இந்த நிலையில் ‘நீட்'டுக்கு விலக்குக் கோரி மீண்டும் சட்டமன்றத்தில் மசோதாவை நிறைவேற்றவேண்டும்!
கல்வி மத்திய - மாநில அரசுகளுக்குப் பொதுவாக ஒத்திசைவுப் பட்டியலில் உள்ள நிலையில், ‘நீட்'டுக்கு விலக்குக் கோரி இரு மசோதாக்களை தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றியது போலவே, மீண்டும் அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்போடு தமிழ்நாடு சட்டப்பேரவையில் மசோதாவை நிறை வேற்ற தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தமிழக அரசு, ஆரம்பக் கல்வி பயிலும் 5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்பு மாணவர் களுக்குப் பொதுத் தேர்வு என்பதை ரத்து செய்து அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. காலந்தாழ்ந்த முடிவுதான் - இடையிடையே எத்தனைக் குழப்பமான அறிவிப்புகள் கல்வி அமைச்சரால்.
கட்சியின் கொள்கை என்ன என்பதை
எண்ணிப் பார்க்கவேண்டாமா?
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு (குறள் 467)
தமிழ்நாடு அமைச்சர்களும் தங்கள் சார்ந்த கட்சியின் கொள்கை என்ன? மாநிலங்களின் உரிமைகள், மக்களின் அடிப்படை உரிமைகளை - மத்திய அரசின் ‘தடாலடி' சட்டங்கள் கூறினாலும், அர சமைப்புச் சட்டம் மாநிலங்களுக்கு அளித்துள்ள உரிமைகளைப் பறிபோக விடக்கூடாது என்று உணர வேண்டாமா?
டில்லியுடன் உறவுக்குக் கைகொடுப்பது வேறு;
ஆனால், உரிமைக்குக் குரல் கொடுக்கத் தயங்கக் கூடாது.
எடுத்துக்காட்டாக, ‘நீட்' தேர்வுக்கான விலக்குக் கோரிய இரண்டு சட்டங்களை மாநில சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பி யதை (குடியரசுத் தலைவர்) மத்திய அரசு ஏன் நிராகரிக்கவேண்டும்? என்ன காரணம் என்பதை அப்போதே கேட்டு உரிமைக் குரலை, எதிர்ப்பைப் பதிவு செய்திருக்க லாமே!
மூடி மறைத்தது ஏன், ஏன்?
ஏன் தமிழ்நாடு அரசு டில்லியிலிருந்து வந்த தகவலைக் கூட சட்டமன்றத்தில் வைக்காது, மூடி மறைக்கவேண்டும்?
சென்னை உயர்நீதிமன்ற வழக்கு விசாரணைமூலம் அல்லவா பல மாதங்கள் கழித்து - டில்லி நிராகரித்துவிட்டது என்ற தகவல் தெரிய வந்தது!
இதைவிட சமூக அநீதி வேறு என்ன இருக்க முடியும்?
செல்வி ஜெயலலிதா அவர்கள் முதல மைச்சராக இருந்தபோது, முதலாண்டு இதே ‘நீட்' தேர்வுக்கு எப்படி தமிழ்நாட்டிற்கு விதிவிலக்கு வாங்க முடிந்தது?
புதுச்சேரி ஜிப்மர் போன்ற மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கு ‘நீட்' தேர்விலிருந்து விதிவிலக்குகள் உள்ளதே அது எப்படி சாத்தியமாகியது?
‘நீட்' என்னும் அச்சுறுத்தும் ‘‘பேய்!''
‘நீட்' தேர்வு காரணமாக கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் டாக்டராகும் கனவு நிர்மூலமாக்கப்பட்டு வருகிறது!
‘அரியலூர் அனிதா'க்களிலிருந்து நெல்லை தனலட்சுமி வரை இதுவரை நம் மாணவச் செல்வங்கள் 9 பேரை இழந் துள்ளோமே! தற்கொலை செய்துகொண்டு மாண்டுள்ள கொடுமையை என் சொல்ல!
எம்.பி.பி.எஸ். படித்தவுடன் மேல் படிப்புக்கும்கூட செல்ல முடியாதபடி, தேர்வு, தேர்வு, தேர்வு என்பதுதானா, நம் மாணவர்களை அச்சுறுத்தும் ‘‘பேய்'' ஆகி நிற்பது?
தமிழ்நாடு அரசு ‘நீட்' தேர்வை எதிர்ப் பதற்கு சட்ட ரீதியாகவும், நியாயப்படியும் அநேக வலிமையான காரணங்கள் உண்டு.
உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு?
உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு என்ன வென்பதை - வேலூர் சி.எம்.சி. மருத்துவ மனை வழக்கில் ‘நீட்' தேர்வுபற்றி இரண்டு பார்ப்பன நீதிபதிகள், ‘‘நீட் தேர்வில் பின்வாங்கும் பிரச்சினையே கிடையாது'' என்று தங்கள் வரம்பை மீறி கூறியிருப்பது வேதனைக்குரியதாகும்!
மாநிலக் கல்வி உரிமை இன்னமும் ஒத்திசைவுப் பட்டியலில்தான் (கன்கரண்ட் லிஸ்ட்) உள்ளது; யூனியன் பட்டியலில் அல்ல. அதை வலியுறுத்துவதோடு,
அரசின் சட்ட விரோதம்
மாநில அரசு அதன் கல்வி உரிமைகளை ஏன் மத்திய அரசின் அரசமைப்புச் சட்ட விரோதமான ஒன்றை நாடு முழுவதும் ஒரே தேர்வு என்பதை ஏற்க வேண்டும்?
தேர்வு நடத்த மெடிக்கல் கவுன்சிலின் ஒரு அங்கத்திற்கு உரிமையே இல்லை. அது இந்திய அரசமைப்புச் சட்டப்படி பல்கலைக் கழகங்களின் அதிகாரத்திற்குட்பட்டது. இது அரசமைப்புச் சட்ட நிபுணர்களின் கருத்து. ஏன் உச்சநீதிமன்றம்கூட அப்படி சொன் னதே!
இதே உச்சநீதிமன்றம் முன்பு நுழைவுத் தேர்வு கூடாது என்றுதானே சொன்னது!
அரசு செய்ய வேண்டியது என்ன?
இதுபற்றி 5 மற்றும் 8 ஆம் வகுப்பு களுக்குப் பொதுத் தேர்வு என்ற மத்திய கல்வித் திட்டத்தின் அம்சத்தை ஏற்க மறுத்த புதுவை அரசு போல, தெளிவாக மத்திய அரசை வலியுறுத்தி, முன்பு ‘நீட்' விதிவிலக்குக்காக, விதிவிலக்குக் கோரிய அதே மசோதாவை மீண்டும் - எதிர்க் கட்சிகளின் ஒத்துழைப்போடு நிறைவேற்றி அனுப்பவேண்டும்.
மத்திய ஆளுங்கட்சிக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் கண்ணை மூடிக் கொண்டு அ.தி.மு.க.வினர் கைதூக்கும் கைகாட்டிகளாக மாறுவதை நிறுத்தவேண் டும்.
‘‘அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகருமே!''
21 ஆண்டுகால நுழைவுத் தேர்வு, எதிர்ப்பினால் நீக்கப்படவில்லையா? திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் அதனை சாதித்தன என்பதை மறவாதீர்!
‘நீட்' வேண்டவே வேண்டாம்!
உயிர்ப் பலிகள் தொடரவும் வேண்டாம்!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
5.2.2020
No comments:
Post a Comment