டிசம்பர் 24 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 24, 2019

டிசம்பர் 24

இந்நாள் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாள்! ஆம் இந்நாள் தந்தை பெரியார் மறைந்தநாள் (1973). 46 ஆண்டுகள் மறைந்தோடி விட்டன.


சூரியன் மறைவதில்லை. ஒரு பகுதியில் மறைந்தது போல தோன்றினாலும் இன்னொரு பகுதியில் அவன் ஒளியை உமிழ்ந்து கொண்டுதான் இருக்கிறான்.


பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் மறைந்தாலும் நாட்டில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் அவர்தம் கருத்தின் சாணையில் உரசித்தான் எழுகின்றன.


ஆதரவு நிலை எடுத்தாலும் சரி, எதிர் நிலை எடுத்தாலும் சரி, தந்தை பெரியார் அவர்களின் கருத்துகளை மய்யமிட்டே சுழலுகின்றன.


இது தமிழ்நாட்டின் பரப்பளவையும் கடந்து, வட மாநிலங் களிலும் வீறு கொண்டு முற்றுகையிடுகிறது. மாணவர்கள் மத்தியில், இளைஞர்கள் மத்தியில், ஒடுக்கப்பட்டவர்கள் மத்தியில் தந்தை பெரியார் போய்ச் சேர்ந்திருக்கிறார்.


குடியுரிமைத் திருத்தச் சட்டம் என்ற பாசிச சட்டம் பா.ஜ.க. என்ற பார்ப்பனீய ஆதிக்கம் சூள் கொண்ட கட்சியால் இயற்றப்பட்டது.


இது மக்களை மதங்கொண்டு தாக்கி விட்டது. தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் காரைக்கால் சி.மு. சிவம் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவில் உரையாற்றும் போது ஒன்றைக் கூர்மையாக வெளிப்படுத்தினார்.


மனிதனைப் பார் என்பது திராவிடம் - தந்தை பெரியார் கொள்கை. மதத்தைப் பார் என்பது ஆரியம் - பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸின் கொள்கை.


இதனைப் புரிந்து கொண்ட வட மாநிலங்களைச் சேர்ந்தோர், மாணவர்கள், ஒடுக்கப்பட்டோர் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் படங்களைப் பதாகைகளாகத் தாங்கிப் போர் முழக்கமிட்டு வருகின்றனர்.


"சாவர்க்கரும், திலகரும், சாமியார்களும் எங்களுக்குத் தேவையில்லை, எங்களுக்குத் தேவை தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், மகாத்மா ஜோதிபாபூலே, சாகுமகராஜ், நாராயணகுரு" என்று அவர்கள் படங் களைத் தோளில் தூக்கி மண்ணும், விண்ணும் அதிர ஒலி முழக்கம் செய்து வருவது  - நாடு ஒரு திருப்புமுனையை நோக்கிப் பயணிக்க முடிவு செய்து விட்டது என்பதற்கான விசாலமான அடையாளமாகும்.


2019இல் மக்களவைத் தேர்தல் முடிவுற்று உறுப்பினர்கள் பதவி ஏற்ற கால கட்டத்தில் நாடாளுமன்றத்தின் மக்களவையில் ஒரு புத்தொலி ஒலித்தது. அதுதான் "தந்தை பெரியார் வாழ்க?" "திராவிடம் வெல்க!" என்ற முழக்கங்கள் ஆகும்.


இதனைச் சற்றும் எதிர்பாராத வடபுல உறுப்பினர்களும், மதவாத பாசிச பிஜேபியைச் சேர்ந்த உறுப்பினர்களும் அதிர்ச்சியால் உறைந்து போனார்கள்.


சுதாரித்துக் கொண்டு 'ஜெய் சிறீராம்!' என்று அவர்கள் முழக்கமிட்ட போது மீண்டும் வேகமாக 'பெரியார் வாழ்க! என்ற முழக்கம் பேரிடியாக ஒலித்தது.


திமுக கொள்கைப் பரப்புப் செயலாளரும், மேனாள் மத்திய அமைச்சருமான மானமிகு ஆ. இராசா அவர்கள் எங்கள் சித்தாந்த பிதாமகன் தந்தை பெரியார் என்று கூறி, அவர்தம் சிந்தனை ஒளி முத்துகளை உரத்த குரலில் மக்களவையில் ஒலித்தபோது வடபுலம் மேலும்  அதிர்ச்சிக்கு ஆளாகி விட்டது.


ஆம், ஹிந்துத்துவா எனும் நோய்க்குக் கை கண்ட மாமருந்து - தந்தை பெரியாரின் தத்துவம்தான் என்று உணரப்படும் நிலை பூத்து விட்டது.


இராமன் என்றால் எதிர் தத்துவம் பெரியார் என்ற சித்தாந்தம், இந்தியாவுக்கான பொதுக் கொள்கையாக மணம் வீசப் போகிறது.


'மண்டைச் சுரப்பை உலகு தொழும்' என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் (1958). 61 ஆண்டுகளுக்கு முன் சொன்னார்; கவிஞன் கணிப்புப் பொய்க்கவில்லை என்பதற்கு அடையாளமாக உலகளாவிய அளவில் தந்தை பெரியார் பேசப்படுகிறார்.


2017இல் ஜெர்மனியிலும், 2019 செப்டம்பரில் அமெரிக்காவின் வாசிங்டனிலும் நடைபெற்ற உலகளாவிய மாநாடுகளும், அம்மாநாடுகளில் பங்கேற்ற பன்னாட்டு அறிஞர்களும், தந்தை பெரியார் பற்றியும், அவர்தம் தொலைநோக்குச் சிந்தனைகள் குறித்தும் எடுத்து வைத்த கருத்துகளும், காரணங்களும் உலகத் தலைவர் பெரியார் என்பதற்கான சாட்சியங்களாகி விட்டன.


உலகம் மதங்களால் அமைதியிழந்து தவிக்கிறது.  மதச் சண்டைகளால் மனித ரத்தம் வெள்ளமாகப் பாய்ந்து ஓடிக் கொண்டு இருக்கிறது.


தேவை "மதமற்ற உலகம்" "சமத்துவ உலகம்" என்ற உன்னத சிந்தனைகளை நோக்கி உந்தித் தள்ளப்படுகிறது. அந்த மதமற்ற பகுத்தறிவுச் சிந்தனைகளை, மனித நேயப் பார்வையினை சமூக பொருளாதார சமத்துவத்தை, பாலியல் சமநிலையை வாரி வழங்கும் வற்றா ஊற்றாக - உயர் எண்ணங்கள் மலரும் சோலையாகத் தந்தை பெரியார் ஒளி வீசுகிறார்.


அந்தத் தத்துவத்தை மேலும் பரப்பும் பணியில் ஒல்லும் வகையில் நம்மை நாம் ஒப்படைத்துக் கொள்வோம்! தமிழர் தலைவர் தலைமையில் அதனை நிறைவேற்றிட சூளுரைப்போம்!


தந்தை பெரியார் நினைவு நாள் சிந்தனை இஃதே!!



No comments:

Post a Comment