மூளையைப் பிடித்த கிரகணம் நீங்குவதுதான் உண்மை விடுதலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, December 26, 2019

மூளையைப் பிடித்த கிரகணம் நீங்குவதுதான் உண்மை விடுதலை



சூரிய கிரகணம் என்பது இயற்கை யில் நிகழக்கூடிய ஒன்றே! இதில் மூடநம்பிக்கையைப் பரப்பி வருகிறார் கள். இந்திய அரசமைப்புச் சட்டம் 51-ஏ மக்களிடத்திலே விஞ்ஞான மனப்பான் மையை வளர்க்கவேண்டும் - இது ஒவ்வொரு குடிமகனின் கடமை என் கிறது - அந்தக் கடமையை திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் செய்து கொண்டிருக்கிறது என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:


கிரகணங்கள் (eclipses) என்பவை சூரியன் - பூமி - சந்திரன் ஆகியவை - பூமி, சூரியனை சுற்றி வரும்போது - ஒரே நேர்கோட்டில் வரும்போது ஏற்படும் மறைப்புகள் ஆகும்; குறிப்பிட்ட நேரத் திற்குப் பிறகு அது விலகிவிடும்; வழக்கம் போன்ற வெளிச்சம் பூமியில் உள்ளோ ருக்குக் கிடைக்கும்.


இதை அறிவியலில் - விஞ்ஞான வகுப் பில் நமது மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தாலும்கூட தேவையற்ற புராண மூடநம்பிக்கைக் குப்பைகளையும் நமது மாணவர்கள், இளம்பிஞ்சுகள் உள்ளத்தில் அச்சுறுத்தும் வகையில், கற்பனைக் கட்டுக் கதைகளைப் பரப்பி, மூடநம்பிக்கைகளைப் பரப்பி, அதன் தோஷம் நீங்க, தர்ப்பைப் புல்லை, சட்டிப் பானை முதல் வீட்டில் எல்லா இடங்களிலும் போடவேண்டும்; பார்ப்பனப் புரோகிதர்களை அழைத்து ''கிரகண தோஷம்'' நீங்கிட மந்திரம் ஜபித்து, தானம் வழங்கவேண்டும் என்றும்,


கர்ப்பிணிப் பெண்கள் வெளியே வரக்கூடாதா?


அந்தக் கிரகணத்தில் பெண்கள் குறிப் பாக கர்ப்பிணிப் பெண்கள் - வெளியே வரக்கூடாதென்றும், இன்னும் பல மூட நம்பிக்கைகளை அடுக்கடுக்காய் மூளைக்கு விலங்கு போட்டு, நமது மூளையில் ஏற்றி வைத்துள்ளார்கள்.


கிரகணம்பற்றி விஞ்ஞான பாடம் எடுக்கும் ஆசிரியர்களே, வீட்டில் குளிப்பது, தர்ப்பைப் புல்லைப் போடுதல் முதலிய சடங்குகளுக்குள் சரணாகதி அடைவது மகாவெட்கக்கேடு! தந்தை பெரியார் கூறு வதுபோல், படிப்பிற்கும், பகுத்தறிவிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை; வெறும் தேர்வு - மதிப்பெண் படிப்பினால் காதொடிந்த ஊசி அளவுக்குக்கூடப் பயனில்லை!


'ராகு, கேது என்ற பாம்புகள்' விழுங்கு வதுதான் புராணக் கதை!


அதுமட்டுமா?


சூரியனுக்குக் குழந்தை பிறக்குமா?


சூரியனுக்கும், குந்திதேவிக்கும் பிறந்த குழந்தைதான் கர்ணன் என்ற பாரத (பாதக) கதை.


சூரியனுக்கும், சந்திரனுக்கும் 27 பெண் டாட்டிகள் என்பது, சந்திரன் பெற்ற சாபத் தால்தான் தேய்பிறை - பிறகு வேண்டிக் கொண்டதால் வளர்பிறை என்ற  பூகோள அடிப்படை அறிவையே கெல்லி எறியும் விஞ்ஞானத்திற்கு எதிரான அஞ்ஞானக் கதைகள்!


படித்தவர்கள் பலர்கூட ஜோதிடத்தை நம்பி நாசமாகிறார்கள்; ஏடுகள் ராசி பலன், வார பலன், நாள் பலன் எல்லாவற்றிற்கும், ஆங்கில ஆண்டுக்கும் பிறந்த நாளை வைத்து, இந்த கிரக பலன் கூறுவது எவ்வளவு வேடிக்கையும், விந்தையும் நிறைந்தது! இதில் கூடுதல் வெட்கக்கேடு - கம்ப்யூட்டர் ஜோதிடமாம்!  அஞ்ஞானத்தை விஞ்ஞானத்தின்மூலம் பரப்பும் வெட்கக்கேடு!


வானியல் வேறு; ஜோதிடம் வேறு!


வானவியலை (Astronomy) பகுத்தறிவா ளர்களான நாங்கள்  முழுக்க முழுக்க ஏற் கிறோம். ஆனால், ஜோதிடம் என்ற Astrology  என்பது போலி விஞ்ஞானம் (Pseudoscience). 9 கிரகங்களா,8 கிரகங் களா? புதிய கிரகங்கள் ஏராளம் உள்ளனவே - அவற்றிற்கென்று ஜோதிடத்தில் இடம் இல்லையே! செவ்வாய்த் தோஷம் பேசி, அதை நம்பி பல பெண்களின் திருமண வாழ்க்கையைக்கூட இழந்து தற்கொலை வரை செல்லும் கொடுமை உள்ள நாட்டில், செவ்வாய்க் கோளில் நாம் ஏவிய ஏவுகணை ராக்கெட்டுகள் வெற்றிகரமாகத் திரும்பி னவே - அதுவும் ஒரு செவ்வாய்க்கிழமை யிலே - அதைக் கண்ட பிறகாவது, திருந்த வேண்டாமா? மூடநம்பிக்கை இருளிலி ருந்து பகுத்தறிவு வெளிச்சத்திற்கு வர வேண்டாமா?


அரசமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது?


நமது அரசமைப்புச் சட்டத்தின் 51-ஏ பிரிவு, குடிமக்களின் அடிப்படைக் கடமை களில் ஒன்றான,


அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல்,


கேள்வி கேட்டு ஆராயும் பண்பு, மனித நேயம், சீர்திருத்தம் இவைகளைப் பரப்ப கட்டளை இட்டுள்ளதே!


அதன்மீது பிரமாணம் எடுத்தவர்கள் பரப்புகிறார்களா? பகுத்தறிவாளர்களும், இடதுசாரிகளும், முற்போக்காளர்களும் தானே அதைச் செய்கிறார்கள். ஆட்சியா ளர்கள் இதை கேலிக் கூத்தாக்கி மூடநம் பிக்கையை முழு மூச்சுடன் பரப்பும் பணி யில் ஈடுபடுவது அரசமைப்புச் சட்ட பிர மாண உறுதிமொழிக்கு விரோதம் அல்லவா?


மூளைக் கிரகணம் நீங்கவேண்டும்


இவர்களைப் பிடித்த ''மூளைக் கிர கணம்'' எப்போது நீங்குமோ அப்போதுதான் உண்மை விடுதலை! விடுதலை!!


கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம்


சென்னை-26.12.2019


 









No comments:

Post a Comment