‘‘திறனறி கேள்விகள்'' எனும் மற்றொரு பேரிடியை இறக்காதே!
‘நீட்'டின் கொடூரத்தால் இந்தியாவில் மருத்துவக் கல்வி கிடைக்காது என்ற நிலையில், சீனாவுக்குச் சென்று படிக்கும் மாணவர்கள் ‘கரோனா' வைரஸ் நோயின் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டி, ‘நீட்'டினால் ஏற்படும் பெரும் முட்டுக்கட்டையை தூக்கி எறியுமாறு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
கடந்த மாதம் (ஜனவரி, 2020) 20 ஆம் தேதி 25 தோழர்களுடனும், பேச்சாளர்களுமாக நாங்கள் நாடு தழுவிய அளவில் பரப்புரை பெரும் பயணம் மேற்கொண்டோம்.
‘நீட்' தேர்வு எதிர்ப்பு, ஆரம்ப உயர்நிலைப் பள்ளிகளில் 5 ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு, 8 ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு என்று மாண வர்களை வெறும் தேர்வுக்கான ஆயத்தவாதிகளாக மட்டுமே ஆக்கி, உண்மையான கற்றலை - அடிப் படை கல்வி அறிவுபற்றி கவலைப்படாத, பய முறுத்தும் மத்திய பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ். அரசின் புதியக் கல்விக் கொள்கை என்ற நவீன குலதர்மக் கல்வி திட்டத்தினை தமிழ்நாட்டில் புகுத்தும் கொடுமையை எதிர்த்தே அந்த தொடர் பிரச்சாரம்!
பல்லாயிரக்கணக்கான மக்கள் சந்திப்பு
குமரிமுனை - திருத்தணி - பிறகு சென்னையில் நிறைவு என்ற நிலையில், பல்லாயிரக்கணக்கில் மக்களைச் சந்தித்து, மக்களுக்கு இவைகளால் ஏற்படும் ஆபத்து - பேரபாயம் குறித்து எடுத்து ஆதாரப்பூர்வமாக விளக்கினோம்.
கட்சி, ஜாதி, மத வேறுபாடு இல்லாமல் பெற் றோர்கள் - தாய்மார்கள் திரண்டு வந்து செவி மடுத்தனர். (எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில்) பிற்படுத்தப்பட்டோருக்கு 9000 ரூபாய் ஆண்டு வருமான வரம்பு அரசு ஆணை அமல்படுத்தியதை எதிர்த்து இப்படித்தான் சூறாவளி சுற்றுப்பயணப் பிரச்சாரத்தை நாங்கள் செய்ததோடு, போராட் டமும் நடத்தி, அந்த ஆணையின் நகலைக் கொளுத்தி, சாம்பலை கோட்டைக்கு அனுப்பி னோம். அதன் விளைவை காலந்தாழ்ந்து உணர்ந்த அன்றைய முதல்வர் ஆரியத்திற்குத் தான் அம் பானது தவறு என்று உணர்ந்து, பின்வாங்கியதோடு, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை 31 சத விகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக்கி நற்பெயர் எடுத்தார்!
இன்று ‘அண்ணா' பெயரைச் சொல்லி, ‘‘அம்மா ஆட்சி'' என்று கூறி, மத்திய அரசுக்கு, மாநில அரசு ஏதோ ஒரு அடிமைச் சேவகம் செய்யும் அரசு போல் (இதற்கென்ன காரணம் - மக்களுக்குத் தெளிவாய்ப் புரிகிறது) மத்திய அரசு அமல் படுத்துவதற்கு முன்பே, இவர்கள் ‘‘ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசிகளாய்'' செயல்படுவது, மாநில உரிமைகளை அடகு வைத்த பழிக்கு ஆளாகும் ஒரு நிலைப்பாடு.
ஜெயலலிதா எப்படி நடந்துகொண்டார்?
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில்கூட இப்படி டில்லிக்கு கொத்தடிமைச் சேவகம் செய்து யாரும் பார்த்ததில்லை. அவர் அந்த மாநில உரிமை களைக் காத்து ஒரு வீராங்கனையாகவே ஆட்சி புரிந்தார்!
நாம் மேற்கொண்டிருக்கும் இந்த ‘நீட்' தேர்வு ஒழிப்பு அறப்போர், 5 ஆவது, 8 ஆவது வகுப் புக்கான பொதுத் தேர்வு என்று இளந்தளிர்களை - கருகிய மொட்டுகளாக்கிடும் கொடுமை ஒழிப்புபற்றி இன்று ‘இந்து தமிழ் திசை' நாளேடு எழுதியுள்ள தலையங்கத்தையாவது நமது முதலமைச்சரும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் படித்து செயல்பட்டால், அவர் களுக்கு ஏற்படும் வரலாற்றுப் பழியிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளவாவது முடியும்!
அதுமட்டுமா!
ஒரு மருத்துவக் கல்வி பேராசிரியர் ‘நீட்' தேர்வு பாதிப்புக் கொடுமைகள்பற்றி எழுதியுள்ள கடிதத்தையும் படிக்கட்டும். (கடிதம் தனியே காண்க)
சீனாவின் கரோனா வைரசும் -
நீட் தேர்வும்!
உலகையே அச்சுறுத்தும் சீனாவின் கரோனா வைரஸ் - உயிர்க்கொல்லியாக ‘விஸ்வரூபம்' எடுத்துள்ள அந்த நோய், இங்கே நடக்கும் நீட் தேர்வுக் கொடுமையிலிருந்து தப்பி, சீனாவிற்குச் சென்று மருத்துவப் படிப்புக்குப் போன நம் பிள்ளைகளும் அச்சுறுத்தலுக்கு ஆளாகி, நாடு தழுவிய அளவில் உயிருக்குப் போராடும் செய்திகள் வந்து கொண்டுள்ளன!
நீட் தேர்வினால் இங்கே தற்கொலை - சீனாவுக்குப் போன நம் இளம் மாணவர்களின் உயிர்க்கும் அறைகூவல்!
என்னே அவலம்!
இவ்வளவும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., மனுதர்ம கல்வித் திட்டமாக்கிடவும், நாடு முழுவதும் ஒரே தேர்வு என்று மருத்துவக் கல்வியை மத்திய அரசு ஏகபோகமாக்கி, அடிக்கட்டு மான பஞ்சத்தால், மருத் துவக் கல்லூரி, மருத்துவ மனை நடத்த நிதியில்லை; ஆகவே, தனியார், அரசு மருத்துவமனைகளை எடுத்து நிர்வகிப்பார்கள் என்று (நிதியமைச்சரின் பட்ஜெட் அறிவிப்பு) ஒரு புதுக்குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளனர்.
‘பீம் சிங், இதென்ன புதுக்குழப்பம்?' என்று கலைஞர் எழுதிய திரைப்பட வசனம்போல் ஆக்கியுள்ளது!
புதுவை அரசைப் பாரீர்!
மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தின் அதிக அதிகாரமில்லாத புதுச்சேரியில்கூட திரு.நாராயணசாமி அவர்கள் முதலமைச்சராக உள்ள காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி ஆட்சி, 5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு களை நடத்தமாட்டோம் என்று அறிவித்துவிட்டது. தமிழ்நாடு அரசுக்கு என்ன அவசர கதி?
யாருடைய தூண்டல் இதற்குப் பின்னணி?
‘கடிமான கேள்வி இருக்காது - யாரையும் ஃபெயிலாக்க மாட்டோம்'' என்று வாக்குறுதி கொடுக்கிறார்களே, பிறகு ஏன் தேர்வு?
தேர்வு நடத்துவதன் உண்மைத் தத்துவத்திற்கே எதிரானவை இந்த வாக்குறுதிகள்.
அப்படிக் கூறும்போது பொதுத் தேர்வு ஏன்? யாரைத் திருப்தி செய்ய?
இடைநிற்றல், அச்சுறுத்தல், அதில் கிராமப் பிள்ளைகளின் மன அழுத்தம் - பயம், வெறுப்பு, மேலே படிக்க அவர்களை ஊக்கப்படுத்துமா?
திறனறி கேள்விகள் எனும்
மற்றொரு மரண அடி!
கல்வியில் ஒன்றன் பின் ஒன்றாக, ஒடுக்கப்பட்ட மக்களைத் துரத்தியடிக்கும் வன்கொடுமை போதாது என்று இப்பொழுது இன்னொரு புதிய அதிர்ச்சிக்குரிய அறிவிப்பையும் தமிழ்நாடு கல்வித் துறை கொடுத்துள்ளது!
10 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வில் ‘‘திறனறி கேள்வி'' என்ற பெயரில் 40 விழுக்காடு மதிப் பெண்களுக்கு பாடத் திட்டத்திற்கு அப்பாற்பட்டு கேள்விகள் இடம்பெறுமாம் (‘இந்து தமிழ் திசை', 3.2.2020, பக்கம் 3).
பொதுத் தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் சூழ்நிலையில், இப்படியொரு இடியை மாணவர்கள் தலையில் இறக்கியுள்ளது நியாயமா? கண்டனத்திற்குரியதல்லவா?
ஏற்கெனவே பாடத் திட்டங்கள் கடுமையாக இருக்கும் ஒரு சூழலில், பாடத் திட்டங்களுக்கு வெளியே மாணவர்கள் படிப்பது நடைமுறை சாத்தியமா?
பள்ளிப் படிப்பைத் தாண்டி மேலே படிக்கக் கூடாது என்ற மனுவின் திட்டமா? 2017 ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி, 22.13 விழுக்காடு மாணவர்கள் இடைநிற்றலுக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழ்நாட்டில் கல்வியில் பார்ப்பன மேலாண்மைச் சிந்தனையும், திட்டங்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி என்னும் தலை யைச் சீவும் கொடுவாளாக மாறிவிட்டது. உடனடி யாக இது பின்வாங்கப்பட வேண்டும்! பின் வாங்கப்படவேண்டும்!!
வீண் பிடிவாதம் வேண்டாம்!
எனவே, இதில் வீண் பிடிவாதம் பிடிக்காமல், இந்தத் தவறான முடிவைக் கைவிட்டு, அண்ணா பல்கலைக் கழகம் போன்ற பெயர் பெற்ற பல்கலைக் கழகத்தைப் பிளந்து, மத்திய அரசுக்குத் ‘தாரை வார்க்கும்' தறிகெட்ட செயலை கைவிட்டு, ‘கல்வியிற் சிறந்த தமிழ்நாடு' என்ற பெயருக்கு மாசு ஏற்படுத்தாமல், கல்விக்கான கண்ணி வெடிகளை அகற்றி, எஞ்சிய காலத்தை நடத் தட்டும் அ.தி.மு.க. அரசு!
இன்றேல், மக்களின் கடும் எதிர்ப்பு என்ற விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்!
கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
4.2.2020
No comments:
Post a Comment