குஜராத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஷாதி டாட் காம் என்னும் இணையதளத்தை நடத்திவருகிறது. இந்த இணையதளம் அயல்நாடுகளில் வாழும் இந்தியர்களுக்கு தங்களுக்குத் தேவையான மணமகனையோ, மணமகளையோ தேடப் பெரிதும் உதவி புரிவதாகவும், இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலிய நாடுகளில் அதிகம் வசிக்கும் இந்தியர்களுக்கு மிகவும் உதவிகரமான ஒன்றாக இருப்பதாகவும் விளம்பரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் ஷாதி மேளா (திருமணம் வைபவம்) என்ற ஒரு நிகழ்வைத் துவங்க இருப்பதாக இந்த இணைய தளத்தை இயக்கும் நிறுவனம் அறிவித்தது. இதற்காக லண்டனில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.
இதற்காக அவர்கள் தொடங்கிய புதிய இணையதளத்தில் பார்ப்பனர்கள் என்ற பிரிவில் தாழ்த்தப்பட்ட மற்றும் இதர 'சூத்திர' ஜாதிகள் அவர்கள் தேடும் பட்டியலில் வராது, தாழ்த்தப்பட்ட மற்றும் 'சூத்திரர்' என்ற பிரிவில் பார்ப்பனர் மற்றும் இதர உயர்ஜாதியினர் பட்டியல் வராது. இங்கிலாந்தில் உள்ள ஒரு பார்ப்பனர் தனக்கான இணையரைப் பார்க்க இந்த இணையதளத்திற்குச் சென்று தேடினால் அந்த இணையதளத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் இதர 'சூத்திர' ஜாதிப்பட்டியல் மறைக்கப்பட்டு அவருக்குத் தேவையான பார்ப்பன மற்றும் உயர்ஜாதியினரைப் பற்றிய விவரம் மட்டுமே காணப்பட்டது. அதிலிருந்து அவர் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அதே போல் தாழ்த்தப்பட்ட பிரிவைச்சேர்ந்த ஒருவர் தனக்கான இணையரைத் தேடும் போது அதில் பார்ப்பனர் மற்றும் இதர உயர்ஜாதிப் பிரிவினர் பற்றிய விவரம் இல்லை. இதை அவர்கள் விளம்பரத்திலேயே தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில் இந்த ஜாதியப் பாகுபாட்டைக் கண்டித்து இங்கிலாந்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதனால், இனப்பாகுபாடு, நிறப்பாகுபாடு, மற்றும் மதப் பாகுபாடு தொடர்பான சட்டவிரோதப் பிரிவில் 2010-ஆம் ஆண்டில் இந்தியாவில் மட்டுமே உள்ள ஜாதியப்பாகுபாடும் சட்டவிரோதம் என்று சேர்க்கப்பட்டது. இதன் படி இங்கி லாந்தில் ஜாதியப் பாகுபாடுகளை அங்கு உள்ள இந்தியர்கள் காட்டுவது சட்டப்படி குற்றமாகும்.
இது தொடர்பாக இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் 'சண்டே டைம்ஸ்' என்ற இதழில் இந்த இணையதளத்தில் காணப்படும். ஜாதியப் பாகுபாட்டைக் கண்டித்து வழக்குத் தொடர்ந்த வழக்குரைஞர் கூறியதாவது, "இங்கிலாந்தில் நிறப்பாகுபாடு, இனப்பகுபாடு, மதரீதியிலான பாகுபாடுகள் மற்றும் இந்தியாவில் மட்டுமே உள்ள ஜாதியப்பாகுபாடுகள் சட்டத்தின் முன்பு விரோதமானவை ஆகும். இந்த நிலையில் ஷாதி டாட் காம் என்ற இணையதளம் இங்கிலாந்தில் இணையர் தேடும் நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக ஜாதிய ரீதியில் விளம்பரப்படுத்தி வருகிறது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம். இந்த வழக்கை விசாரித்த இங்கிலாந்து உச்சநீதிமன்றம் இது சட்டவிரோதம் என்று தெரிவித்துள்ளது" என்றார்.
இது இங்கிலாந்து நீதிமன்றத் தீர்ப்புப் பட்டியலில் முக்கியமான தீர்ப்பு என்று முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஷாதி டாட் காம் இணையதள செய்தித் தொடர்பாளர்கள் "இந்தியாவில் இது சட்ட விதிமீறல் அல்ல, இந்த இணையதளம் இந்தியாவில் இருந்து இயங்குகிறது, ஆகவே அதே பாணியில்தான் இங்கிலாந்திலும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. நாங்கள் இங்கிலாந்தின் சட்டவிதிமீறலில் ஈடுபடவில்லை. இது தொடர்பாக நாங்கள் எங்கள் தரப்பு விளக்கத்தை நீதி மன்றத்தில் அளித்துள்ளோம்" என்று தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தில் ஷாதி டாட் காம் தொடர்பான விளம்பரப் பதாகைகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. ஆனால் இணையதளத்தில் ஜாதியப் பாகுபாடுப்படியே விளம்பரம் உள்ளது. இங்கிலாந்தில் வசிக்கும் இந்தியர்களில் உயர் ஜாதியினர் ஜாதியப் பாகுபாட்டைக் கடைப்பிடிக்கின்றனர் ஆகவே ஜாதியப் பாகுபாட்டை சட்டரீதியாக விசாரணை செய்ய தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்று
2018-ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஜாதியப்பாகுபாட்டை கண்காணிக்கும் அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன.
இந்தியர்கள் என்றால் அவர்களின் குருதியில் ஜாதிய உணர்வு குத்திட்டு நிற்கவே செய்யும். இந்தியாவில் சிரிப்பாய்ச் சிரிப்பது போதாது என்று இங்கிலாந்து வரை துருநாற்றம் வீச வேண்டுமா?
ஹிந்து மதம் என்றாலே பேதம் - பிரிவினை - வெறுப்பு - ஆதிக்கம் - ஆணவம் என்றுதானே பொருள்!
No comments:
Post a Comment