ஒரு நாளின் பெரும்பாலான நேரத்தில் நம்மில் பலரும் நாற்காலி, சோஃபா, மெத்தை போன்ற ஏதோ ஓர் இருக்கையில் உட்கார்ந்தே கழிக்கிறோம். இப்படி ஒரு நாளில் பெரும் பாலான நேரம் உட்கார்ந்தே இருப்பதும் நோய்தான். உட்கார்ந்திருப்பது எப்படி நோயாகும் என்று நாம் நினைக்கலாம்.
ஆனால், காலையிலிருந்து இரவு தூங்கும் வரை நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதை உடல் உழைப்பற்ற வாழ்க்கைமுறை என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். உடல்பருமன், இதய நோய், நீரிழிவு, மன அழுத்தம் ஆகிய பல்வேறு பிரச்சினைகளுக்கு இப்படி உட் கார்ந்தபடி இருப்பது வழிவகுப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக் கிறார்கள்.
இரண்டு மணி நேரம் சாப்பிடுவதற்கு, ஒரு மணி நேரம் பேருந்து, கார், ரயில் பயணத்துக்கு, அலுவலகத்தில் எட்டு மணிநேரம் கணினி பணிக்கு, மூன்றிலிருந்து அய்ந்து மணி நேரம் தொலைக்காட்சி பார்ப்பதற்கு, ஏழு மணி நேரம் தூக்கம் என்றே ஒரு நாளைக் கழிக்கிறோம். அப்படிப் பார்த்தால், ஒரு நாளின் 24 மணி நேரத்தில் 23 மணி நேரத்தை உடல் உழைப்பின்றிதாம் நாம் கழிக்கிறோம். ஒரு நாளில் மூன்று மணி நேரம் கால்களுக்கு வேலை கொடுப்பவர்கள் இப்போது மிகவும் குறைவு. ஒரு நாளில் ஒரு மணி நேரம் நடப் பவர்களைக்கூட விரல்விட்டு எண்ணி விட லாம்.
எழுந்து நடக்க வேண்டும்
சமீபகாலம் வரைகூட, மருத்துவ நிபுணர்கள் உட்கார்ந்திருக்கும் நோய்க்குத் தீர்வாக உடற்பயிற்சியையே கருதினர். ஆனால், தற்போதைய புதிய ஆராய்ச்சிகள் மாற்றுக்கருத்தை முன்வைக்கின்றன. ஒரு நாளில், ஒரு மணி நேரக் கடுமையான உடற்பயிற்சியைவிட ஒரு நாள் முழுவதும் ஏதோ வொரு வகையில் உடல் இயக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஆரோக்கிய மானது என்ற கருத்தை ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கின்றனர்.
சில தசாப்தங்களுக்கு முன்புவரைகூட, உடற்பயிற்சி என்ற ஒன்றுக்காகத் தனியாக நேரம் ஒதுக்க வேண்டிய அவசியமில்லாத சூழல் இருந்தது.
ஆனால், இப்போதைய வாழ்க்கை முறையில் ஒரு நாள் முழுவதும் உடல் இயக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் நிபுணர்கள்.
No comments:
Post a Comment