கொலைகாரர்கள் தயாரிக்கப்படுகிறார்களா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, February 4, 2020

கொலைகாரர்கள் தயாரிக்கப்படுகிறார்களா

 


குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராடி நாட்டை பிரிக்கும் மக்களை இப்படித்தான் சுட்டு தள்ள வேண்டும் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் சங்கீத் சோம் தெரிவித்துள்ளார். இவர் முசாபர்நகர் கலவரத்தில் இஸ்லாமியர் களின் வீடுகளை கொளுத்தியவர் என்று குற்றஞ்சாட்டப் பட்டவர் ஆவார். டில்லி ஜாமியா மிலியா துப்பாக்கிச் சூடு நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டில்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக அமைதியாக கடந்த சில மாதங்களாக போராட்டம் நடந்து வருகிறது.


இந்தப் போராட்டத்தில் ராம் பகத் கோபால்சர்மா  என்பவர் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினார். பின்பக்கம் காவலர்கள் இருப்பது தெரிந்தும் அவர் மக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினார். அவர் இப்படி துப்பாக்கியால் சுட்டதில் ஒரு கல்லூரி மாணவர் கையில் காயம் அடைந்தார்.


இந்த நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு குறித்து பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் மிக மோசமான கருத்து ஒன்றைத் தெரிவித்து உள்ளார். பாஜக எம்எல்ஏ சங்கீத் சோம் தெரிவித் துள்ள கருத்தில், "இந்தியாவில் நடக்கும் போராட்டங்கள்தான் இது போன்ற துப்பாக்கிச் சூடுகளுக்கு காரணம். இவர்கள்தான் மக்களைத் தூண்டி விடுகிறார்கள். இந்தத் துப்பாக்கிச் சூட்டை நான் கண்டிக்க மாட்டேன். இவர்களை இப்படித்தான் சுட்டுத் தள்ள வேண்டும்.


டில்லி ஷாகீன் பாக் பகுதியில் போராடும் பெண்களுக்கு வேலை எதுவும் இல்லை. அவர்கள் தங்கள் வீட்டில் எதுவும் சமைப்பது இல்லை. ஆனால் அவர்கள் தினமும் போராடு கிறார்கள். அவர்களுக்கு எங்கிருந்தோ பணம் வருகிறது. இல்லையென்றால் அவர்கள் இப்படிப் போராட்டம் செய்து கொண்டு இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு யாரோ பின்னிருந்து உதவுகிறார்கள். அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.


இந்தியாவைத் துண்டாடும் வகையில் இது போன்ற போராட்டங்கள் நடக்கின்றன. இது போன்ற போராட்டங்களை ஏற்கக் கூடாது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் இந்தியாவை உடைக்க வேண்டும் என்று திட்டமிட்டு வருகிறார்கள். அவர்களை எல்லாம் சுட்டுக் கொல்ல வேண்டும். நடு ரோட்டில் மக்கள் முன்னிலையில் அவர்களைப் போன்றவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும். அப்போதுதான் இது போன்ற போராட்டங்களைக் கட்டுப்படுத்த முடியும்" என்று சங்கீத் சோம் குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக பாஜக மூத்த தலைவர்கள் அனுராக் தாக்கூர், கபில் மிஸ்ரா, பர்வேஷ் வெர்மா ஆகியோரும் இதேபோல் கருத்தைத் தெரிவித்து இருந்தனர். அதில் அனுராக் தாக்கூர் போராட்டக்காரர்களை சுட்டுக் கொலை செய்ய வேண்டும் என்றார். கபில் மிஸ்ராவும், இதேபோல் ஷகீன் பாக் மிகச் சிறிய பாகிஸ்தான். அங்கு போராடும் மக்களை அடித்து விரட்ட வேண்டும். அவர்கள் எல்லோரும் தீவிரவாதிகள் என்று குறிப் பிட்டார்.பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா, "ஷாகீன் பாக் பகுதியில் போராடும் எல்லோரும் குற்றவாளிகள்.  அங்கிருக்கும் மக்கள் எல்லோரும் தீவிரவாதிகள். அவர்கள் உங்கள் வீட்டிற்கு உள்ளே வருவார்கள். உங்கள் தங்கைகள், மனைவிகளை வன்புணர்வு செய்வார்கள்" என்றார். இந்த நிலையில் டில்லி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது என்று தடை விதிக்கப்பட்ட கபில் மிஸ்ரா ஊடகவியலாளர்களைச் சந்தித்து கூறியதாவது, போராடுபவர்கள் இப்படித்தான் பயப்பட வேண் டும். உங்களின் வயிறு எரிவதை எங்களால் பார்க்க முடிகிறது, என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த ஆணவமான பேச்சு பலரையும் கடும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. ஒரு தேர் தலில் போட்டியிடும் வேட்பாளர், மாபெரும் மக்கள் போராட் டத்தைக் குறித்து இப்படியா பேசுவது. இதை ஏற்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளனர்.


டில்லி ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள்மீது துப் பாக்கிச் சூடு நடத்திய ஆசாமி திடீரென்று இந்தக் கொடூரத்தைச் செய்யவில்லை, ஒரு வாரமாகவே திட்டமிட்டுள்ளான். துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன் தான் செய்யப் போகும் காரியத்தை முகநூலிலும் பதிவிட்டுள்ளான் என்றால், எத் தகைய மூர்க்கத்தனம். துப்பாக்கியால் சுடும்போது என் உயிருக்குக் கேடு ஏற்பட்டால் என் உடலை காவித் துணியால் போர்த்தி ராம பஜனைப் பாடுங்கள் என்று கூறியுள்ளான்.


இதுவரை நான்கு துப்பாக்கிச் சூடுகள் இங்கு திட்டமிட்டு நடந்துள்ளன.


காவி வெறியர்கள் இளைஞர்களை எப்படியெல்லாம் தயார் செய்து வைத்துள்ளார்கள் என்பது புரியவில்லையா? இந்தப் போக்கு மிகவும் ஆபத்தானது. பொது மக்கள் விழிப் படைய வேண்டும்.


No comments:

Post a Comment