லோயா மரணமடைந்தார். அப்போது நீதிபதி லோயாவின் சகோதரி அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கடந்த 2017-ஆம் ஆண்டு 'தி கேரவன்' இதழுக்குப் பேட்டியளித்தார்.


அதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாகப் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர். அந்த பொதுநல வழக்கை கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி அன்று நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதி கன்வில்கர் ஆகிய மூவர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது.


அதே போல் டில்லி கலவரத்திற்குக் காரணமானவர்கள், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல முக்கிய பாஜக தலைவர்கள் தான் என்பது காணொலி வாயிலாகத் தெளிவாகத் தெரிகிறது. "டில்லி காவல்துறை இந்த காணொலியின் கீழ் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? உடனடியாக வழக்குப் பதிவு செய்து பாஜக தலைவர்களை கைது செய்து  24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்திற்கு முழு அறிக்கையை சமர்பிக்கவேண்டும்" என்று கெடு விதித்தார் நீதிபதி முரளிதரன். ஆனால்  அவர் உத்தரவிட்ட 7 மணி நேரத்திற்குள் அவரை டில்லி நீதிமன்றத்தில் இருந்து மாற்றல் செய்து பஞ்சாப் - அரியானா மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றியது மத்திய அரசு.


இவர்களின் ஆட்சியின் போதுதான் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ஆம் தேதி இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக பணியில் உள்ள உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன், ஜோசப், மதன் பி.லோகூர், ரஞ்சன்கோகோய் ஆகியோர் டில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டி அளித்தனர்.


அப்போது உச்சநீதிமன்றத்தின் நிர்வாகம் கடந்த சில மாதங்களாக சரியில்லை என மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் குற்றம்சாட்டினார். தாங்கள் பேசவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும்,  உச்சநீதிமன்றத்தை பாதுகாக்க தாங்கள் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தன என்றும் தெரிவித்தார்.


கடந்த சில மாதங்களாக உச்சநீதிமன்றத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இதே நிலை நீடித்தால் இந்தியாவில் ஜனநாயகம் நிலைக்காது என்றும்,  நீதித்துறைக்கு மூத்த நீதிபதிகளான நாங்களே பொறுப்பு என்றும், தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியும் பயன் இல்லை என்றும் அவர் தனது வருத்தத்தையும் தெரிவித்தார்.


பொதுவாக தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்புகளைச் சிதைத்துவிட்டது மோடி அரசு என்ற குற்றச்சாட்டு பரவலாகவே உள்ளது. அதில் நீதிமன்றமும் தப்பவில்லையோ என்ற சந்தேகம் ஏற்படுவது நல்லது தானா என்று மத்திய அரசு சிந்திக்க வேண்டும்.



No comments:

Post a Comment